உதகமண்டலம்,
“ஆளும் வர்க்கம் தானாகவே ஒரு சித்திரத்தை வரைய முனைகிறது. இதுதொடருமானால் ஒரு வேளை நாம் அனைவருமே தேச விரோதியாக சித்தரிக்கப்படலாம்” என கண்டனக் கூட்டத்தில் முதுபெரும் எழுத்தாளர் எஸ்.வி.ராஜதுரை காட்டமாக தெரி வித்தார்.

எழுத்தாளர்கள் மற்றும் இடதுசாரி அறிஞர்களான வரவர ராவ், சுதா பரத்வாஜ், கௌதம் நவ்லகா, அருண் பெரைரா, வெர்னான் கன்சால்வஸ் ஆகியோர் மகாராஷ்டிரா மாநிலம், புனே நகர காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இதனைக் கண்டித்து நாடு முழுவதும் கண்டன இயக்கங்கள் நடைபெற்று வருகின்றன. அதன் ஒரு பகுதியாக நீலகிரி மாவட்டம், கோத்தகிரியில் கண்டன கூட்டம் நடை பெற்றது. இதில் மார்க்சிய அறிஞரும், எழுத்தாளருமான எஸ்.வி.ராஜதுரை பங்கேற்று பேசியதாவது: இந்தியாவின் அடித்தளமான மதச்சார்பின்மை எனும் கோட்பாட்டை தகர்ப்பதற்கான முயற்சிகள் தற்போது வேகமாக நடக்கிறது. ஆள்வோரின் கொள்கைகள் மற்றும் சித்தாந்தங்களை விமர்சிப்போர் மீது பல்வேறு வழக்குகள் புனையப்படுகின்றன. இது சமூகத்தை தொடர்ந்து பதற்றத்திலேயே வைத்துக் கொள்வதற்கான ஆளும் வர்க்கத்தின் முயற்சியே ஆகும். இத்தகைய செயல்களைக் கண்டித்து நாடுமுழுவதும் வலுவான கண்டன குரல்கள்எழுகின்றன. இத்தகைய கண்டனங்கள் ஏதோ அரசியல் கட்சிகள் மற்றும் ஜன நாயக அமைப்புகளிடம் இருந்து மட்டும் வெளிப்படவில்லை. சமூகத்தின் அனைத்துத் தரப்பினரிடமிருந்தும் இத்தகைய கண்டன குரல்கள் வெளிப் படுகின்றன.

பணியிலிருந்து ஓய்வு பெற்றுள்ள ஐ.ஏ.எஸ்.மற்றும் ஐ.பி.எஸ். அதி காரிகள் 48 பேர் பிரதமருக்கு எழுதி யுள்ள பகிரங்க கடிதத்தில் இத்தகைய நடவடிக்கைகளை கண்டித்துள்ளனர். ஏற்கனவே இத்தகைய முறையில் ஷோமா சென், ரோனா வில்சன், மகேஷ் ராவத், சுரேந்திர காட்லிங் மற்றும் சுதீர் தவாலே ஆகியோரும் கைது செய்யப்பட்டிருப்பதையும் தங்கள் கடிதத்தின் வாயிலாக அவர்கள் சுட்டிக் காட்டியுள்ளனர். மேலும், மதச்சார்பின்மைக்கும் ஜனநாயகத்திற்கும் மக்களின் சுதந்திரத்திற்கும் தற்போது பெரும் ஆபத்து உருவாகியுள்ள தாகவும் அவர்கள் தங்கள் கடிதத்தில் குறிப்பிட்டிருக்கின்றனர்.  இதேபோல், மனித உரிமை மீறல்களை எதிர்த்தும், சமூக முன்னேற்றத்திற்காகவும் செயலாற்றி வருபவர்களை “நகர்ப்புற நக்சலைட்டுகள்” என வகைப்படுத்தி கைது செய்திருப்பது உண்மையில் வெட்கப்பட வேண்டிய செயலாகும் எனவும் தங்கள் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளனர். இந்திய கப்பல் படையின் தலைவராக பணியாற்றிய வைஸ் அட்மிரல் ராம்தாஸ் அவர்களும் கூட இந்த கைது நடவடிக்கையை பகிரங்கமாகவே கண்டித்திருக்கிறார். சமூகத்தின் மிக முக்கிய ஆளுமை களான தேவகி ஜெயின், ரொமிலா தாப்பர், சதீஷ் பாண்டே, பிரபாத் பட்நாயக் உள்ளிட்டோரும் உச்சநீதிமன்றத் திற்கு சென்று தங்கள் குரலை எழுப்பியுள்ளனர்.

எட்டு மாதங்களுக்கு முன்னால் நடைபெற்ற ஒரு நிகழ்வை காரணம் காட்டி, அதற்கு சற்றும் தொடர்பில்லாத இவர்களை கைது செய்திருப்பதும், இவர்களிடமிருந்து ஆயிரக்கணக்கான கடிதங்கள் கைப்பற்றப்பட்டிருக்கிறது என சொல்வதும் நம்பவே முடியாதகதைகளைப் போல உள்ளது. தங்களை காப்பாற்றிக்கொள்ளவும், விமர்சிப்பவர்களை தனிமைப்படுத்தவு மான வகையில் ஆளும் வர்க்கம் தானாகவே ஒரு சித்திரத்தை வரைய முனைகிறது. இது தொடருமானால் ஒருவேளை நாம் அனைவருமே அல்லது மக்கள் அனைவருமே கூட தேச விரோதியாக சித்தரிக்கப்படலாம். இது வரலாற்றில் மிகவும் ஆபத்தான கட்டமாகும். எனவே ஜனநாயக விழுமியங்களைப் பாதுகாக்கும் போராட்டங்களில் அனைவருமே ஒன்றிணைய வேண்டிய கட்டத்தில் இருக்கிறோம். கருத்துரிமைக்கான, ஜனநாயகத்திற் கான நமது போராட்டங்கள் வலுவாக தொடர வேண்டும். இவ்வாறு எஸ்.வி.ராஜதுரை பேசினார்.

முன்னதாக, இந்த கண்டன கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் ஆர்.பத்ரி, கோத்தகிரி செயலாளர் எம்.ரஞ்சித், விடுதலை சிறுத்தைகள் மாவட்டபொருளாளர் அரு.மண்ணரசன், ரத்ததான நண்பர்கள் குழு ஒருங்கிணைப் பாளர் செல்வம் உள்ளிட்ட ஏராள மானோர் பங்கேற்றனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.