மதுரை,
மோடியின் தோல்வியை மறைக்கவே சமூகசெயற்பாட்டாளர்கள் மீதான கைது நடவடிக்கை. இது வன்மையாகக் கண்டிக்கத்தக் கது என வழக்கறிஞர்கள், பேராசிரியர்கள், எழுத்தாளர்கள் கூறியுள்ளனர்.

இது தொடர்பாக மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்த வழக்கறிஞர்கள் லஜபதிராய், ஹென்றி டிபேன், அஜ்மல்கான், பேராசிரியர்கள் முரளி, விஜயகுமார், நாடக ஆசிரியர் பேரா.இராமசாமி, எழுத்தாளர் அ.முத்துக் கிருஷ்ணன் ஆகியோர் கூறியதாவது:-  கடந்த ஆக.28-ஆம் தேதி மனித உரிமை செயல்பாட்டாளர்கள் சுதா பரத்வாஜ், வெர்னான்கான்சால்வஸ், அருண் பெரைரா, கவுதம் நவ்லகா மற்றும் எழுத்தாளர் வரவர ராவ் ஆகியோர் ஊஃபா சட்டத்தின் கீழ் மகாராஷ்ரா காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ளனர். இது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. மேலும் கோவா ஐஐஎம் பேராசிரியர் ஆனந்த்டெல்டும்டே, பாதிரியார் ஸ்டான் சாமி உள்ளிட்டோர் சோதனைக்குட்படுத்தப்பட்டு அவர் களது உடைமைகள் காவல்துறையால் எடுத்துச் செல்லப்பட்டுள்ளது.

பண மதிப்பு நீக்கம், ஜிஎஸ்டி, பெட்ரோல்-டீசல் விலை உயர்வு, சுங்கக் கட்டணக் கொள்ளை உள்ளிட்ட அனைத்து நடவடிக்கைகளிலும் தோல்வியைத் தழுவியுள்ள மோடி அரசு அதனை மடைமாற்றம் செய்யவும் சனாதன்சன்ஸ்தா அமைப்பு நடத்திய கொலைகளை மறைக்கவும், தங்களை எதிர்ப்பவர்களை அச்சுறுத்தவுமே இந்த கைது நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. நடைபெறுவது மோடி, அமித் ஷா என்ற தனிநபர்களின் ஆட்சி அல்ல; அது சட்டத்தின் ஆட்சி. சட்டமே மேலானது. சட்டத்தின் ஆட்சி தான் ஜனநாயகத்தின் அடிப்படை. ஆனால்,தற்போதைய மத்திய-மாநில பாஜக அரசுகள், கட்சி மற்றும் துணை அமைப்புகள் நிகழ்த்திவரும் வன்முறைகள் அரசியலமைப்பின் அடிப்படையிலான சட்டத்தின் ஆட்சியை சீர்குலைக்கும் நோக்கம் கொண்டவையாக உள்ளன.இந்தச் சீர்குலைவு வேலை ஒருங்கிணைந்த திட்டத்தின் அடிப்படையில் அரசின் உள்ளிருந்தும் வெளியிலிருந்தும் நிகழ்த்தப்படுகின்றன. வெளியிலிருந்து பசுக் குண்டர்கள், சனாதன் சன்ஸ்தா என்ற வடிவங்களிலும் உள்ளிருந்து போலி என்கவுண்ட்டர், தேசிய பாதுகாப்பு, ஊஃபா சட்டக் கைதுகள் என்ற முறையிலும் நடைபெறுகிறது. இந்த அநீதிகளை எதிர்ப்பவர்கள் தேச விரோதிகள், பயங்கரவாதிகள், நக்சலைட்டுகள், இந்து விரோதிகள், நகர்ப்புற நக்சல்கள் என முத்திரை குத்தி ஊஃபாபோன்ற கருப்புச் சட்டங்கள் மூலம் ஒடுக்கப்படுகின்றனர். ஆனால், நேரடியாக கலவரம், கொலை நடவடிக்கைகளில் ஈடுபடும் சனாதன் சன்ஸ்தா, பஜ்ரங்தள் உள்ளிட்ட இந்துத்துவ பயங்கரவாத அமைப்புகள் மீது ஊஃபா சட்டம் பாய்வதில்லை. மாறாக அவர்களது குற்றங்கள் அரசால் மறைக்கப்படுகிறது.

தமிழகத்திலும் ஒடுக்குமுறை உச்சத்தில் உள்ளது. ஸ்டெர்லைட், எட்டு வழிச்சாலை, பாஜகவை எதிர்ப்போர் என அனைவரும் தேசியபாதுகாப்புச் சட்டம், ஊஃபாவில் கைது செய்யப்பட்டு வதைக்கப்படுகின்றனர். வழக்கறிஞர்கள், எழுத்தாளர்கள், கவிஞர்கள், பத்திரிகையாளர்கள் மிரட்டப்படுகின்றனர். இந்த நிலை நீடித்தால் சட்டத்தின் ஆட்சி என்ற நிலை மாறிசர்வாதிகாரம் நிலை கொள்ளும். போராடிப் பெற்ற உரிமைகள் அனைத்தும் பறிபோகும்.ஜனநாயகத்தில் மாற்றுக்கருத்து என்பது பாதுகாப்புச் சட்டம் போன்றது. மாற்றுக் கருத்தை அனுமதிக்காவிட்டால் அது வெடித்துவிடும் என்ற உச்சநீதிமன்றத்தின் கருத்தை அரசுக்கு நினைவூட்டுகிறோம்.இந்த அநீதிகளுக்கு எதிராக அரசியல் சட்டம்,சட்டத்தின் ஆட்சியைக் காக்க அனைத்துத் தரப்புமக்களும் போராட முன்வர வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Leave a Reply

You must be logged in to post a comment.