கொல்கத்தா;
மேற்கு வங்கத்தில் பாஜக – திரிணாமூல் இடையிலான வன்முறைப் போட்டியில், 3 வயது குழந்தை ஒன்று உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கிறது.

மேற்குவங்க மாநிலம், மால்டா மாவட்டத்தைச் சேர்ந்தவர், புதுல் மந்தாள். இவர் உள்ளாட்சித் தேர்தலில் பாஜக-வில் நின்று வெற்றிப் பெற்றுவிட்டு, திரிணாமுல் காங்கிரசுக்கு மாறியதாக கூறப்படுகிறது. இதையடுத்து, அணில் மந்தல் என்ற பாஜக தலைவர், சில குண்டர்களுடன் சென்று, புதுல் மந்தாளின் வீட்டைத் தாக்கியதுடன், அவரது 3 வயது குழந்தையைத் துப்பாக்கியால் தலையில் சுட்டு, கொலைவெறியாட்டம் நடத்தியுள்ளார்.தற்போது பாதிக்கப்பட்ட குழந்தை, மால்டா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கிறது.

காவல்துறை அறிக்கை என்னவோ, பாஜக குண்டர்கள்தான் ஆயுதங்களுடன் தாக்குதல் நடத்தி, 3 வயது குழந்தையை துப்பாக்கியால் சுட்டதாக கூறுகிறது. ஆனால், பாஜக-வினர், இது திரிணமூல் கட்சிக்கு நடந்த கோஷ்டிச் சண்டை என்று கூறுகின்றனர். பாஜக-வில் இருந்த புதுல் மந்தாள் பணத்துக்காக திரிணாமூல் பக்கம் சென்றார்; ஆனால் சொன்னபடி பணம் தரவில்லை என்றவுடன் திரிணாமூல் கட்சியினருடன் சண்டை போட்டுள்ளனர்; இதில் நடந்த வன்முறையில்தான் குழந்தை படுகாயம் அடைந்துள்ளது என்று அவர்கள் கூறியுள்ளனர்.

எது உண்மையோ, ஆனால், மேற்குவங்கத்தில் பாஜக – திரிணாமூல் நடத்திவரும் வன்முறை வெறியாட்டத்திற்கு ஏதுமறியாத ஒரு குழந்தையின் உயிர் தற்போது ஊசலாடிக் கொண்டிருக்கிறது.மேற்கு வங்கத்தில் கடந்த வாரத்தில் மட்டும் திரிணாமூல் – பாஜக வன்முறையில் 10 பேர் பலியாகி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

You must be logged in to post a comment.