===பெ.சண்முகம்===
கர்நாடக மாநிலத்தில் காவிரி நீர்ப் பிடிப்பு பகுதியில் பெய்த அபரிமிதமான மழையால் இந்த ஆண்டு மட்டும் மேட்டூர் அணை மூன்று முறை அதன் முழுக்கொள்ளளவான 120 அடியை எட்டியது மகிழ்ச்சிக்குரியது. ஆனால், அதற்கு மேல் வந்த தண்ணீர் மொத்தமும் வெள்ளம் என்ற முறையில் கொள்ளிடத்தில் திறந்துவிடப்பட்டது. அதே நேரத்தில் காவிரி பாசன பகுதிகளில் கடைமடை பகுதிகளுக்கு தண்ணீர் வந்து சேரவில்லை. குளங்கள், ஏரிகள் வறண்டு கிடக்கின்றன. இது குறித்து தமிழக மக்கள் அனைவரும் தங்கள் கவலையை வெளிப்படுத்தினர்.

இதற்கு யார் காரணம்?
ஒவ்வொரு டி.எம்.சி. தண்ணீருக்காகவும் உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு வாதாடி இருக்கிறது. ஒரு சொட்டு தண்ணீர் கூட திறந்துவிட முடியாது என்று கர்நாடகா மறுத்திருக்கிறது. ஆனால், இப்போது தண்ணீர் எந்த அரசினுடைய பேச்சையும் கேட்காமல் அதன் போக்கில் போய்க் கொண்டிருக்கிறது. அதுதான் இயற்கை.

பாசனம், குடிநீர் மற்றும் தொழிற்சாலைகளுக்கு தேவையான தண்ணீரை தேக்கியும், சேமித்தும் வைக்க வேண்டிய பொறுப்பு அரசுக்கு இருக்கிறது. அரசுகள் தோன்றிய காலத்திலிருந்து நீரைச் சேமித்து வைப்பதற்கான பணிகளில் முனைப்புக் காட்டி வந்திருப்பதற்கான சான்றுகள் நிரம்பிக் கிடக்கின்றன. இப்போதுள்ள அரசு அந்த கடமையை செய்யத்தவறி விட்டது என்பதில் சந்தேகமில்லை. ஆகஸ்ட் 11 ந் தேதி முதல் 20 ந் தேதி வரை மட்டும் ஏறத்தாழ 90 டி.எம்.சி. தண்ணீர் கடலுக்கு சென்றிருக்கிறது. அதாவது ஒரு மேட்டூர் அணையின் தண்ணீர் மொத்தமும் (93 டி.எம்.சி) 10 நாட்களில் கடலுக்குச் சென்று விட்டது என்பது மிக மிக மோசமான, மன்னிக்க முடியாத குற்றம் ஆகும்.

மேட்டூர் அணையிலிருந்து ஆகஸ்ட் 11 முதல் 20 வரை திறக்கப்பட்ட நீரின் விபரம் விநாடிக்கு

மாதம்          தேதி                          தண்ணீர் திறந்த விதம்
ஆகஸ்ட்        11                                77,000 கன அடி
ஆகஸ்ட்        12                                12,900 கன அடி
ஆகஸ்ட்        13                                87,000  கன அடி
ஆகஸ்ட்        14                             1,24,000 கன அடி
ஆகஸ்ட்         15                            1,65,800 கன அடி
ஆகஸ்ட்         16                            1,90,000 கன அடி
ஆகஸ்ட்         17                            2,32,000 கன அடி
ஆகஸ்ட்         18                            2,32,000 கன அடி
ஆகஸ்ட்          19                           1,60,000 கன அடி
ஆகஸ்ட்          20                           1,60,800  கன அடி

இந்த நீரில் பெரும் பகுதி கொள்ளிடத்தில் தான் திறந்து விடப்பட்டது.

காவிரியில் திறக்க முடியாததற்கு காரணம், அதிக பட்சம் 24000 கன அடி நீர் தான் திறக்க முடியும். கரைகள் பல ஆண்டுகாலமாக பராமரிக்கப்படாமல் இருப்பதால் 22000 கன அடிக்கு மேல் திறந்துவிடவில்லை. கரைகள் உடைப்பெடுத்து விடும் என்ற அச்சம் அதிகாரிகள் இடத்தில் இருக்கிறது. அது உண்மையும் கூட! அதனால் தான் உபரிநீர் ஏராளமாக வந்தாலும் கடைமடை பகுதிகளுக்கு தண்ணீர் சென்று சேரவில்லை. இன்னொன்று காவிரி டெல்டாவில் உள்ள சுமார் 28000 கிளை வாய்க்கால்கள் தூர்வாரப்படாமல் விடப்பட்டதால் மண்மேடிட்டு தண்ணீர் வயல்களுக்கு சென்று சேரவில்லை. இவை அனைத்திற்கும் காரணம் அரசின் அலட்சியம் தான். இனி காவிரியில் தண்ணீரே வராது என்று முடிவெடுத்து விட்டதை தான் அரசு நிர்வாகத்தின் மெத்தனப் போக்கு வெளிப்படுத்துகிறது. நீர் வீணாவது குறித்து கடுகளவும் அரசு கவலைப்படவில்லை.

அதே நேரத்தில் தமிழக அரசு தொடர்ந்து, தூர்வாரிக் கொண்டிருப்பதாக கூறிக் கொண்டேயிருக்கிறது. குடிமராமத்து பணிகளுக்கென்று அரசு செலவழித்துள்ளதாக 2018-19 நிதிநிலை அறிக்கையில் கீழ்க்கண்ட விபரங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.

2016-17ல் ரூ.100 கோடி, 17-18ல் ரூ.300 கோடி, 18-19ல் ரூ.300 கோடி, நிலவளத்திட்டத்தின் கீழ் ரூ.3008 கோடி, பருவநிலை மாற்றம் தழுவல் திட்டத்தில் காவிரி பாசன பகுதிகளுக்கு மட்டும் ரூ.215.84 கோடி, அணைகள் புனரமைப்புத் திட்டத்தின் கீழ் ரூ.362.2 கோடி என்று ஏறத்தாழ 4500 கோடி ரூபாய் கடந்த மூன்றாண்டு காலத்தில் செலவழிக்கப்பட்டுள்ளது. எவ்வளவு தண்ணீர் இதன் மூலம் சேகரிக்கப்பட்டது. எத்தனை நீர்நிலைகள் மேம்படுத்தப்பட்டன என்பது பரம ரகசியமாக இருக்கிறது. பொதுப்பணித்துறை அதிகாரிகள், ஒப்பந்தக்காரர்கள், அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் எடுத்துக் கொண்டது போக உண்மையில் தூர்வார எவ்வளவு செலவிடப்பட்டது? இத்தனை தொகையும் விழலுக்கு இறைத்த நீராகி விட்டது. அதனால் தான் சுமார் 40000 ஏரிகள் உள்ள தமிழ்நாட்டில் தண்ணீரை சேமிக்க முடியாமல் கடலுக்கு போய்க் கொண்டிருக்கிறது.

இதற்கு ஆட்சியாளர்களையன்றி வேறு யாரைக் குற்றம் சொல்ல முடியும்?
1836 இல் திருச்சி முக்கொம்பு கொள்ளிடம் ஆற்றில் கட்டப்பட்ட மேலணை ஆகஸ்ட் 23ந் தேதி இரவு 8.15 மணியளவில் உடைந்துவிட்டது. முக்கொம்பில் உள்ள மேலணையில் 12 மதகுகள் உடைந்து காவிரிக்கு வர வேண்டிய தண்ணீர் கொள்ளிடத்தில் போய்க் கொண்டிருக்கிறது. பழமையான அணை என்றாலும், அணை பராமரிப்புக் கென்று ஆண்டுதோறும் கோடிக்கணக்கான ரூபாய்கள் ஒதுக்கப்படுகிறது. ஆனால், அது முறையாக செலவழிக்கப்படுகிறதா? அப்படி பராமரிப்புச் செய்யப்பட்டிருந்தால் ஏன் அணை உடைந்தது. இதற்கு பொறுப்பான அதிகாரிகள் இதற்கு பொறுப்பேற்க வேண்டாமா? மற்றொன்று, வரை முறையற்ற மணல் கொள்ளையும் மிக முக்கியக் காரணம் ஆகும். அணையிலிருந்து 500 மீட்டருக்கு அப்பால் தான் மணல் அள்ள வேண்டுமென்று விதி இருந்தாலும் அதை கடைப்பிடிக்கவில்லையென்பதை அணைகளில் சென்று பார்த்தாலே தெரியும். எனவே, அணை உடைந்ததற்கு பழைமையானது என்ற ஒன்று மட்டுமே காரணம் அல்ல. இன்னும் சொல்லப்போனால் தற்போது சென்றதை விட 2005ஆம் ஆண்டு 145 டி.எம்.சி. தண்ணீர் கடலுக்கு சென்றிருக்கிறது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

எனவே, மேலணைக்கு பதிலாக புதிய அணை கட்டப்பட வேண்டும் .அத்துடன், தமிழகத்தில் உள்ள அனைத்து அணைகளும் ஆய்வு செய்யப்பட வேண்டும். ஆய்வின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட வேண்டிய மராமத்துப் பணிகள் செய்யப்பட வேண்டும்.

காவிரியில் 16 மற்றும் கொள்ளிடத்தில் 7 இடங்களில் கதவணைகள் அமைப்பது என்று ஏற்றுக் கொள்ளப்பட்டு அந்தப்பணிகள் ஆமை வேகத்தில் நடைபெறுவதும் மற்றொரு காரணம் ஆகும். கதவணைகள் அமைக்கப்படுவதன் மூலம் நீர் தேக்கப்பட்டு, அந்தந்த பகுதிகளில் நிலத்தடி நீர்வளம் பெருகும், மின் உற்பத்தி செய்ய முடியும், போக்குவரத்திற்கும், இந்த அணைகளை பயன்படுத்த முடியும். இத்திட்டத்தை அரசு ஏற்றுக் கொண்டதே தவிர செயல்படுத்துவதில் ஆர்வம் காட்டவில்லை.

இதை நிறைவேற்றி இருந்தால் இந்த அளவுக்கு தண்ணீர் வீணாகி இருக்காது. பல கிராமங்கள் தண்ணீரால் பாதிக்கப்பட்டிருக்காது.

காவிரியில் கதவணை அமைக்க திட்டமிடப்பட்டுள்ள 16 இடங்கள்:
1.செக்கனூர், 2.நெரிஞ்சிப்பாடி, 3.கோனேரிப்பட்டி, 4.ஊராச்சி கோட்டை, 5.அக்ரகாரம், 6.ஒடப்பள்ளி, 7.சோழசிராமணி, 8.கண்டிபாளையம், 9.கொண்டளம் (மரவபாளையம்), 10.குமாரபாளையம்(நன்னையூர்), 11.நீராமசமுத்திரம் (மாயனூர்), 12.மகேந்திரமங்கலம் (லாலாபேட்டை), 13.அய்யம்பாளையம் (பேட்டவாய்த்தலை), 14.குணசீலம் (திருப்பராய்த்துறை), 15.முத்தரசநல்லூர், 16.கிளிக்கூடு(வேங்கூர்).

 

கொள்ளிடத்தில் திட்டமிடப்பட்டுள்ள இடங்கள்: 1.நொச்சியம், 2.கூகூர் 3.திருமழபாடி 4.ஏலாக்குறிச்சி 5. காமரசவல்லி 6.கோடாலிகருப்பூர் 7.அணைக்கரைக்கு மேல் என 7 இடங்களில் அமைக்கப்படும். இவை அமைக்கப்பட்டால் காவேரி நீர்வளம் மேம்படும். வெள்ள நீரோட்டத்தை சேமித்து காவிரி பாசன விவசாயிகளின் வாழ்க்கையை மேம்பாடடையச் செய்ய முடியும்.
அத்துடன் ஏரி, குளங்களை ஆழப்படுத்தி நீரை நிரப்பவேண்டும். காவிரி, வைகை, குண்டாறு இணைப்பு உள்ளிட்ட தமிழக நதிகளின் இணைப்புத் திட்டத்தை செயல்படுத்த வேண்டும்.

நீர்நிலைகளை அன்றாடம் கண்காணித்து உயர் அதிகாரிகளுக்கு தெரிவிக்கும் “லஷ்கர்” என்ற பணியாளர் பணியிடங்கள் நீண்டகாலமாக நிரப்பப்படாமல் உள்ளது. கல்லணைக் கால்வாய், வெண்ணாறு, காவிரி ஆகிய மூன்று டிவிசன்களில் மட்டும் 450 லஷ்கர் பணியிடங்கள் காலியாக உள்ளன. இதனால் நீர்நிலைகளில் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் சம்பந்தமாக உயர் அதிகாரிகளுக்கு உடனுக்குடன் தெரியவாய்ப்பில்லை. எனவே, மாநிலம் முழுவதும் காலியாக உள்ள “லஷ்கர்” பணியிடங்கள் நிரப்பப்படவேண்டும்.

ஆனால், ஆட்சியாளர்களுக்கு தொலைநோக்குப் பார்வை இல்லாமல், “இருப்பது வரை சுருட்டியது லாபம்” என்ற நோக்கத்தோடு செயல்படும் இன்றைய ஆட்சியாளர்களிடம் இதை எதிர்பார்க்க முடியாது.

அண்டை மாநிலங்களில் தமிழகத்திற்கான நீர் உரிமைக்காக போராடும் அதே நேரத்தில், நமது மாநில அரசு செய்ய வேண்டிய பணிகளை செவ்வனே செய்திட விவசாயிகளும், பொது மக்களும் உரிய நிர்பந்தத்தை அளித்திட வேண்டும். அதற்கான மக்கள் இயக்கம் உருவாக்கிட வேண்டும். வள்ளுவர் மழையை “அமிழ்தம்” என்று போற்றினார். அந்த மதிப்புமிக்க அமிழ்தத்தை ஆட்சியாளர்கள் வீணாக்கிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு தக்க பாடம் புகட்டுவோம்.

கட்டுரையாளர் : மாநில பொதுச்செயலாளர், தமிழ்நாடு விவசாயிகள் சங்கம்

Leave a Reply

You must be logged in to post a comment.