சென்னை;
தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரை பதவி நீக்கம் செய்து, அவர் மீது வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.

இதுதொடர்பாக கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:
தமிழக அமைச்சர்கள் மீது அடுக்கடுக்கான ஊழல் மற்றும் முறைகேடுகள் குற்றச்சாட்டுக்கள் முன்னுக்கு வந்து கொண்டுள்ளன. தமிழக முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சரும் கூட இக்குற்றச்சாட்டுக்களிலிருந்து தப்பவில்லை. ஏற்கனவே சென்னை உயர்நீதிமன்றத்தில் சில வழக்குகள் குறித்த விசாரணை நடைபெற்று வருவதாக லஞ்ச ஒழிப்பு துறை தெரிவித்துள்ளது. குட்கா ஊழல் வழக்கு மத்திய புலனாய்வுத்துறைக்கு மாற்றப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்நிலையில் மேலும் சில ஊழல் குற்றச்சாட்டுக்கள் குறித்த ஆதாரங்களை அளித்துள்ளதுடன் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென வருமான வரித்துறை தமிழக அரசுக்கு கடிதம் அனுப்பியுள்ளதாக செய்திகள் வந்துள்ளன. இதன்படி சுகாதாரத்துறையில் பணி மாறுதலுக்கு கையூட்டு பெற்றது, மருத்துவக் கல்லூரிகளில் பணி நியமனம், பாடப் பிரிவுகளுக்கு அனுமதியளித்தல் போன்றவைகளுக்கு லஞ்சம் பெற்றது என்பதோடு விஜயபாஸ்கருக்கு சொந்தமான கல்குவாரியில் அனுமதிக்கப்பட்ட அளவை விட கூடுதலான கிரானைட் வெட்டி விற்பனை செய்ததன் மூலம் அரசுக்கு ரூ. 20 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது உள்ளிட்ட குற்றச்சாட்டுக்களுக்கான ஆதாரங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.

ஏற்கனவே ஆர்.கே. நகர் இடைத்தேர்தலின் போது நடைபெற்ற வருமான வரி சோதனையில் ரூ. 89 கோடி பணம் தேர்தலுக்காக பட்டுவாடா செய்யப்பட்ட விபரம் இவரது வீட்டிலிருந்து கைப்பற்றப்பட்டது. ஆனால் இவர் மீது நடவடிக்கை ஏதும் எடுக்கப்படவில்லை. அமைச்சர்கள் மீது அதிகரித்து வரும் ஊழல் புகார்கள் ஆட்சி நிர்வாகத்தை சீர்குலைப்பதுடன் ஒட்டுமொத்த சமூக சீரழிவுக்கு வழி வகுத்துவிடும் என்பதை சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.

அமைச்சர்கள் மீதான ஊழல் நடவடிக்கையினால் மிக மோசமாக தமிழக மக்கள் பாதித்து வருகின்றனர். மருத்துவத்துறையில் நடைபெற்று வரும் முறைகேடுகள் மக்களது உடல்நலத்திற்கும், உயிருக்கும் ஆபத்தான விளைவுகளை உண்டாக்குவதாகும்.
எனவே, சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மீது வந்துள்ள புகார்களை புறந்தள்ளாமல் உடனடியாக அவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை செய்ய வேண்டுமெனவும், இவ்விசாரணை நேர்மையானதாக நடைபெற உடனடியாக அவரை பதவி நீக்கம் செய்ய வேண்டுமெனவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வற்புறுத்தி கேட்டுக் கொள்கிறது.

Leave a Reply

You must be logged in to post a comment.