இந்தோனேசியாவில் நடைபெற்ற 18 ஆவது ஆசிய விளையாட்டுப் போட்டியின் தடகளத்தில் 7 தங்கம், 10 வெள்ளி, 2 வெண்கலம் உட்பட 19 பதக்கங்களை குவித்துள்ள இந்திய அணியில் வறுமையிலும் உடல் வலிமைகளையும் தாண்டி சாதித்துள்ளவர்களை பற்றி சற்று அலசுவோம்!

தங்க மகள்!
‘ஹெப்டதலான் பிரிவில் இந்தியாவுக்காக முதன் முறையாக ஆசிய விளையாட்டில ரிக்க்ஷா ஓட்டும் தொழிலாளியின் 21 வயதாகும் மகள் தங்கம் வென்று வரலாற்றுச் சாதனை படைத்து தடகள அடையாளமாக உருவெடுத்திருக்கிறார்.100 மீட்டர் தடை தாண்டும் ஓட்டம், உயரம் தாண்டுதல், குண்டு எறிதல், 200 மீட்டர் ஓட்டம், நீளம் தாண்டுதல், ஈட்டி எறிதல், 800 மீட்டர் ஓட்டம் என வெவ்வேறு பிரிவுகளில் அதிக புள்ளிகள் எடுப்பவரே ஹெப்டதலான் சாம்பியனா வார். இத்தகைய கடினமான பிரிவுகள் அடங்கிய போட்டியில் சரித்திர சாதனையை படைத்துள்ள சுவப்னா பர்மனின் சொந்த ஊர் மேற்கு வங்க மாநிலத்தின் ஜல்பைகுரி மாவட்டத்திலுள்ள மலை கிராமமான ராஜ்பொன்ஷி. குடிசையில் வசித்து வரும் சுவப்னாவின் குடும்பத்தில் வறுமை தாண்டவமாடியது. தந்தை பஞ்சானன் பர்மன் ரிக்சா தொழிலாளி. அதில் கிடைத்த வருமானத்தைக் கொண்டுதான் குடும்பத்தை நடத்தி வந்தார். அவரும் பக்கவாத நோயால் மருத்துவமனையில் படுத்த படுக்கை யானதால் சுவப்னாவின் அம்மா பசனா குடும்பப் பொறுப்புகளை முழுமையாக கவனிக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டார். டீ எஸ்டேட்டில் தேயிலை பறிக்கும் வேலைக்கு சென்று அதில் கிடைத்த சொற்ப வருமானத்தைக் கொண்டுதான் குடும்பத்தை ஓடிக்கொண்டிருந்தார்.

அரசுப் பள்ளியில் படித்து வந்த சுவப்னா, விளையாட்டுத் துறையிலும் ஆர்வமாக இருந்தார். குடும்பத்தின் வறுமை காரணமாக முழுமையாக பயிற்சியில் ஈடுபட முடியவில்லை. அன்றைய இடது முன்னணி அரசின் விளையாட்டுத்துறை அமைச்சரின் உதவியால் கொல்கத்தாவிலுள்ள இந்திய விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் பயிற்சி மையத்தில் சேர்க்கப்பட்டார். உள்ளூர் போட்டிகளில் பரிசுகளை குவித்த அவருக்கு தேசிய அணியில் இடம் கிடைத்தது. தொடர்ந்து பல சாதனைகளை முறியடித்து சர்வதேச போட்டிகளிலும் முத்திரை பதித்தார். ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியிலும் படரேஷன் கோப்பையிலும் தொடர்ச்சியாக தங்கப் பதக்கம் வென்றார். ஆசிய தொடருக்கு முன்பு, பயிற்சியின்போது ஏற்பட்ட காயம் தண்டுவடத்தில் ஒரு ‘ஸ்டிக்கே’ நகர்ந்துவிட்டது. கடும் முதுகு வலிக்கு சிகிச்சை எடுத்துக் கொண்டுதான் பயிற்சி எடுத்தார். ஒரு கட்டத்தில் தடகளத்திலிருந்து ஒதுங்கிவிடலாம் என்ற முடிவுக்கும் வந்துவிட்டார். மிகவும் திறமை சாலியான சுவப்னாவின் இம்முடிவு பேரதிர்ச்சியானது.

இந்த தகவலை கேள்விப்பட்ட இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ராகுல் டிராவிட், சில அமைப்புகள் நிதி உதவி செய்ய முன் வந்ததால் தனது முடிவை மாற்றிக்கொண்டு தொடர்ந்து சிகிச்சை பெற்றார். கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கருக்கு முதுகு வலி ஏற்பட்டபோது சிகிச்சையளித்த பிசியோதெரபிஸ்ட் ‘ஜான் க்ளஸ்டரை’ சந்தித்தார் சுவப்னா. இந்த முதுகு வலியை குணப்படுத்த அறுவை சிகிச்சை கட்டாயம் செய்தாக வேண்டும் என்று அறிவுரை கூறினார். அறுவை சிகிச்சை செய்துகொண்டால் ஆசிய விளையாட்டில் பங்கேற்க முடியாத சூழல் ஏற்படும் என்பதை உணர்ந்த சுவப்னா, அறுவை சிகிச்சையை தள்ளிப்போட்டார். பிசியோ தெரபி கொடுத்த அறிவுரையின்படி பயிற்சி பெற்றுவந்தார்.பிறக்கும் போதே இரு கால்களிலும் ஆறு விரல்களுடன் பிறந்த சுவப்னாவின் கால்களுக்கு பொருத்தமான ‘ஷூ’ கிடைக்காமல் அதிக வலியுடன் போட்டிகளில் பங்கேற்று பதக்கங்களை குவித்து வருகிறார். இதுவரைக்கும் அவரது கால்களுக்கு பொருத்தமான ‘ஷூ’ கிடைக்கவில்லை என்பது வேதனையிலும் வேதனையாகும். ஆசிய விளையாட்டில் தங்கம் வெல்ல வேண்டும் என்ற லட்சியத்துடன் களம் இறங்கிய சுவப்னா, ஆறு விரல்களையும் சேர்த்து பேண்டேஜ் கட்டிய பிறகுதான் கால்களுக்கு ‘ஷூ’ போட்டார். அதுவும் கால்களுக்கு பொருந்தாத ‘ஷூ’. இதனால் ஓடும்போதும் சரி, தாண்டும் போதும் சரி அவருக்கு தாங்கமுடியாத வலி ஏற்பட்டது.

மறுபுறத்தில், சீன வீராங்கனை கடும் சவால் கொடுத்தார். போராட்டமே வாழ்க்கையாகிப்போன சுவப்னாவின் தீரத்துக்கு முன் சீன வீராங்கனையின் முயற்சி நீர்த்துப் போனது. தங்கப்பதக்கத்தை முத்தமிட்ட சுவப்னா, ‘‘வாழ்க்கை முழுவதுமே வலியை மட்டும் அனுபவித்து வந்த நான் கவலைப்படாத நாளே இல்லை. போட்டி விதிமுறைகளால் மருந்துகள் எடுத்துக் கொள்வதிலும் கவனமாக இருந்தேன். இல்லை என்றால் ஊக்கமருந்து விவகாரத்தில் சிக்க வேண்டியதாகிவிடும். இதனால் வலி நிவாரண மாத்திரைகளை எடுத்துக் கொள்வதில்லை. இவையெல்லாம் போதாது என ஆசியப் போட்டி நடந்த தினங்களில் பல் வலியும் சேர்ந்துகொண்டது. ஆனால் போட்டியில் மட்டும் கவனம் செலுத்தியதால் தங்கம் வென்றேன்’’ என்றார்.

அசாதாரண பயணம்!
தடகளத்தில் மிக முக்கிய ‘ஈவன்ட்’ எது என்றால் ‘மின்னல் வேக’ ஓட்டப்பந்தய வீரர் யார்? என்பதுதான். அத்தகைய 100 மீட்டர் பந்தயத்தில்தடைகள் பல தாண்டி சாதித்து வருகிறார் டுட்டீ சந்த்.ஆசிய விளையாட்டில் பெண்களுக்கான 100 மீட்டர் ஓட்டத்தின் இறுதிப்போட்டியில் சீனா, கஜகஸ்தான், மலேசியா வீரர்களுடன் டுட்டீ சந்த் மல்லுக்கட்டினார். விசில் சப்தம் ஊதியதும் சிட்டாக பறந்த அவர் கடைசி 0.03 வினாடிகளில் தங்கப்பதக்கத்தை கோட்டைவிட்டார். 200 மீட்டர் ஓட்டத்திலும் இரண்டாவதாக வந்து இரட்டைப் வெள்ளிப் பதக்கம் வென்றார். 36 ஆண்டுகளுக்கு பிறகு ஒலிம்பிக் 100 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் இந்தியாவுக்காக ஓடிய பெருமைக்கு சொந்தமான 21 வயதாகும் இந்த இளம் வீராங்கனை கடந்து வந்த பாதை மிகவும் கடினமானது. ஒடிசா மாநிலத்தில் ஜெய்ப்பூர் கிராமத்தில் வறுமைக்கோட்டின் கீழ் வசிக்கும் ஒரு ஏழை நெசவாளியான சக்ரதார் சந்த்-அகுஜி சந்த் தம்பதியின் நான்காவது குழந்தை டுட்டீ. ஏழு குழந்தை களுக்கு தந்தையான சக்ரதாரின் மாத வருமானம் ரூ. 3 ஆயிரத்தை தாண்டவில்லை. அந்த அளவுக்கு வறுமை தாண்டவமாடியது. ஏழ்மையை வெல்வது எப்படி என்ற ஒரே சிந்தனையில் மூன்றாவது மகள் சரஸ்வதி வேகமாக ஓடத் தொடங்கினார். அவரது ஓட்டத்திற்கு தேசிய அங்கீகாரமும் அரசு வேலையும் கிடைத்தது.

தடகள வீராங்கனை கனவில், சகோதரியைப் போன்று ஓடத் தொடங்கியபோது டுட்டீ சந்த்துக்கு 10 வயது. அரசுப் பள்ளியில் படித்து வந்த டுட்டீ சந்த்துக்கு ஓட மட்டுமே தெரிந்தது. அந்த வேகத்தில் 100 மீட்டர் பந்தயத் தூரத்தை 11.8 நொடிகளில் கடந்து 16 வயதில் தேசிய தடகளத்தில் தங்கம் வென்று அனைவரது கவனத்தையும் தன் பக்கம் திருப்பினார். அன்றிலிருந்து இந்திய தடகள நட்சத்திர வீராங்கனைகள் பட்டியலில் சேர்ந்தார். அடுத்த ஆண்டே, ஆசிய தடகள சாம்பியன்ஷிப், உலக இளைஞர் விளையாட்டில் 100, 200 மீட்டர் ஓட்டங்களில் வெண்கலப் பதக்கங் களை வென்றதோடு ரியோ ஒலிம்பிக் போட்டிக்கும் தகுதி பெற்றார். இவரது தேசிய சாதனை இதுவரை முறியடிக்கப்படவில்லை. ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்பதற்கு முன்பு அவர் சந்தித்த சோதனைகளும் ஏராளம்.  2014 ஆம் ஆண்டில் ஆசிய ஜூனியர் தடகளத்தில் 200 மீட்டர், தொடர் ஓட்டங்களில் இரண்டு ‘கோல்டு மெடல்’ தட்டி வந்த டுட்டீ, காமன்வெல்த் போட்டியில் பங்கேற்க உற்சாகமாக தயாராகிக் கொண்டிருந்தார். அப்போது, இந்திய தடகள சம்மேளனத்திடமிருந்து வந்த தகவல் பேரடியானது. அதிக ஹார்மோன்கள் சுரப்பதால் பெண்கள் பிரிவில் போட்டியிட இந்திய ஒலிம்பிக் சங்கம் தடை விதித்ததால், இனி சர்வதேச போட்டிகளில் ‘ஒரு பெண்ணாக’ கலந்து கொள்ள முடியாது என கூறியதால், இத்தனை நாள்பட்ட கஷ்டங்களும், கண்ட கனவுகளும் அவ்வளவுதானா என இடிந்து போனார். இந்தியாவின் சிறந்த வீராங்கனை என்ற பெயர் பெற்ற அவருக்கு ஆதரவாக இருக்க வேண்டிய ஒலிம்பிக் சங்கமே நீதிமன்றப் படியை ஏற வைத்தது. கொடுமையிலும் கொடுமை.

இந்த கடினமான தருணத்தில் அவரது பயிற்சியாளர் ரமேஷ், பாலின ஆய்வாளர் பயோஷினி மித்ரா போன்றோர் ஆதரவுக் கரம் நீட்டினர்.  மனம் தளராமல் மீண்டும் பயிற்சியில் ஈடுபட முடிவு செய்த போது, சர்வதேச போட்டிகளுக்கு வீரர்களைதயார்படுத்தும் இந்திய விளையாட்டு ஆணையத்திட மிருந்து இவருக்கு அழைப்பு வரவில்லை. நீதிமன்ற வழக்கைக் காரணம் காட்டியது. கொல்கத்தா, பாட்டியாலா  என பல இடங்களுக்கு அலைக்கழித்தனர். அவரது பயிற்சியாளரின் முயற்சியால் ஹைதராபாத் சென்றார். அங்கு, பி.வி.சிந்து, சாய்னா நேவால் ஆகியோர்பயிற்சி எடுத்து வந்த பேட்மிண்டன் களத்தில் ஓடுவதற்குகோபி சந்த் அனுமதித்தார். நீதிமன்றத் தீர்ப்பு வரும்வரைக்கும் இங்குதான் பயிற்சி எடுத்தார். தடைக்கற்களை உடைத்து இந்திய அணியில் மீண்டும் இடம் பிடித்த டுட்டீ சந்த், கடந்த ஆண்டு சொந்த மண்ணில் நடந்த ஆசியவிளையாட்டில் களம் இறங்கி 100, 400 மீட்டர் ஓட்டங்களில் வெண்கலப் பதக்கங்களை வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.ஓட்டப் பந்தயத்தில் ஓடும் வீரர் ஒருவர், தன் உடலில் உள்ள தசை, எலும்பு, சுவாசம் என்று தன் முழு பலத்தையும் பயன்படுத்தினால் தான் அசூரவேகத்தில் ஓட முடியும். அப்படி உயிரைக் கொடுத்து ஓடிய டுட்டீ சந்த், ஒலிம்பிக் போட்டிகளுக்கு நுழைய கிடைத்த வாய்ப்பை விட அதற்கான பயிற்சிகளின் போதுதான் அதிகமாக காயப்பட்டார்.  ஓட்டதிற்கு பயன்டுத்தும் ‘ஸ்பைக்ஸ்’ காலணிகள் கிழிந்து விட்டதால், புதிய காலணிகள் வாங்க பணம் இன்றிதவித்த போதும் ஒலிம்பிக் போட்டிக்காக அமெரிக்காவில் பயிற்சி பெற விரும்பிய போதும் மத்திய-மாநில அரசு உதவி செய்யவில்லை. இதனால் மனமுடைந்த இவர், ஹைதராபாத்திலேயே தனது பயிற்சியை தொடர்ந்தார்.

இந்திய பெண்களின் பெருமையை ஒலிம்பிக் அரங்கில் உயர்த்த போராடிய டுட்டீயை, விமானத்தில் இரண்டாம் வகுப்பில் அமர செய்துவிட்டு, முதல் வகுப்பில் பயணம் செய்தார்கள் இந்திய அதிகாரிகள். ‘போராடாமல் பெற்ற வெற்றி நினைவில் வைப்பது’ இல்லை என்பதை நிரூபித்து காட்டிய டுட்டீ சந்தின் இந்த வெற்றி, வாய்ப்பு மறுக்கப்பட்ட அனைவருக்கும் ஊக்கம் கொடுக்கும் என்பதில் எவ்வித சந்தேகமும் கிடையாது.

நம்பிக்கை சுடர்!
‘‘இந்த தங்கப்பதக்கம் எனது வாழ்நாளின் பெரிய சாதனை! இதற்காக நானும் எனது குடும்பமும் பல தியாகங்களை செய்திருப்பதால், இப்பதக்கத்தை எனது தந்தைக்கு அர்ப்பணம் செய்கிறேன்’’. – தேஜிந்தர்பால் சிங் தூர் பஞ்சாப் மாநிலம் மோவா மாவட்டம், ‘காசா பாண்டோ’ கிராமத்தில் ஏழை விவசாயக் குடும்பத்தில் பிறந்தவர் தேஜிந்தர்பால் சிங் தூர். 23 வயதாகும் இவர், இந்திய சிறுவர்களைப் போன்று தானும் ஒரு கிரிக்கெட்  வீரராக வேண்டும் என்று சிறுவயதில் விரும்பினார். அதை விரும்பாத அவரது தந்தை கரம் சிங் தூர், குண்டு எறிதல் விளையாட்டை தேர்வு செய்து, தனி முத்திரை பதிக்க விரும்பினார். இதற்கு நல்ல பலன் கிடைத்துள்ளது. அதுதான் தேஜிந்தர்பால் சிங் வாழ்க்கையின் சிறந்த முடிவாக மாறியது. 1980-களில் ‘கிலா ராய்ப்பூரில்’ நடைபெற்ற கிராமப்புற ஒலிம்பிக் போட்டியில் பல்வேறு தடைகளையும் தாண்டி சொந்த மாநிலத்திற்காக பதக்கங்களை குவித்து ‘ஹீரோவாக’ வலம் வந்தவர் கரம் சிங்கால் தொடர்ந்து ஜொலிக்க முடியாமல் விவசாயத்தில் ஈடுப்பட்டாலும் மகனை சிறந்த விளையாட்டு வீரராக உருவாக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார்.

6 அடி 4 அங்குலம் உயரமும் 135 கிலோ எடை கொண்ட தேஜிந்தர் சிங், கடந்த ஆண்டில் புவனேஸ்வரில் நடந்த ஆசிய தடகள சாம்பியன் போட்டியில், 19. 77 மீட்டர் தூரத்திற்கு குண்டு எறிந்து வெள்ளிப் பதக்கத்தை தட்டி வந்தார். 0.03 மீட்டர் குறைவாக எரிந்ததால் நூலிழையில் தங்கப்பதக்கத்தை இழந்தார். பதக்கம் வென்று நாட்டிற்கு பெருமை சேர்த்த அவருக்கு இந்திய கடற்படையில் விளையாட்டு வீரர்களுக்கான இட ஒதுக்கீட்டில் வேலை கிடைத்ததால் சர்வதேச அளவிலான பயிற்சிக்கும் போட்டிகளுக்கு சென்றுவரவும் பெரும் துணையாக இருந்தது. இந்த ஆண்டு காமன்வெல்த் போட்டியில் பங்கேற்று 19.42 மீட்டர் தூரத்திற்கு குண்டு எறிந்தும் பதக்கம் பெறும் வாய்ப்பை இழந்த சோகத்தில் சொந்த ஊர் திரும்பினார். அப்போது, தந்தைக்கு புற்று நோயின் தாக்கம் அதிகமானதால் மனமுடைந்து விளையாட்டுக்கு முழுக்கு போட முடிவு செய்தார். மகனின் பதக்க கனவு எந்த வகையிலும் பாதிக்கப்படக்கூடாது என்பதில் கவனமாக இருந்த தந்தை கரம் சிங், மகனை மத்தியப்பிரதேச மாநிலம் தர்மசாலாவுக்கு அனுப்பி ஆசிய விளையாட்டுக்கு முழுமையாக தயார் செய்தார்.

பதக்கக் கனவோடு ஆசிய விளையாட்டுப் போட்டியில்களம் இறங்கிய தேஜிந்தர்பால் சிங், ஆரம்பம் முதல் பெரும் சவாலை எதிர்கொண்டார். ஆனாலும், நம்பிக்கையை இழந்துவிடவில்லை. இறுதி வாய்ப்பில் பதற்றமின்றி 20. 75 மீட்டர் தூரத்திற்கு எரிந்து தங்கப்பதக்கத்திற்கு முத்தமிட்டார். இதற்கு முன்பு 20.69 மீட்டர் தூரத்திற்கு குண்டு எறிந்ததே சாதனையாக இருந்தது. அதையும் தனது முந்தைய தேசிய சாதனையையும் முறியடித்தார். தந்தை புற்றுநோயால் பாதிக்கப்பட்டு இருந்தாலும் மனம் தளராமல் போராடி தங்கம் வென்று நாட்டுக்கு பெருமை சேர்த்தார்.

Leave a Reply

You must be logged in to post a comment.