தீக்கதிர்

ஆந்திராவில் தமிழகத் தொழிலாளி சுட்டுக்கொலை வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் அதிகாரிகள் கைது செய்யப்படுவார்களா? உறவினர்கள் கோரிக்கை…!

திருவண்ணாமலை;
ஆந்திராவில் திருவண்ணாமலை மாவட்ட தொழிலாளியை சுட்டுக் கொன்ற, ஆந்திர அதிரடிப் படையினர் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்துள்ளனர்.

திருவண்ணாமலை மாவட்டம், ஜவ்வாதுமலை பகுதி, கானமலை கிராமத்தைச் சேர்ந்தவர் தொழிலாளி காமராஜ் (58). இவருக்கு, காமாட்சி என்கிற மனைவியும், வசந்தா என்கிற மகளும், ராமராஜ், ராஜசேகர் என்கிற மகன்களும் உள்ளனர்.

கடந்த 10 நாட்களுக்கு முன்பு ஆந்திர மாநிலத்தில் கட்டிட வேலைக்குச் செல்வதாக கூறி காமராஜ், வீட்டிலிருந்து சென்றுள்ளார். அதன் பின் கடந்த ஆக 31 ஆம் தேதி இரவு, ஆந்திர மாநிலம் சேஷாசலம் வனப்பகுதியில் செம்மர கடத்தலில் காமராஜ் ஈடுபட்டதாகவும், அப்போது அவர் சுட்டுக்கொல்லப்பட்டதாகவும், ஜமனாமரத்தூர் காவல்துறை, காமராஜ் குடும்பத்தினரிடம் தகவல் தெரிவித்துள்ளனர். அதையடுத்து காமராஜ் குடும்பத்தினர் ஆந்திர மாநிலம் சென்று, காமராஜ் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும், உரிய விசாரணை நடத்த வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர்.

ஞாயிறன்று (செப்.2) மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டத் தலைவர்கள் எம்.வீரபத்திரன், பி.செல்வன் உள்ளிட்டோர் காமராஜின் வீட்டிற்கு சென்று ஆறுதல் தெரிவித்தனர்.பிறகு, காமராஜின் மருமகன் அய்யப்பன், திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு ஒன்று அளித்தார்.

அந்த மனுவில் காமராஜ், ஆந்திர மாநிலத்தில் சுட்டுக் கொல்லப்பட்டது தொடர்பாகச் சந்தேகம் உள்ளதாகவும், உரிய விசாரணை நடத்த வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.காமராஜின் குடும்பத்தினரின் வேண்டுகோளை ஏற்று, ஆந்திர மாநிலத்தில், காமராஜின் உடலை மறுபரிசோதனை நடத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

கடந்த 2015 ம் ஆண்டு ஏப்ரல் 7 ஆம் தேதி திருப்பதி சேஷாச்சல வனப்பகுதியில் செம்மரங்களை வெட்டிக் கடத்த முயன்றதாக தமிழக தொழிலாளர்கள் 20 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். செம்மரக் கடத்தல் வழக்கில் ஆந்திர சிறையில் அடைக்கப்பட்டுள்ள 10 ஆயிரம் பேரில், 2 ஆயிரம் பேர் தமிழக தொழிலாளர்கள் எனத் தெரிய வந்துள்ளது. அவர்கள் அனைவரது மீதும் ஜாமீனில் வெளிவர முடியாத பிரிவில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.