லக்னோ,

அனுமன் சாலிசாவை ஓதி வந்தால் குரங்குகள் நம்மை கடிக்காது’ என்று உத்தரபிரதேச முதல்வர் பொறுப்பற்ற வகையில் பேசி உள்ளார்.

கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு உத்தரப் பிரதேச மாநில சுற்றுலா துறை சார்பில் மதுரா அருகே உள்ள பிருந்தாவனம் பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் யோகி ஆதித்யநாத் பங்கேற்றார். அப்போது, அப்பகுதி மக்கள் சிலர் முதல்வர் யோகி ஆதித்யநாத்தை முற்றுகையிட்டு குரங்கு தொல்லை அதிகமாக உள்ளதாகவும் உரிய நடவடிக்கை எடுக்கவும் வலியுறுத்தினர். அவர்களுக்கு பதில் அளித்த , யோகி ஆதித்யநாத் கூறியதாவது: தினமும் ஆஞ்சநேயரை வணங்கி, ஹனுமன் சாலிசாவை ஓதி வந்தால் குரங்குகள் நம்மை தாக்கவோ, கடிக்கவோ செய்யாது. குரங்குகள் வந்தால் அவற்றை அடித்து விரட்டாமல் அன்புடன் நடத்த வேண்டும்.

முன்பு, கோரக்நாத் மடத்தில் நான் பணியாற்றிக் கொண்டிருந்தபோது குரங்கு ஒன்று எனது அருகில் வந்து மடியில் அமர்ந்தது. நான் அதற்கு வாழைப்பழம் ஒன்றைக் கொடுத்தேன். பிறகு, குரங்கு  அங்கிருந்து சென்றது. அடுத்த நாளும், அந்த குரங்கு எனது மடியில் வந்து அமர்ந்தது. நான் வாழைப்பழத்தைக் கொடுத்தவுடன் அதை வாங்கிக் கொண்டு சென்றுவிட்டது. இது தொடர்ச்சியாக நடந்து வந்தது. ஒரு நாள், எனது மடியில் குரங்கு அமர்ந்துள்ளதைப் பார்த்து மடத்தின் ஊழியர் ஒருவர் சத்தம்போட்டார். அடுத்த நாள், குரங்கு அந்த ஊழியர் அருகே சென்று அவரை தாக்க முற்பட்டது. அருகிலிருந்த நான் குரங்கைப் பார்த்து குரல் எழுப்பியவுடன் அது அங்கிருந்து ஓடிவிட்டது. இதிலிருந்து, நாம் தெரிந்து கொள்ள வேண்டியது என்னவெனில் குரங்கிடம் நாம் அன்புடன் நடந்துகொண்டால் அவை நம்மிடம் அன்பாக நடந்துகொள்ளும் என்றார். முதல்வரின் இந்த பொறுப்பற்ற பேச்சு அப்பகுதி மக்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

Leave a Reply

You must be logged in to post a comment.