குறுக்கே வந்த அப்பா என்ன செய்தார் தெரியுமா ? பியானோ, கிடார், கிளாரினெட் எல்லாம் கற்றுக்கொள்ளச் சொன்னார். அப்போது எனக்கு 16 வயதுதான். ஏற்கெனவே வீணையும் மிருதங்கமும் கற்று கொஞ்சம் பேரும் கிடைத்திருந்தது. சினிமா பாடல்கள் மேலிருந்த மோகத்தை எச்.எம்.வி. ரெக்கார்ட் பிளேயர் வாங்கிக் கொடுத்துத் தூபம் போட்டிருந்தார், அப்பா.  இந்த நேரத்தில் பியானோ, கிளாரினட், கிட்டார் என்பதெல்லாம் அலுப்புத் தட்டும் விதமாகத்தான் இருந்தது. ஆனால் “எந்த ஒரு வேலையை எடுத்தாலும் அதில் உச்சத்தைத் தொட்டுவிட வேண்டும் ” என்கிற அப்பாவின் அந்தகுணம் இப்போதும் என் மீது பிரதிபலித்தது. அவர் சொன்னதை ஏற்றுக் கொண்டேன்.  பாளையங்கோட்டையில் புதுப்பேட்டை நடுத் தெருவில் அந்த இசை மேதையின் வீடு. அவரிடம் இசை கற்றுக்கொள்ள மிதிவண்டியில்தான் செல்ல வேண்டும் . மிதிவண்டியில் செல்லும் களைப்போடு முடிந்தவரை அந்த இசைக்கருவிகளை வாசிக்கக் கற்றுக்கொண்டேன். வாசிப்பில் ஏதாவது குறை ஏற்பட்டால் அந்த இசை மேதை என்னைத் தண்டிக்கமாட்டார் . அது வித்தியாசமாகவும் வியப்பானதாகவும் இருக்கும்.உங்கள் கற்பனைக்கும் அப்பாற்பட்டது. சமையல் கட்டிலிருந்து கரண்டியை எடுத்துத் தாம்பாளத்தில் ஓங்கித் தட்டுவார் . தண்டனையும்கூட ஒலிவடிவில் இருக்கவேண்டும் என்று இசை ஆசிரியர் நினைத்தார் போலும்!

இப்படிப்பட்ட செயலின் மூலம் நம்முடைய குறையை நாமே உணர்ந்து கொள்ள வேண்டும் என்பது அவரது கருத்தாக இருக்கலாம். இப்படியாக நான் இசைப் பயிற்சி பெற்றுக் கொண்டிருந்தபோது ஒருநாள் அவர் தனது நண்பருடன் பேசிக் கொண்டிருந்தார். இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக்கொண்டு நான் பியானோவில் எம். எஸ். விஸ்வநாதன் பாடல்களை வாசித்தேன். அதைக் கேட்டுவிட்டு அவர் செய்யவேண்டியதைச் செய்துவிட்டார். அப்பாவிடம் நடந்தது நடந்தபடியே சொல்லிவிட்டார். “உங்கப் பையன் எனது இசையை விட சினிமாப் பாட்டை பிரமாதமாக வாசிக்கிறான். ஆகவே அவனுக்கு கிளாஸ் தேவையில்லை ” என்று சொல்லிவிட்டார். அப்புறம் என்ன ! வீட்டில் இசைமழைதான். இதற்கு என்ன அர்த்தம் என்பதை உங்களால் ஊகிக்க முடியும்தானே! ஒரு வாரம் எனது தந்தை என்னை உச்சஸ்தாயியில் திட்டித்தீர்த்தார். நானும் வேறுவழியின்றி வாங்கிக் கட்டிக்கொண்டேன் .  இசையில் தான் எனக்கு ஆர்வம் இருந்தது . ஆனால் படிப்பில் ஆர்வம் குறைவு தான் . என் தங்கை பள்ளியிலேயே முதல் மாணவியாக தேர்ச்சி பெற்றாள். நானோ அந்தக்கால புகுமுக வகுப்பில் தேர்ச்சி அடையவில்லை. சிலபாடங்களை பாக்கி வைத்துவிட்டேன் . பிறகு எப்படியோ மெள்ள மெள்ள கஷ்டப்பட்டு பாடங்களை முடித்து ஒரு வழியாகப் புகுமுக வகுப்பைக் கடந்துவிட்டேன். அதற்குமேல் படிக்க நான் அவ்வளவு அக்கறை காட்டவில்லை.

1978க்குப் பிறகு அதாவது பத்தொன்பதாவது வயதுக்குப் பிறகு ஏராளமான கச்சேரி வாய்ப்புகள். இரவு முழுவதும் கச்சேரி நடக்கும். அதிகாலை நாலரை மணிக்கு நடந்தே வீட்டுக்குத் திரும்புவேன். அப்போது அந்தப் பகுதியில் இருந்த அக்ரஹாரத்தில் எல்லார் வீட்டிலும் கோலம் போட்டுக் கொண்டிருப்பார்கள். என்னை அவர்கள் ஒரு இளைஞனைப் போலவே பார்க்க மாட்டார்கள். பேயைப் பார்ப்பது போல பார்ப்பார்கள் . சிலரோ என் காதுபடவே கேலி செய்வார்கள். ” என்னடா அம்பி ! ராக்கொட்டு அடிச்சிட்டு வரியாடா ” என்று கேலி பேசுவார்கள். இதையெல்லாம் பொறுத்துக் கொண்டுதான் நான் இசையின் மீதான காதலை, இசையின் மீதான ஆர்வத்தை வளர்த்துக் கொண்டேன்.  இசைமீது எனக்குக் காதலென்றால் என் இசைகேட்டு என்மீது காதல்கொண்டார் ஒருபெண். இளமைக்காலத்தில் இப்படியொரு அங்கீகாரம் கிடைப்பது பல விருதுகள் பெற்றதற்கு சமமல்லவா? நான் மதுரைக்கு இசைக்கச்சேரி செய்வதற்காக சென்றபோதுதான் அந்தப் பெண்ணைச் சந்தித்தேன். அவர் பெயர் சாந்தி. என் இசை மீது வைத்த ஆர்வம் பின்னர் என் மீதான காதலாக மாறியது. நானும் அவருடைய இசை ஆர்வத்தைக் கண்டு மகிழ்ந்து காதலியாக ஏற்றுக்கொண்டேன். எங்கள் இருவரின் நட்பு தொடர்ந்தது. காதலுக்கு குறுக்கே நின்றது எது? திருநெல்வேலி, கடையம் சரகம் ரவணசமுத்திரம் பால்முகமது என் இயற்பெயர் . இப்போது மேலேயுள்ள கேள்விக்கு விடை கிடைத்திருக்கும்.

இருவேறு மதங்கள் . அதனால் இரண்டு வீடுகளுக்கும் எங்கள் காதல் ஏற்புடையதாக அமையவில்லை .  பாரதி சொன்னதைப் போல நாடகத்தில், திரைப்படத்தில், தெருவோரத்தில் ,கிணற்றடியில் காதல் என்றால் அதை எல்லாரும் ஏற்றுக் கொள்வார்கள்; ரசிப்பார்கள். ஆனால் அதே காதல் அவரவர் வீட்டுப் பிள்ளைகளுக்கு வந்தால் ஏற்கமாட்டார்கள். இதுதான் கால காலமாக நடந்து கொண்டிருக்கிறது. அது எங்கள் வாழ்க்கையிலும் நடந்தது. இருந்தாலும் குடும்பத்திற்காக, பெற்றோர்களுக்காக, காதலைக் கைவிட்டுவிட நாங்கள் தயாராக இல்லை . இரு மனம் ஒன்றிய பின் இரு மதம் என்பது எங்களுக்குத் தடையாக இருக்கவில்லை .  இரண்டு வீடுகளிலுமே மறுத்த பின்நாங்கள் திருச்சியில் ஒரு இசை நிகழ்ச்சியின் போது , எங்கள் நண்பர்களின் உதவியோடு , இசை உலக நண்பர்களின் உதவியோடு இல்வாழ்க்கையைத் தொடங்கினோம். எளிமையாகப் பதிவுத் திருமணம் செய்து கொண்டு வாழ்க்கையை தொடங்கினோம் . எங்களுடைய பொருளாதார சிக்கல் எப்படி இருந்திருக்கும் என்பதை உங்களால் ஊகித்துக் கொள்ள முடியும். அதற்கு எத்தனையோ கதைகள் , எத்தனையோ செய்திகள், எத்தனையோ சம்பவங்கள் இன்றைக்கும் கண்கூடாகத் தெரிகின்றன. வாழ்க்கை அனுபவங்களும் இருக்கின்றன. ஆகவே அது பற்றி விவரிக்க வேண்டிய அவசியமில்லை .

பொருளையும் வாழ்க்கையையும் தேடி நாங்கள் சென்னை நகருக்குப் புறப்பட்டோம் . சென்னைக்கு வந்தபின் எங்களுக்கு சோதனைகளும் இருந்தன. சாதனைகளுக்கும் வாய்ப்புகள் இருந்தன. சோதனைகள், சாதனைகள் இவற்றுக்கிடையே எங்களின் இருமனம் கலந்த, இரு மதம் கலந்த வாழ்க்கைப் பயணம் எப்படி அமைந்தது ? இது பற்றி அடுத்த வாரம் சொல்கிறேன்.

ஜனரஞ்சன்

Leave a Reply

You must be logged in to post a comment.