கோயம்புத்தூர்;
டாக்டர் அம்பேத்கர் கல்வி வேலைவாய்ப்பு பயிற்சி மையம் சார்பில் சென்னை மற்றும் மதுரை ஆகிய இரண்டு நகரங்களிலும் இரவுப் பள்ளிகளை உருவாக்குவது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.

அம்பேத்கர் பயிற்சி மையத்தின் மாநில அளவிலான மைய ஒருங்கிணைப்பாளர்கள் கூட்டம் கோவையில் செப்டம்பர் 2 அன்று நடைபெற்றது. ஜோன்ஸ் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் மையத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் க.சுவாமிநாதன், தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் துணைப் பொதுச் செயலாளர்கள் யு.கே.சிவஞானம் மற்றும் பாரதி அண்ணா, அம்பேத்கர் பயிற்சி மையத்தின் இணை ஒருங்கிணைப்பாளர்கள் கணேஷ் மற்றும் கோவிந்தராஜன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

புதிதாக துவங்கப்பட்ட பல மையங்கள் மற்றும் ஏற்கெனவே துவங்கிய மையங்களின் பணிகள் பற்றி இந்தக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. சமூக மற்றும் பொருளாதார ரீதியாக பின்தங்கிய பகுதிகளில் இரவுப் பள்ளிகளை துவக்குவது என்று இந்தக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. முதல் கட்டமாக சென்னை மற்றும் மதுரை மாநகரங்களில் இந்தப் பள்ளிகள் துவக்கப்படும்.
ஒருங்கிணைப்புப் பணிகளை மாநில அளவில் க.சுவாமிநாதன், கணேஷ், கோவிந்தராஜன் மற்றும் ஆர்.மகேஸ்வரன், அ.ராமலிங்கம், ஜோன்ஸ், சுரேஷ்குமார் மற்றும் ஜெய்சங்கர் ஆகியோர் மேற்கொள்வார்கள். ஆதார மையம் ஒன்றை மதுரையில் துவங்குவது, பத்தாம் மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு வழிகாட்டுவது, இணையதளத்தை உருவாக்குவது, பார்வையற்றோர் உள்ளிட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு வகுப்புகளை நடத்துவது உள்ளிட்ட பல்வேறு முடிவுகள் இந்தக் கூட்டத்தில் எடுக்கப்பட்டன.

Leave a Reply

You must be logged in to post a comment.