தீக்கதிர்

கர்நாடக உள்ளாட்சி தேர்தலிலும் பாஜக கடும் பின்னடைவு 

கர்நாடகாவில் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தல் வாக்குகள் எண்ணப்பட்டு வருகிறது. இதில் பாஜகவிற்கு கடும் பின்னடைவு ஏற்பட்டிருக்கிறது. காங்கிரஸ் அதிக இடங்களை கைப்பற்றியிருக்கிறது.

 கர்நாடகா மாநிலத்தில் கடந்த மாதம்  2 ஆயிரத்து 709 இடங்களுக்கான உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது. இந்த வாக்கு எண்ணிக்கை இன்று காலை முதல் எண்ணப்பட்டு வருகிறது. மொத்தமுள்ள 2709 இடங்களில் 2 628 இடங்களுக்கான தேர்தல் முடிவு அறிவிக்கப்பட்டு இருக்கிறது.  காங்கிரஸ் 988 இடங்களையும், பாஜக 929 இடங்களையும், மதச்சார்பற்ற ஜனதாதளம் 378 இடங்களிலும் சுயேச்சைகள் 333 இடங்களிலும் வெற்றி பெற்றிருக்கின்றனர். இதன் மூலம் பல இடங்களில் காங்கிரஸ் மற்றம் மதச்சார்பற்ற ஜனதாளம் இணைந்து உள்ளாட்சி அமைப்புகளை கைப்பற்றும் நிலை ஏற்பட்டிருக்கிறது.

ஏற்கனவே நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் கடும் பின்னடைவை சந்தித்து ஆட்சி அமைக்கும் வாய்ப்பை இழந்தது. இந்நிலையில் தற்போது நடைபெற்றிருக்கும் உள்ளாட்சி அமைப்புகளிலும் கடும் பின்னடைவை பாஜக சந்தித்திருப்பது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் நடைபெற்ற கார்நாடக சட்டமன்ற தேர்தலின் போது, வாக்கு எண்ணிக்கைக்கு பின்னர்  காங்கிரசும் மதச்சார்பற்ற ஜனதாதளமும் இணைந்து ஆட்சியமைத்தது. ஆனால் தற்போது நடைபெற்றிருக்கும்  உள்ளாட்சி தேர்தலில் இரு கட்சிகளும் கூட்டணி இன்றி தனித்தே போட்டியிட்டன. வரும் நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரசும் மதச்சார்பற்ற ஜனதாதளம் இணைந்து போட்டியிடும் என அறிவித்திருக்கின்றன. இந்நிலையில் பாஜக வரும் நாடாளுமன்ற தேர்தலில் இன்னும் கடும் பின்னடைவை சந்திக்கும் நிலை உருவாகியிருக்கிறது.