மும்பை;
பிரதமர் மோடி கொண்டுவந்த பணமதிப்பு நீக்க நடவடிக்கை, நாட்டின் பொருளாதாரத்தையே சிதைத்து விட்டது என்று, பாஜக-வின் கூட்டணிக் கட்சியான சிவசேனா சாடியுள்ளது.மலையையே குடைந்து பார்த்தும், ஒரு சுண்டெலி கூட வெளியே வரவில்லை என்றும் விமர்சித்துள்ளது.

அக்கட்சியின் அதிகாரப்பூர்வ ஏடான ‘சாம்னா’ கட்டுரையில் இதுதொடர்பாக மேலும் கூறப்பட்டிருப்பதாவது:பிரதமர் நரேந்திர மோடி, கடந்த நவம்பர் 8-ஆம் தேதி பணமதிப்பு நீக்க நடவடிக்கையைக் கொண்டு வந்தார். இதனால் நாட்டிலுள்ள கறுப்புப் பணம், கள்ளநோட்டு, தீவிரவாதம், ஊழல் போன்றவை ஒழிக்கப்படும் என்று கூறினார். ஆனால், அவர் கூறியதற்கு மாறாகவே அனைத்தும் நடந்துள்ளன.

பணமதிப்பு நீக்கம் புரட்சிகரமான நடவடிக்கை- இதனால் கறுப்புப் பணம் ஒழிந்துவிடும் என்று காட்சிப்படுத்தப்பட்டது. ஆனால், நூற்றுக்கணக்கான கோடி கறுப்புப் பணம், அரசியல்வாதிகளால் வங்கிகளில் டெபாசிட் செய்யப்பட்டது. குறிப்பாக, குஜராத்தில் உள்ள 2 கூட்டுறவு வங்கிகளில் கோடிக்கணக்கில் டெபாசிட் செய்யப்பட்டன.

பணமதிப்பு நீக்கத்தை விமர்சித்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கை அப்போது முட்டாள் என்று பட்டம் சூட்டினார்கள். ஆனால், பணமதிப்பு நீக்கம் தோல்வி அடைந்து விட்டது என்று ரிசர்வ் வங்கி தற்போது கூறியிருக்கும் நிலையில், அன்று முட்டாள் பட்டம் கட்டியவர்களின் செயல் என்ன? என்பது வெளிப்பட்டு விட்டது.

பணமதிப்பு நீக்கத்தின்போது புழக்கத்தில் இருந்த ரொக்கப்பணத்தில் 99.30 சதவிகிதம் வங்கிக்கு திரும்பி விட்டன; 10 ஆயிரத்து 720 கோடி ரூபாய் மட்டுமே திரும்பவில்லை என்று ரிசர்வ் வங்கி அறிவித்து விட்டது. அதாவது மலையைத் தோண்டிப் பார்த்தும் ஒரு சுண்டெலி கூட வெளியே வரவில்லை என்பதுதான் இதன்மூலம் தெரியவந்துள்ளது. ஆனால், 10 ஆயிரம் கோடி ரூபாயைப் பிடிப்பதற்கு, நாட்டின் பொருளாதாரத்தையே மத்திய அரசு சிதைத்துள்ளது.
பணமதிப்பு நீக்கத்தையொட்டி நாடே பொருளாதாரக் குழப்பத்தைச் சந்தித்தது. சிறு, குறு தொழில்கள் அழிந்து போயின. சேவைத்துறை மிகப்பெரிய சிக்கலில் மாட்டியது.கட்டுமானத்துறை ஆட்டம் கண்டது. சிறு, குறு விவசாயிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டனர். ஏராளமான மக்கள் வங்கியின் வாசலிலும், ஏடிஎம் வரிசைகளிலும் நின்று மடிந்தனர். நாட்டின் மொத்த பொருளாதார வளர்ச்சியின் வேகம் சரிந்தது. தற்போது டாலருக்கு இணையான இந்திய ரூபாயின் மதிப்பு கடந்த 70 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு சரிந்ததுள்ளது.இப்படி நாடு மிகப்பெரிய பொருளாதாரப் பாதிப்பை, இழப்பை சந்தித்திருக்கும்போதும் மோடி அரசு தொடர்ந்து பெருமை பேசி வருகிறது. ரோம் நகரம் தீப்பற்றி எரியும்போது நீரோ மன்னன் பிடில் வாசித்ததுதான் நினைவுக்கு வருகிறது. இவ்வாறு சிவசேனா சாடியுள்ளது.

Leave a Reply

You must be logged in to post a comment.