பாலஸ்தீன அகதிகளுக்கு ஐக்கிய நாடுகள் சபையின் நிவாரண அமைப்பின் மூலமாக அளிக்கப்பட்டுவரும் உதவிகளுக்கு தான் செய்துவரும் நிதி உதவியை நிறுத்துவதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. இது உலகின் மனச்சாட்சியை உலுக்கியுள்ளது. அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் ஈவிரக்கமற்ற இந்த முடிவுக்கு உலகம் முழுவதும் உள்ள அறிஞர்களும், சர்வதேச நோக்கர்களும் கடும் கண்டனம் தெரிவித்திருக்கிறார்கள்.

ஐக்கிய நாடுகள் சபையின் நிவாரண பணிகள் அமைப்பின் செய்தித் தொடர்பாளர் கிரிஷ் குன்னஸ், அமெரிக்காவின் முடிவு இந்த பூமியின் மிக மிக மோசமாக பாதிக்கப்பட்ட – உரிமைகள் மறுக்கப்பட்ட லட்சக்கணக்கான குழந்தைகள் உள்ளிட்ட அகதிகளை முற்றிலும் நிர்க்கதியாக விடுவதாகும் என்று வேதனை யுடன் குறிப்பிட்டுள்ளார்.  ஐ.நா. நிவாரணப் பணிகள் அமைப்பிற்கு பல்வேறு நாடுகள் நிதி உதவி செய்தாலும் அமெரிக்காவிடமிருந்தே கணிசமான தொகை வந்து கொண்டிருக்கிறது. 305 மில்லியன் டாலர் நிதி அளித்துக் கொண்டிருந்த அமெரிக்கா இந்தாண்டு துவக்கத்தில் அதை வெறும் 60 மில்லியன் டாலராக வெட்டியது. தற்போது அதையும் நிறுத்துவதாக டிரம்ப் நிர்வாகம் அறிவித்துள்ளது. இந்த முடிவுக்கு, மேற்படி நிவாரணப் பணிகள் அமைப்பு திறம்பட செயல்படவில்லை என்று ஒரு சொத்தையான காரணத்தை காட்டியுள்ளது. 1948ஆம் ஆண்டு இஸ்ரேல் என்றொரு நாடு உருவாக்கப்பட்ட போது 7 லட்சத்திற்கும் அதிகமான பாலஸ்தீன மக்கள், தங்களது சொந்த நகரங்களை விட்டு, கிராமங்களை விட்டு பலவந்தமாக வெளியேற்றப்பட்டார்கள். இஸ்ரேலின் உதயம், பாலஸ்தீனத்தின் அழிவாகமாறியது. அந்த சமயத்தில் அகதிகளாக விடப் பட்ட பாலஸ்தீன மக்களுக்கு உதவுவதற்காக ஐக்கிய நாடுகள் சபையின் சார்பில் ஒரு தற்காலிக ஏற்பாடாக ஐ.நா. நிவாரணப் பணிகள் அமைப்பு உருவாக்கப்பட்டது.

தற்காலிகமாக உருவாக்கப்பட்ட அமைப்பின் பணி நிரந்தரமாக மாறிப்போனது வரலாற்றின் துயரமாகும்.  கடந்த 70 ஆண்டு காலமாக பாலஸ் தீனத்தின்மீது இஸ்ரேலும், இஸ்ரேலைப் பாதுகாப்பதாகக் கூறி அமெரிக்க ஏகாதிபத்தியமும், அதன் கைக் கூலிகளும் நடத்திய தாக்குதல்கள் மனிதகுல வரலாற்றில் மிக மிக மோசமானவையாகும். மேற்குகரை மற்றும் காசா திட்டு ஆகிய பாலஸ் தீனத்தின் பிரதான பகுதிகளை இஸ்ரேலின் படைகள் தினந்தோறும் துவம்சம் செய்து வருகின்றன. இன்றைய நிலையில் இஸ்ரேலால் ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்தீனத்தின் பகுதிகளிலிருந்து வெளியேற்றப்பட்டு 50லட்சத்திற்கும் அதிகமான பாலஸ்தீனர்கள் சொந்த பூமியிலேயே அகதிகளாக துயரத்தின் பிடியில்தள்ளப்பட்டிருக்கிறார்கள். இன்னும் குறிப்பாக 10 ஆண்டுகாலமாக நீடித்து வரும் பொருளாதாரத்தடைகள் உள்ளிட்ட பல்வேறு விதமான தடை களால் பாலஸ்தீனக் குழந்தைகளுக்கு உணவு கூட கிடைக்கவிடாமல் செய்யப்பட்டிருக்கிறது. இந்நிலையில், சமீபத்தில் ஜெருசலேமை இஸ்ரேலின் தலைநகராக அங்கீகரித்த டிரம்ப் நிர்வாகம் பாலஸ்தீனர்களை ஒட்டுமொத்த அழித்தொழிக்க முயற்சி மேற்கொண்டிருப்பது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. அதன் வெளிப் பாடே நிவாரண உதவி ரத்து. ஒட்டுமொத்த உலகமும் ஒரே குரலில் கண்டிக்க வேண்டிய பயங்கரம் இது.

Leave a Reply

You must be logged in to post a comment.