கோவை, செப்.1-
நாடு முழுவதும் இடதுசாரி சிந்தனையாளர்கள், எழுத்தாளர்கள், தலித் மற்றும் மனித உரிமை செயல்பாட்டாளர்கள் கைது செய்யப்படுவது என்பது அவசர நிலையை பிரகடனம் செய்தது போல் உள்ளதாக உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி ஹரிபரந்தாமன் தெரிவித்தார்.
அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கம், மக்கள் சிவில் உரிமைக் கழகம், ஐஎல்ஏ, டிஏஏ மற்றும் சமூக நீதி வழக்கறிஞர்கள் மய்யம் சார்பில் கோவை அண்ணாமலை அரங்கத்தில் நீதித்துறை சந்திக்கும் சவால்களும், வழக்கறிஞர்கள் உரிமைப் போராட்டமும் என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது. இந்நிகழ்விற்கு ஜு.பி.சக்திவேல் தலைமை வகித்தார். வழக்கறிஞர் பி.ஜோதிகுமார், இ.மு.சாஜித் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இக்கருத்தரங்கில் சென்னை உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி அரிபரந்தாமன் பங்கேற்று சிறப்புரையாற்றினார். அவர் பேசுகையில்,
தற்போது நாட்டின் பல்வேறு பகுதிகளான ராஞ்சி, ஹைராபாத். டெல்லி, மும்பை, கோவா ஆகிய இடங்களில் இருந்து சமூக செயற்பாட்டாளர்களை ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தமிழ்நாட்டில் எப்படி தேசவிராதி என சொல்கிறார்களோ, அது போல் வட பகுதியில் இவர்களை அர்பன் நக்சல் என குற்றம்சாட்டி தடுப்பு காவல் சட்டத்தில் (யூஏபிஏ) ஒரே நேரத்தில் கைது செய்துள்ளனர். இவர்களால் கைது செய்ய முயன்றவர்களில் ஒருவர் ஆனந்த் டெல்டும்டே. தலித் செயற்பாட்டாளரான இவர் நாட்டின் பல உயரிய பல்கலைக்கழகங்களில் எல்லாம் பட்டம் பெற்றவர்.
இவர் தொடர்ந்து தலித் சமூகத்திற்கு ஆதரவாக கட்டுரைகளை எழுதிக் கொண்டு வருகிறார். இவரை கைது செய்ய காவல் துறையினர் கோவா இண்ஷ்டடியட் ஆப் மேனேஜ்மெண்டில் அதிரடியாக நுழைந்து தேடினர். ஆனால், ஆனந்த் டெல்டும்டே மும்பை சென்று இருந்ததால் நல்வாய்ப்பாக தப்பித்து விட்டார். மேலும், கைது செய்யப்பட்ட தில்லியை சார்ந்த இருவரை தவிர மற்ற அனைவரையும் புனே நீதிமன்றத்திற்கு அழைத்து சென்றனர். ஆனால், அவர்களை அவரவர் உயர் நீதிமன்றத்திலேயே விசாரிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் அளித்த உத்தரவினால் மீண்டும் மாற்றப்பட்டனர்.
ஏன் இந்த கைது நடவடிக்கை?
மகாராஷ்டிரா மாநிலம் புனா அருகில் பீம கோர்கான் என்னுமிடத்தில் 1818 ஆம் ஆண்டு ஜனவரியில் நடந்த யுத்தத்தில் தலித் ரெஜுமன்ட் பேஷ்வாக்களை வீழத்தியது. பேஷ்வாக்கள் என்பவர்கள் பார்பனர்கள். இவர்களின் ஆட்சியை முடிவுக்கு கொண்டுவர இது உதவியது. இதன் 200வது ஆண்டின் வெற்றியை கொண்டாடும் விதத்தில் நடத்தப்பட்ட கூட்டத்தில் பேசியதை வைத்துதான் இந்த கைது சம்பவம் அரங்கேறியுள்ளது.
ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதியே, இதில் என்ன நக்சல் வேலை இருக்கிறது என கேட்கிறார். மேலும், 2.7.2018 ஆம் தேதியில் கவுதம் பாட்டியா என்பவர் இந்துவில் எழுதிய கட்டுரையையில், இந்த யூஏபிஏ என்பது எவ்வித கட்டுப்பாடும் இல்லாமல் கைது செய்ய வழிவகுக்கிறது. இந்த யூஏபிஏ மனிதனின் அடிப்படை உரிமைகளை பறிப்பதாக உள்ளதால் அச்சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என அவர் கூறுகிறார். மேலும் வழக்கறிஞர்களில் ஒருவரான ராஜுவ் தவான். இந்த அமைப்புகளில் ஒன்றிற்கு நான் கூட நிதியளித்திருக்கிறேன். எனவே, என்னையும் கைது செய்வீர்களா என உச்ச நீதிமன்றத்தில் கேட்டிருக்கிறார்.
ஆகவே, ஏதாவது இயக்கம் அல்லது அமைப்பினரின் வெறும் துண்டு பிரசுரத்தை வைத்திருந்தால் மட்டுமே எப்படி அந்த அமைப்புடன் தொடர்புடையதாக கருத முடியும். இது முற்றிலும் நியாயமற்ற செயல். மேலும், இந்த கைது என்பது முதல்முறை அல்ல. இதற்கு முன்பே கடந்த ஜுன் மாதம் ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் ஒருவர் வழக்கறிஞர் சுரேந்தர் கேட்லிங், தமிழ்நாட்டை சார்ந்த முருகன் என்பவர் கடந்த 18 மாதங்களாக சிறையில் இருக்கிறார். காரணம் தடைசெய்யப்பட்ட இயக்கத்தின் வழக்கறிஞர் என்பதால்.
தற்போது திருமுருகன் காந்தியின் பெயரிலும் யூஏபிஏ சட்டம் பாய்ந்தது. பின்னர் அதுமட்டும் இல்லாமல் மேற்கொண்டு 40 வழக்குகள். இதில் முதல் வழக்காக ஐ.நா மனித உரிமைகள் ஆணையத்தில் வன்முறையை துண்டும்படி பேசியதாக வழக்கு போடப்பட்டது. ஆனால், அவர் பேசியது குற்றம் இல்லை என சென்னை சைதாப்பேட்டை நீதிபதி வழக்கை நிராகரித்தார்.
இந்தியாவில் ஆங்கிலேயர் இருக்கும்போது கொண்டுவரப்பட்டது தான் குண்டாஸ் போன்ற தடுப்பு காவல் சட்டங்கள். இந்தியா விடுதலை பெற்ற பின் இதுபோன்ற சட்டங்கள் தேவை இல்லையென ரத்து செய்ய முடிவு செய்யப்பட்டபோது, இச்சட்டம் மிகவும் அரிதாக பயன்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், தற்போது எதற்கெடுத்தாலும் யார் மீது வேண்டுமானாலும் குண்டாஸ் வழக்கு போடும் நிலை உள்ளது.
மேலும், தற்போது ஒருவரை ஒரு வழக்கில் கைது செய்து அதை அப்படியே பல வழக்காக மாற்றி, ஒரு வழக்கில் ஜாமீன் கிடைத்தால் மற்றொன்றில் கிடைக்காத படி பார்த்துக் கொண்டு சிறையிலேயே வைத்துக் கொள்ள காவல்துறை முயற்சி செய்கிறது. எப்போது இந்தியாவில் பேச்சு உரிமை மற்றும் கருத்துரிமைக்கு தடை வரும் என தெரியாத நிலை உள்ளது. எவ்வித ஆயுதமும் இல்லாமல் கூட்டம் கூட்டுவது என்பது அடிப்படை உரிமை என்பது சட்டத்திலேயே இருக்கிறது. ஆனால் தற்போதைய கால கட்டம் பார்த்தால் ஏதோ ராணுவ ஆட்சி நடைபெறுகிறதோ என்ற நிலை உள்ளது.
தினம் ஒரு என்கவுண்டர்
காஷ்மீர் மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் ஆம்டு போர்சஸ் ஸ்பெசல் புரோவிசன் ஆக்ட் செயல்பாட்டில் உள்ளது. அங்கு எவ்வித பிரச்சனைகளிலும் காவல்துறை நடவடிக்கை மேற்கொள்வதில்லை. மாறாக, அனைத்து அதிகாரங்களும் ராணுவத்திடமே அளிக்கப்பட்டுள்ளது. இதன் விளைவாக மணிப்பூரில் மட்டும் 1528 போலி என்கவுண்டர்கள் நடத்தப்பட்டுள்ளது என்ற அதிர்ச்சி தகவல் கிடைத்தது. இப்படி போலி என்கவுண்டர்கள் மேற்கொண்ட ராணுவம் மீது சி.பி.ஐ வழக்கு போடவேண்டும் என முறையிடப்பட்டது. நீதிபதி மதன் பி லோக்கூர் சி.பி.ஐ இயக்குநரிடம் வழக்கு போட உத்தரவிட்டார். இவ்வாறு வழக்கு பதியப்பட்ட 350 ராணுவ வீரர்கள் உச்ச நீதிமன்றத்தில் வழக்கை விசாரிக்க தடைவிதிக்க வேண்டும் கேட்டுக்கொண்டதன் அடிப்படையில் தடையும் விதிக்கப்பட்டது.
உத்தரபிரதேசத்தில் ஆதித்யநாத் பதவியேற்று இன்னும் 1000 நாட்கள் ஆகவில்லை. ஆனால் தற்போதைய நிலையில் தினம் ஒரு என்கவுண்டர் என்ற கணக்கில் 1000க்கும் மேற்பட்ட என்கவுண்டர்கள் நடந்துள்ளது. இதுதொடர்பாக உச்சநீதிமன்றத்தில் மக்கள் சிவில் உரிமைக் கழகம் (பி.யூ.சி.எல்) சார்பில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த நிலை எல்லாம் பார்த்தால் அவசர நிலையை பிரகடனம் செய்தது போல் உள்ளது.
மக்களுக்கு தற்போதைய கால கட்டத்தில் யார் மீது நம்பிக்கை இல்லை. முன்பெல்லாம் ஏதேனும் என்னறால் சிபிஐ-யிடம் நாட வேண்டி இருந்தது. ஆனால், தற்போது அவர்கள் மீதும் முழுவதும் நம்பிக்கையை இழந்து விட்டனர். ஏனென்றால் போலீஸ் என்பது மாநில கட்டுப்பாட்டில் உள்ளது. சிபிஐ என்பது மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது. அது மட்டும் தான் வித்தியாசம்.
நீதித்துறையிலும் ஊழல்
எந்த தேர்தலில் முறைகேடு என்றாலும் உயர்நீதிமன்றம் தான் முறையிட்டு செய்கிறது. ஆனால் பார் கவுன்சில் தேர்தலை சரியாக தலையிட்டு நடத்துவதில்லை. தற்போது நீதித்துறையில் உள்ள பெரிய சவால்களில் முக்கியமானவை நீதிபதிகள் உள்ளிட்ட பணியிடங்கள் நிரப்பப்படாமல் இருப்பது ஆகும். மேலும், ஊழல் என்பது நீதி துறையிலும் உள்ளது. இதை நான் மட்டும் இல்லை வர்மா, பரூட்சா, கபாடியா ஆகிய மூன்று முக்கிய நீதிபதிகளும் சொல்லி இருக்கிறார்கள். இதேபோல், நீதிபதிகள் இடமாற்றம் செய்யப்படுவது என்பது நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே உள்ளது. வழக்குகள் இழுத்தடிப்பது என்பது அதிகமாக கொண்டு இருக்கிறது. இவ்வாறு அவர் பேசினர்.
இக்கருத்தரங்கில் தமிழ்நாடு வழக்கறிஞர்கள் கூட்டமைப்பின் தலைவர் பி.திருமலைராசன், கோயமுத்தூர் வழக்கறிஞர்கள் சங்கத்தின் தலைவர் ஆர்.பாலகிருஷ்ணன், நீதித்துறை பணியாளர் சங்கத்தின் கருணாகரன். பியூசிஎல் தேசியக்குழு உறுப்பினர் ச.பாலமுருகன் மற்றும், வழக்கறிஞர்கள், சட்டக்கல்லூரி மாணவர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.