தீக்கதிர்

‘மோடி மீண்டும் பிரதமர் ஆவதை கூட்டணி கட்சியினரே விரும்பவில்லை’ :உபேந்திர குஷ்வாலா அதிரடி…!

பீகாரில் பாஜக-வுடன் ஐக்கிய ஜனதாதளம், லோக் ஜனசக்தி ஆகிய கட்சிகள் மல்லுக்கட்டிக்   கொண்டிருக்கும் நிலையில், ராஷ்ட்ரிய லோக் சமதா கட்சியும் அந்தக் களத்தில் குதித்துள்ளது.லோக் சமதா கட்சியின் தலைவரும், மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை இணையமைச்சருமான உபேந்திர குஷ்வாலா, “நரேந்திர மோடி மீண்டும் பிரதமர் ஆவதை, பாஜக கூட்டணியில் உள்ள சில கட்சிகளே விரும்பவில்லை” என்று கூறி அதிரடியைக் கிளப்பியுள்ளார்.

அடிப்படையில் இவருக்கும் ஐக்கிய ஜனதாதளம் தலைவர் நிதிஷ்குமாருக்கும் ஆகாது. அதனை மனத்தில் கொண்டே இவ்வாறு அவர் கூறியுள்ளார். கூட்டணியில் நிதிஷ் குமாருக்கு கூடுதல் இடங்கள் கொடுப்பது தனக்கு ஆபத்தாகி விடும் என்பது இவரின் எண்ணம்.

அந்த வகையில், பீகார் மாநிலத்தில் புதிய கூட்டணியை உருவாக்குவது தொடர்பாக கடந்த வாரமே பேட்டி ஒன்றை அளித்திருந்த குஷ்வாலா, “சுவையான கீர் செய்வதற்கு யாதவர்களிடம் இருந்து பால் வாங்க வேண்டும், குஷ்வாஹாவிடம் இருந்து அரிசி வாங்க வேண்டும், பிராமணர்களிடம் இருந்து சர்க்கரையையும், சவுத்ரிகளிடம் இருந்து துளசியையும், முந்திரி, திராட்சை போன்றவற்றை தலித், பிற்படுத்தப்பட்ட மக்களிடம் இருந்து பெற வேண்டும். இந்த கலவையிலானால் நல்ல கீர் செய்ய முடியும்” என்று கதை ஒன்றையும் கூறியிருந்தார். அத்துடன், அனைத்துச் சமூகத்தினரையும் அரவணைத்துச் செல்லும் சமத்துவப் பேரணி ஒன்றை செப்டம்பர் 25-ஆம் தேதி பாட்னாவில் தாங்கள் நடத்தப்போவதாகவும் அறிவித்திருந்தார்.

இதனிடையே புதிய பேட்டி ஒன்றை அளித்துள்ள குஷ்வாலா, “பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தொடர்வதற்கே நாங்கள் விரும்புகிறோம்; ஆனால், 2019 தேர்தலில் பாஜக வெற்றி பெற்றால், பிரதமராக மீண்டும் மோடி வருவதைத் தேசிய ஜனநாயக் கூட்டணிக்குள் இருக்கும் சிலரே விரும்பவில்லை” என்று பீகார் கூட்டணி புகைச்சலை அதிகமாக்கியுள்ளார்.