புகழ்பெற்ற அரசியல் நாடகக் கலைஞரும், எழுத்தாளருமான மதுரையைச் சேர்ந்த மருத்துவர் க.செல்வராஜ் எழுதிய “மௌன மொழி’’, “விடுதலைப் போரும், தமிழ் நாடகக்காரர்களும்’’ என்ற இரு நூல்களின் வெளியீட்டு விழா மதுரை காமராசர் பல்கலைக்கழகக் கல்லூரி வளாகத்தில் தொல்காப்பியர் அரங்கத்தில் நடைபெற்றது.

மதுரை மாநகர் மாவட்ட தமுஎகச நரிமேடு கிளையும், அய்யர்பங்களா கிளையும் இணைந்து இந்த விழாவை நடத்தின.மதுரை நாடக இயக்கத்தைச் சேர்ந்த சிறார் தப்பாட்ட முழக்கத்தோடு விழா தொடங்கியது. கரிசல்குயில் கிருஷ்ணசாமி தனது இனிய குரலில் இரண்டு பாடல்கள் பாடியது இனிமையான துவக்கத்தை வழங்கியது. இரண்டு நூல்களையும் வெளியிட்டு தமுஎகச மாநிலத் துணைச் செயலாளர் ஸ்ரீரசா துவக்க உரையாற்றினார்.  “ மாபெரும் மக்கள் கலைஞன் சப்தர் ஹஷ்மியின் மரணம் நாடு முழுக்க வீதி நாடகக் கலைஞர்களைத் தட்டி எழுப்பியது. ல நாடகக் குழுக்கள் உருவாயின. டாக்டர் செல்வராஜின் நாடக வாழ்க்கை அவ்வாறு தான் ஆரம்பமாயிற்று. சப்தர் ஹஷ்மி நாடகக்குழு, பின்னர் மதுரை நாடக இயக்கம் என்று கிட்டத்தட்ட நாற்பது ஆண்டுகளாக ஒரு இடதுசாரி அரசியல் கலைஞனாகத் தன் வாழ்வை வடிவமைத்துக் கொண்டவர் டாக்டர் செல்வராஜ். எட்டு வருடங்களுக்கும் மேல் உயிர்ப்போடு இயங்கிவரும் மதுரை தமுஎகச நரிமேடு கிளையில் தொடர்ந்து அவர் வாசித்த கவிதைகளின் தொகுப்பும், விடுதலைப் போரில் தமிழ் நாடகக் காரர்களின் பங்களிப்பை ஒரு சுருக்க வரலாறாகத் தந்திருக்கும் நூலும் செல்வராஜின் காத்திரமான பங்களிப்புகளாகும்” என்று கூறி இரு நூல்களையும் வெளியிட்டார் ஸ்ரீரசா. “மேலும் தோழர்களின் குடும்பத்தினர், நண்பர்கள், தோழர்கள் புடை சூழ இவ்விழா இலக்கியத்தைச் சமூகத்தில் கொண்டுபோய்ச் சேர்க்கும் இனிய விழாவாகவும் அமைந்துள்ளது” என்றார்.

முனைவர் பி.சாந்தி தொடங்கி, பல தோழர்களின் இணையர்களாக உள்ள இருபது பெண்கள் நூல்களைப் பெற்றுக் கொண்டனர். அதைத் தொடர்ந்து தோழர் செல்வராஜின் பால்ய கால நண்பர்கள் பலரும் நூல்களைப் பெற்றுக் கொண்டனர். பின்னர் “விடுதலைப் போரும், தமிழ் நாடகக்காரர்களும்’’ என்ற நூல் குறித்து மிகச் சிறந்த நாடக இயக்குநரும், எழுத்தாளரும், வேலூர் தூயநெஞ்சக் கல்லூரி தமிழ்த்துறைப் பேராசிரியருமான முனைவர் கி.பார்த்திபராஜா சிறப்புரை ஆற்றினார். கூத்துக் கலைஞராகத் தம்மை அறிமுகம் செய்து கொண்டு, இடையிடையே கணீரென்ற குரலில் கானமும் இசைத்துத் தமது உரையைச் செறிவாக்கினார். “இந்திய விடுதலைப் போராட்டத்தை வெறும் முப்பது பக்கங்களில் மிகச் செறிவாகவும், சரியான விமர்சனங்களோடும் டாக்டர் செல்வராஜ் இந்த நூலில் எழுதியுள்ளார். நாடகத்தின் திரைச்சீலை போல இத்தகைய பின்னணியை விரித்துவிட்டு, அதன் பின்னணியில் தமிழ்நாடகக் காரர்கள் எவ்வாறு தத்தமது பங்களிப்பைச் செய்துள்ளனர் என்பதை மிக அழகாகத் தொகுத்துள்ளார்” என்று அவர் தமது உரையில் எடுத்துரைத்தார்.

அதைத்தொடர்ந்து “மௌன மொழி’’ கவிதை நூல் குறித்து, பிரபல பட்டிமன்றப் பேச்சாளரும், கவிஞரும், சிறுகதை எழுத்தாளருமான மதுரை பாலன் சிறப்புரை ஆற்றினார். எனக்குத் தெரிய படிக்கிற காலத்திலிருந்து இன்று வரை இடது சாரி இயக்கத்திற்குத் தனது தொடர்ந்த பங்களிப்பை அரை நூற்றாண்டுகளாகச் சோர்வுறாமல் செய்து வருபவர் செல்வராஜ். ஆரம்பத்தில் கவிதைகளில்தான் தனது இலக்கியப் பயணத்தைச் செல்வராஜ் துவக்கினார். பின்னர் நாடகம் கவனம் பெற்றபிறகு கவிதையை நெடுங்காலம் விட்டு விட்டுத் திரும்பவும் நரிமேடு கிளையின் தூண்டுதலால் தனது கவிதைப் பயணத்தைத் தொடர்ந்துள்ளார் என்று சொல்லி செல்வராஜ் கவிதைகளை வெகு நேர்த்தியாக அறிமுகம் செய்தார். “அதைத் தொடர்ந்து ஏற்புரையாற்றிய டாக்டர் செல்வராஜ் நான் டாக்டர் என்பதை விட ஒரு தோழர் என அழைக்கப்படுவதையே பெரிதும் விரும்புகிறேன்” என்றார்.

Leave a Reply

You must be logged in to post a comment.