புதுதில்லி/டெஹ்ரான்:
மக்களை வதைக்கும் மோடியின் அரசின் நாசகரக் கொள்கைகளின் காரணமாக ஒவ்வொரு நாளும் அதிகரித்து வரும் பெட்ரோல், டீசல் விலை திங்களன்று இதுவரை இல்லாத உச்சத்தை எட்டியது.

பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.31 பைசாவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.39பைசாவும் அதிகரித்து, முறையே லிட்டர் ஒன்றுக்கு மும்பை நிலவரப்படி 86.56 ரூபாயாகவும், 75.54 ரூபாயாகவும் அதிகரித்துள்ளது. சென்னையில் பெட்ரோல் விலை ரூ.82.12 ஆக அதிகரித்துள்ளது. இதனிடையே நவம்பர் துவக்கத்தில் ஈரான் மீதான அமெரிக்காவின் நாசகர பொருளாதார தடைகள் அமுலுக்கு வர இருப்பதையொட்டி, ஈரானிலிருந்து மிக அதிகமாக எண்ணெய் ஏற்றுமதியாகும் ஆசிய நாடுகளுக்கு கச்சா எண்ணெய் வரத்து வெகுவாகக் குறையும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. இது எண்ணெய் வர்த்தக மார்க்கெட்டில் சரிவை உருவாக்கியுள்ளது. இதன்தொடர் விளைவாக பங்குச் சந்தைகளிலும் சரிவு ஏற்பட்டுள்ளது. ஏற்கெனவே அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு வரலாறு காணாத அளவுக்கு மிகக்கடுமையான சரிவினை சந்தித்துள்ளது. டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு கடந்த ஒரே மாதத்தில் ரூ.2.5 வீழ்ச்சி அடைந்து தற்போது ரூ.71 ஆக இருக்கிறது.

ஈரான் மீதான அமெரிக்காவின் பொருளாதாரத் தடை எனும் தாக்குதல்; இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி ஆகிய இரண்டு முக்கிய காரணிகளின் தொடர் விளைவாக வரும் நாட்களில் பெட்ரோலியப் பொருட்களின் விலை வரலாறு காணாத உச்சத்தை தொடும் என்று அஞ்சப்படுகிறது. இந்தியாவில் நடைமுறையில் உள்ள பெட்ரோலியப் பொருட்களின் மீதான அளவில்லாத வரி விதிப்புகளின் காரணமாக பெட்ரோல் லிட்டர் ஒன்றுக்கு 100 ரூபாயைத் தாண்டிச் செல்லும் அபாயம் ஏற்பட்டுள்ளது. ஏழை மற்றும் நடுத்தர மக்கள் எவருக்கும் எட்டாத கனியாக பெட்ரோலும், டீசலும் வெகுசில நாட்களில் மாறும் பேராபத்து ஏற்பட்டுள்ளது.

சீத்தாராம் யெச்சூரி கடும் சாடல்
இதுதொடர்பாக தமது வலைத்தளப் பக்கங்களில் கடும் கண்டனத்தை வெளியிட்டுள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி, “இந்தியப் பொருளாதாரம் வரலாறு காணாத மோசமான நெருக்கடியை எட்டியிருக்கிறது என்பதைத்தான் ரூபாய் மதிப்பின் மோசமான வீழ்ச்சி காட்டுகிறது. உள்நாட்டில் வேலைவாய்ப்புகளில் வீழ்ச்சி, விவசாயத்தில் நெருக்கடி, பணமதிப்பு நீக்க பேரழிவு என அடுத்தடுத்த தாக்குதல்களால் ஒட்டுமொத்த இந்தியப் பொருளாதாரமும் நிலைகுலைந்து கிடக்கிறது. இதன் வெளிப்பாடுதான் பணமதிப்பு வீழ்ச்சி” என்று குறிப்பிட்டுள்ளார். மேலும், “சர்வதேச எண்ணெய் நிலவரங்கள் மாறிக் கொண்டிருக்கும் சூழலில் இந்தியாவில் மோடி அரசு மக்களின் துயரத்தை தடுத்து நிறுத்துவதற்காக எந்த முயற்சியும் செய்யாமல் உணர்வற்ற நிலையில் இருக்கிறது. பெட்ரோலியப் பொருட்களின் மீதான அனைத்து வரிகளையும் ரத்து செய்வதுதான் உடனடித் தீர்வாக அமைய முடியும்; மோடி அரசு தனக்கு சாதகமாக இருக்கும் கூட்டுக்களவாணிகளான பெரும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு பல லட்சம் கோடி ரூபாய் வங்கிக்கடன்களை வராக்கடன்களாக அறிவித்து தள்ளுபடி செய்துள்ளது; மோடி தனது சுய விளம்பரப் பிரச்சாரத்திற்கு கோடிக்கணக்கில் செலவு செய்திருக்கிறார்; ஆனால் பெட்ரோலியப் பொருட்களின் வரலாறு காணாத விலை உயர்வுகளிலிருந்து மக்களைப் பாதுகாப்பதற்காக அவற்றின் மீதான வரிகளை ரத்து செய்ய மறுக்கிறார்” என்றும் யெச்சூரி சாடியுள்ளார்.

Leave a Reply

You must be logged in to post a comment.