தீக்கதிர்

சமூக செயற்பாட்டாளர்கள் கைது விவகாரம் காவல்துறைக்கு நீதிமன்றம் கண்டிப்பு

நாடு முழுவதும் கடந்த செவ்வாய் கிழமை மகாராஷ்டிரா காவல்துறை இடதுசாரி அறிவுஜீவிகள் மற்றும் சமூக செயற்பாட்டாளர்களின் வீடுகளில் திடீரென சோதனை நடத்தியது. பின்னர்  சமூக செயற்பாட்டாளர்கள் வெர்னன் கோன்சால்வ்ஸ், அருண் பெரேரா, மனித உரிமை ஆர்வலர் கவுதம் நவலகா, இடதுசாரி எழுத்தாளர் வரவர ராவ், இடதுசாரி சிந்தனையாளர் வழக்கறிஞர் சுதா பரத்வாஜ் ஆகிய 5 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். பின்னர் சிறையில் அடைக்க நீதிமன்றத்தில் நிறுத்திய போது நீதிமன்றம் சிறையில் அடைக்க மறுத்ததோடு, வீட்டுகாவலில் வைக்க உத்தரவிட்டது.

காவல்துறையின் கைது நடவடிக்கைக்கு  நாடுமுழுவதும் கடும் கண்டனம் எழுந்தது. தொடர்ந்து உச்சநீதிமன்றதிலும் கைதை எதிர்த்து வழக்கு தொடரப்பட்டது. இந்நிலையில் அவசர அவசரமாக மகாராஷ்டிரா மாநில சட்ட ஒழுங்கு கூடுதல் ஐஜி பாராமபிர்சிங் செய்தியாளர்களை சந்தித்தார். அதில் கைது செய்யப்பட்ட அனைவரும் மாவோஸ்ட் தொடர்புடையவர்கள். மாநில அரசை கவிழ்க்க சதி செய்தனர் என கூறி பல்வேறு ஆவணங்களை காண்பித்தனர்.

இந்நிலையில் மும்பை உயர் நீதிமன்றத்தில் சதீஷ் காய்க்வாத் என்பவர் கோரேகான் பீமா வன்முறை விவகாரத்தில் காவல்துறை தவறாக என்னையும் இணைத்திருக்கின்றனர். எனவே புனே காவல்துறை விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும். சிபிஐ விசாரிக்க வேண்டும் என கேட்டு மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாணைக்கு ஏற்ற நீதிமன்றம் சமூக செயற்பாட்டாளர்கள் கைது தொடர்பான வழக்கு நீதிமன்ற விசாரணையில் உள்ள போது, காவல்துறை  எப்படி செய்தியாளர்களை சந்திக்கலாம். இவ்விவகாரத்தை உச்சநீதிமன்றம் விசாரணைக்கு எடுத்துள்ளது. இந்நிலையில் இந்த வழக்கு குறித்த  தகவல்களை வெளியிடுவது என்பது மிகவும் தவறானது, என நீதிமன்றம் காவல்துறையை கண்டித்தது. இதனை தொடர்ந்து  அரசு வழக்கறிஞர், மாநில காவல் துறையிடம் பேசுவதாகவும் ,பதிலை கேட்பதாகவும் தெரிவித்தார். இதையடுத்து வழக்கு விசாரணையை வரும் 7ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.