சென்னை,
அண்ணா பல்கலைக்கழக உறுப்பு கல்லூரிகளில் செமஸ்டர் தேர்வு மறு கூட்டல் மதிப்பெண் முறைகேட்டில் மேலும் பலருக்கு தொடர்பு இருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் உள்ள அண்ணா பல்கலைக்கழக பொறியியல் கல்லூரியில் அமைக்கப்பட்டிருந்த மையத்தில் விடைத்தாள் மறுமதிப்பீடு செய்யும் பணிகள் நடைபெற்றது.  குறைந்த மதிப்பெண் பெற்றவர்களுக்கும், தேர்வில் தோல்வி அடைந்த மாணவர்களுக்கும் கூடுதல் மதிப்பெண் அளிப்பதற்கு பணம் பெறப்பட்டதும் தெரிய வந்தது. இது தொடர்பாக லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் அதிரடி விசாரணையில் இறங்கினார்கள். இவ்விவகாரம் தொடர்பாக அண்ணா பல்கலைக் கழக முன்னாள் தேர்வு கட்டுப்பாட்டு அலுவலராக இருந்த உமா, திண்டிவனத்தில் உள்ள அண்ணா பல்கலைக்கழக பொறியியல் கல்லூரி பேராசிரியர் விஜயகுமார், உதவி பேராசிரியர் சிவக்குமார், கண்காணிப்பாளர்களாக பணியாற்றிய எம்.மகேஷ்பாபு, என்.அன்புச்செல்வன், ஆர்.சுந்தர்ராஜன், சி.என். பிரதீபா, எல்.பிரகதீஸ்வரன், எம்.ரமேஷ்கண்ணன், எஸ்.ரமேஷ் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து குற்றச்சாட்டுக்கு உள்ளானவர்கள் பணி இடைநீக்கம் செய்யப்பட்டனர்.

இந்த நிலையில் சென்னை ஆலந்தூரில் உள்ள லஞ்ச ஒழிப்பு தலைமை அலுவல கத்தில் ஆஜராகும்படி குற்றச்சாட்டுக்கு உள்ளான பேராசிரியர் விஜயகுமார், உதவி பேராசிரியர் சிவக்குமாருக்கு லஞ்ச ஒழிப்பு போலீசார் சம்மன் அனுப்பி இருந்தனர். அதன்பேரில் அவர்கள் வெள்ளியன்று ஆஜராகினர். 2-வது நாளாக சனிக்கிழமையன்றும் அவர்களிடம் லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை நடத்தினார்கள். முதலில் இருவரையும் ஒன்றாக அமரவைத்து விசாரணை நடத்தப்பட்டது. பின்னர் தனித்தனியாக விசாரிக்கப்பட்டது. அப்போது அவர்கள் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளனர். இதுதொடர்பாக லஞ்ச ஒழிப்பு போலீசார் ஒருவர் கூறியதாவது:- தேர்வுத்தாள் மறுமதிப்பீடு முறைகேட்டில் அண்ணா பல்கலைக்கழக ஊழியர்கள், முன்னாள் பேராசிரியர்கள் என மேலும் 30 பேருக்கு தொடர்பு இருப்பதாக தெரிவித்துள்ளனர். அவர்களுடைய பெயர் விவரங்களையும் அளித்துள்ளனர். அதனடிப்படையில் அவர்களிடம் விரைவில் விசாரணை நடத்தப்படும். தற்போது புகாரில்சிக்கி உள்ளவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடைபெறும். அவர்கள் அளிக்கும்தகவல் அடிப்படையில் விசாரணை அடுத்தகட்டத்துக்கு எடுத்துச் செல்லப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply

You must be logged in to post a comment.