சென்னை,
இருண்ட காலத்தில் நாம் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். எதையும் பேச எழுத இயலாத சூழல் நிலவுகிறது. ஒரு மொழி, ஒரு பண்பாடு, ஒருமதம் என்று பேசிக் கொண்டிருக்கிறார்கள். இது ஒரு ஆபத்தான சூழல். இதை அனைவரும் இணைந்து எதிர் கொண்டு வீழ்த்தவேண்டும் என்று நாடாளுமன்ற உறுப்பினரும் திமுக மகளிர் அணி செயலாளருமான கவிஞர் கனிமொழி கேட்டுக்கொண்டார். ‘சொல்லேர் உழவர் கலைஞருக்கு மரணமில்லை’ என்ற பொருளில் த.மு.எ.க.ச. வட சென்னை, தென்சென்னை மாவட்டங்கள் சார்பில் புகழஞ்சலிக் கூட்டம் ஆக.31 அன்று நடைபெற்றது. இதில் பங்கேற்று உரையாற்றிய கவிஞர் கனிமொழி, கலைஞர் நிறைவாழ்க்கை தான் வாழ்ந்தார் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. மகளாகிய எனக்கு இன்னும் சிறிது காலம் கலைஞர் வாழ்ந்திருக்கலாம் என்றே தோன்றுகிறது.

தமிழகத்தின பல பகுதிகளில் உள்ள இளைஞர்கள் முதல் முதியவர்கள் வரை கலைஞரோடு தங்களுக்கான அனுபவத்தை தேதி, மாதம், ஆண்டு என்று குறிப்பிட்டுப் பேசுகிறார்கள். அவர்கள் தூரத்திலிருந்து பார்த்ததால் அந்த சம்பவம் பசுமையாக நினைவில் இருக்கிறது. நாங்கள் அருகிலேயே இருந்ததால் அப்பா என்ன சொன்னார். எப்போது சொன்னார். எதற்கு சொன்னார் என்பதையெல்லாம் நினைவில் வைத்துக்கொள்ளத் தவறிவிட்டோமோ என்ற எண்ணம் எனக்கு ஏற்படுகிறது. கையில் அள்ளிய தண்ணீர் கை நழுவி போனதைப் போல உணர்கிறேன். ஊடகங்கள் கலைஞர் மீது பாரபட்ச நிலையைத்தான் கையாண்டன. அவர் பணிகள் மீது கரு மையைப் பூசி விட முனைந்தனர். நேர்மறை எதிர்மறை என்ற இரண்டையும் ஊடகங்கள் எம்.ஜி.ஆருக்கு, ஜெயலலிதாவிற்கு பயன்படுத்தியதை போல, கலைஞருக்குப் பயன்படுத்தவில்லை. பெரும்பாலும் எதிர்மறை நிலையைத்தான் எடுத்தன. நமது உரிமைகள் பறிபோகின்றன. எதையும் தட்டிக் கேட்காத ஓர் அரசுதான் நமக்குக் கிடைத்திருக்கின்றது. இருண்டகாலத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். மாற்று ஒளி கிடைக்க நாம் அனைவரும் இணைந்து செயல்படவேண்டும் என்றார்.

ஓவியர் டிராட்ஸ்கி மருது:
செம்மொழி மாநாட்டுக்கான பணிகள் தொடங்கி இருந்த நேரம் அது. மாநாட்டு ஊர்வலத்தில் அணிவகுத்து வரும் ஊர்திகளை வடிவமைத்துத் தயார்படுத்தும் பணி எனக்கு அளிக்கப்பட்டிருந்தது. ஓவியங்களையும் ஊர்திகளையும் தயார் செய்ததோடு வரிசைப்படுத்தி எது முதலில் வரவேண்டும் எதுகடைசியில் வரவேண்டும் என்பதை யெல்லாம் திட்டமிட்டு அணிப் படுத்தினேன். புரட்சியாளர்களை நான் வடிவமைத்து இருந்ததைப் பார்த்துவிட்டு இந்த ஓவியங்களை பார்த்தவுடன் பிரெஞ்சுப் புரட்சியே என் கண்முன் நிழலாடுகிறது என்று கலைஞர் பாராட்டினார். ஒரு நிமிடம் உணர்ச்சிப் பிரவாகமாக நின்றேன். எவருக்கும் எதற்காகவும் குனிந்து வணங்கிப் பழக்கப்படாத நான் இரு கைகளையும் குவித்து குனிந்து தலை வணங்கி அவருக்கு நன்றி தெரிவித்தேன். அப்போது என் கைவிரல்களைப் பற்றிக் கொண்ட கலைஞர் அவர்கள் பாராட்டி மகிழ்ந்தது வாழ்நாளில் என்னால் மறக்க முடியாது என்று நெகிழ்ச்சியோடு புகழஞ்சலி செலுத்தினார் ஓவியர் டிராட்ஸ்கி மருது.

ஆதவன் தீட்சண்யா:
ஒடுக்கப்பட்ட மக்களுக்கு தன்னம்பிக்கையையும் கம்பீரத்தையும் கொடுத்தது தி. மு.க. என்பதைஎன் தந்தையின் மூலமாக நான்தெரிந்து கொண்டேன். இன்று வரைசமூக நீதிக்காக திராவிட இயக்கம் செய்துவரும் பங்களிப்பை மறக்க முடியாது. இட ஒதுக்கீடு என்பதற்காக மக்களை வகைப்படுத்தி பிற்படுத்தப்பட்டவர்கள் யார் என்பதை முதலில் உறுதி செய்தது தமிழ்நாடு தான். அந்த வகையில் இட ஒதுக்கீடு என்பதற்கு வழிகாட்டியதோடு அருந்ததியர்களுக்கு 3 சதவீத இடஒதுக்கீடு வழங்கியது கலைஞர் ஆட்சி என்பதை மறுக்க முடியாது.இட ஒதுக்கீடு மட்டும் அல்ல சமூகநீதி.ஒடுக்கப்பட்ட மக்கள் கௌரவத்தோடும் தன்னம்பிக்கையோடும் தலைநிமிர்ந்து வாழ வழி வகுப்பதுதான் சமூகநீதி . இட ஒதுக்கீட்டை உச்சநீதிமன்றம் கேள்விக்குள்ளாக்கி இருக்கும் நிலையில், கலைஞர் நினைவு கூரத்தக்கவராக விளங்குகிறார் என்று அஞ்சலி உரையில் குறிப்பிட்டார் தமுஎகச பொதுச் செயலாளர் ஆதவன் தீட்சண்யா.

செந்தில்நாதன்
தமிழுக்கு கலைஞர் செய்துள்ள பங்களிப்பை மறக்கவும் முடியாது; மறுக்கவும் முடியாது என்று வழக்கறிஞரும் தமுஎகச – வின் மூத்தத் தலைவருமான சிகரம் செந்தில்நாதன் புகழஞ்சலி செலுத்தினார் . தமிழ் பயிற்று மொழி என்பதற்கு சட்டம் , கட்டாயமாக அனைவரும் தமிழ் படிக்க வேண்டும் என்பதற்கு பள்ளிகளில் தமிழை முதல் மொழியாக ஆக்கியது என்பவை அவருக்கான சிறப்புகள். சமச்சீர் கல்வி என்ற கோட்பாடு பற்றி நாங்கள் குழுவாக சென்று அவரிடம் எடுத்துரைத்தபோது அதனை செவிமடுத்து முழுமையாக உள்வாங்கிக் கொண்டு அதற்காக ஒரு சட்டத்தை இயற்றியவர் கலைஞர். எதையும் காது கொடுத்து கேட்டு ஆய்வு செய்து, அதன் பிறகு முடிவு செய்யும் சிறந்த குணம் அவரிடம் இருந்தது. அதுதான் அவரை அரசியலுக்கு அப்பாற்பட்டு அனைவராலும் மதிக்க செய்தது என்றும் அவர் கூறினார்.

பிரசன்னா ராமசாமி:
பேச்சுரிமை, எழுத்துரிமை, படைப்புரிமை எல்லாம் அச்சுறுத்தலுக்கு உள்ளாகி இருக்கிறகாலத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். தினம்தோறும் ஏதாவது ஒரு நிகழ்வு நமது நெஞ்சை நெருடுகிறது. அச்சப்படும் சூழலில் வாழ வேண்டியுள்ளது. இந்த நிலையில் ஒவ்வொரு நாளும் கலைஞரை நினைக்க வேண்டிய கட்டாயம் எனக்கு ஏற்படுகிறது. அவசர நிலை காலத்தில் அதைத் துணிச்சலாக எதிர்கொண்டு ஜனநாயகத்தை நிலை நிறுத்துவதில் அவர் எவ்வளவோ சிரமங்களை அனுபவித்தார். அவரது குடும்ப உறுப்பினர்களும் இந்த அவசர நிலை காலத்தில் தப்பவில்லை . வடமாநிலத் தலைவர்களுக்கெல்லாம் அன்று தமிழகம்தான் புகலிடமாக இருந்தது. இன்றைக்கு நமக்கு மன வலிமையையும் கொடுமைகளை எதிர்த்து நிற்க வேண்டும் என்கிற உணர்வையும் ஏற்படுத்துவதாக கலைஞரின் நினைவுகள் இருக்கின்றன. அவரை நினைப்பது இப்போது இருக்கிற பிரச்சனைகளிலிருந்து நம்மை ஆற்றுப்படுத்தி வாழவைக்கிறது என்று தனது அஞ்சலி உரையில் நாடகவியலாளர் பிரசன்னா ராமசாமி குறிப்பிட்டார்.

இந்த அஞ்சலி நிகழ்வில் த.மு. எ.க.ச. தலைவர்கள் இரா.தெ. முத்து,எஸ்.கருணா, பிரளயன், அ.குமரேசன், மயிலைபாலு , சி.எம்.குமார் உள்ளிட்டோரும் பேசினர். கவிஞர் ஏகாதசி அஞ்சலிக் கவிதை வாசித்தார்.இரு மாவட்டங்களின் செயலாளர்களான ராஜேந்திரகுமாரும் வெ . ரவீந்திர பாரதியும் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தனர். த. மு. எ. க. ச. நினைவாக ட்ராட்ஸ்கிமருது வரைந்த ஓவியத்தை ஆதவன் தீட்சண்யாவும் புகழஞ்சலி சொற்சித்திரத்தை கி.அன்பரசனும் கவிஞர் கனிமொழியிடம் வழங்கினர்.

Leave a Reply

You must be logged in to post a comment.