பாட்னா;
2019 நாடாளுமன்றத் தேர்தலுக்கான பணிகளை முன்கூட்டியே பாஜக ஆரம்பித்து விட்டதாக செய்திகள் வெளியாகும் நிலையில், அதைவிட வேகமாக பாஜக கூட்டணிக்குள் குத்து வெட்டும் ஆரம்பித்துள்ளது.

கடந்த 2014 நாடாளுமன்றத் தேர்தலில், உத்தரப்பிரதேசம், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், மகாராஷ்டிரா, குஜராத், பீகார் உள்ளிட்ட மாநிலங்களில்-தான் பாஜக-வும் அதன் கூட்டணிக் கட்சிகளும் அதிகமான இடங்களைப் பெற்றன. ஆனால், இந்த மாநிலங்களில் எல்லாம் தற்போது நிலைமை தலைகீழாக மாறியுள்ளது.உத்தரப்பிரதேசத்தில் கடந்த தேர்தலில் தனித்தனியாக நின்ற பகுஜன் சமாஜ் கட்சி, சமாஜ்வாதி, காங்கிரஸ், ராஷ்ட்ரிய லோக் தளம் உள்ளிட்ட கட்சிகள் எல்லாம் இந்த முறை பாஜக-வுக்கு எதிராக ஒன்றுபடுவதென முடிவு செய்துள்ளன. மறுபுறத்தில், சுகல்தேவ் பாரதி சமாஜ் உள்ளிட்ட பாஜக-வின் கூட்டணி கட்சிகள், பாஜக-வை காலை வாருவதற்கு தயாராகி வருகின்றன.
மகாராஷ்டிரத்தில் பாஜக கூட்டணியில் இருக்கும் சிவசேனா தொடர்ந்து குடைச்சலைக் கொடுத்து வருகிறது. ஏற்கெனவே இடைத்தேர்தலில் பாஜக-வுக்கு தோல்வியை பரிசளித்து ஆனந்தப்பட்டுக் கொண்டிருக்கிது.

குஜராத் சட்டமன்றத் தேர்தலில் நூலிழையில் தப்பிப் பிழைத்த பாஜக-வை நாடாளுமன்றத் தேர்தலில் விட்டுவிடக் கூடாது என்று காங்கிரஸ் அனைத்து எதிர்க்கட்சிகளையும் ஒன்று திரட்டி வருகிறது. மத்தியப்பிரதேசம், ராஜஸ்தானில் அண்மையில் நடைப்பெற்ற இடைத்தேர்தல்கள் அத்தனையிலும் பாஜக படுதோல்வி அடைந்துள்ளது. இங்கு பாஜக வெல்வதற்கு வாய்ப்பில்லை என்றே கருத்துக் கணிப்புக்களும் உறுதிப்படுத்தி இருக்கின்றன.

இந்நிலையில் மற்றொரு பெரிய மாநிலமான பீகாரிலும் குத்துவெட்டு துவங்கியுள்ளது. பாஜக கூட்டணியிலிருந்து வெளியேறுவதென்று ஏற்கெனவே நிதிஷ் குமார் முடிவெடுத்திருந்தார். பின்னர், எதையோ சொல்லி அவரை பாஜக தலைவர் அமித்ஷா சரிக்கட்டினார். ஆனால், தற்போது மீண்டும் பிரச்சனை துவங்கியுள்ளது.கடந்த 2014 தேர்தலில் பீகாரில் 22 தொகுதிகளை பாஜக வென்றது. ஐக்கிய ஜனதாதளம் 12 இடங்களையும், பஸ்வானின் லோக் ஜனசக்தி 6 இடங்களையும் கைப்பற்றின. இதே அடிப்படையிலேயே 2019 தேர்தலிலும் தொகுதிப் பங்கீட்டை நடத்த பாஜக நினைக்கிறது.
முதற்கட்டப் பேச்சுவார்த்தையில், பாஜக-விற்கு 20, ஐக்கிய ஜனதா தளத்திற்கு 12, லோக் ஜனசக்திக்கு 6, பிற கட்சிகளுக்கு 2 என்று பேசப்பட்டுள்ளது. ஆனால், ஆளும்கட்சியான ஐக்கிய ஜனதாதளம் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. பாஜக-வும் ஐக்கிய ஜனதாதளமும் தலா 17 தொகுதிகளை பிரித்துக் கொள்ள வேண்டும் என்று அந்த கட்சி நினைக்கிறது. இதனை பாஜக-விற்கும் தெரிவித்து விட்டது.

அதேபோல பஸ்வான் தலைமையிலான லோக் ஜனசக்தி கடந்த தேர்தலில் வழங்கப்பட்ட 6 இடங்களைக் காட்டிலும் கூடுதலாக வேண்டும்; அல்லது 6-க்கும் குறைவாக கொடுக்கக் கூடாது என்று கூறிவருகிறது. கூட்டணியில் இடம்பெற்ற பிற கட்சிகளும் கூடுதல் இடங்களைக் கோரி வருகின்றன.

இதில், பாஜக தங்கள் கோரிக்கையை ஏற்காதபட்சத்தில் தனித்துப் போட்டியிடுவது என்ற முடிவுக்கும் ஐக்கிய ஜனதாதளம் வந்துள்ளதாக கூறப்படுகிறது. இவ்வாறு தனித்துப் போட்டியிடுவதால், நிதிஷ்குமாருக்கு ஒன்றும் நஷ்டம் ஏற்படப்போவதில்லை. அவர் பிரதமர் வேட்பாளர் அல்ல. பாஜக-தான் பாதிப்புக்கள் அனைத்தையும் சந்திக்க வேண்டும் என்றும் ஐக்கிய ஜனதாதளம் தலைவர்கள் ‘செக்’ வைத்துள்ளனர்.ஒருவேளை தங்கள் இஷ்டப்படிதான் கூட்டணி என்றால், பீகாரில் பாஜக கூட்டணி உடைவதை தவிர்க்க முடியாது என்பதுடன், 2019 தேர்தலில் வெற்றி என்பதையும் பாஜக நினைத்துப் பார்க்க முடியாது என்றும் அவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இது பாஜக-வுக்கு பெரும் தலைவலியாக உருவெடுத்துள்ளது.

Leave a Reply

You must be logged in to post a comment.