புதுதில்லி:
மத்திய அரசுக்கு, கடந்த நிதியாண்டிற்கான ஈவுத்தொகையை வழங்குவதற்கு பணம் இல்லை என்று அரசு நிறுவனமான ஸ்டீல் அத்தாரிட்டி ஆப் இந்தியா (SAIL) கைவிரித்துள்ளது.
நாட்டின் பொதுத்துறை நிறுவனங்களிடமிருந்து பல ஆயிரம் கோடி ரூபாய்களை ‘ஈவுத்தொகை’ என்ற பெயரில் மத்திய அரசு பெற்று வருகிறது. இந்த பணத்தை வைத்துத்தான் மத்திய அரசு இவ்வளவு காலம் மக்கள் நலத் திட்டங்களை செயல்படுத்தி வந்தது. ஆனால், தனியார்மயத்தை ஊக்குவிக்கும் வகையிலான மத்திய ஆட்சியாளர்களின் பொருளாதாரக் கொள்கைகளால், பொதுத்துறை நிறுவனங்கள் கொஞ்சம் கொஞ்சமாக நலிந்து தற்போது மூடப்படும் நிலைக்கு சென்று கொண்டிருக்கின்றன.

எப்படி இருந்தாலும் தங்களுக்கான ஈவுத்தொகையை மட்டும் ஆண்டுதோறும் பெறுவதற்கு மத்திய அரசு தவறுவதில்லை. அந்த வகையில், கடந்த மார்ச் மாதத்துடன் முடிவடைந்த நிதியாண்டில் பொதுத்துறை நிறுவனங்களிடமிருந்து சுமார் 1,500 கோடி டாலர் அளவிற்கு நிதி திரட்டப்படும் என்று மோடி அரசு பட்ஜெட்டில் தெரிவித்திருந்தது. ஆனால், இதுவரை 100 கோடி டாலர் அளவிற்கு மட்டுமே ஈவுத்தொகை வந்துள்ளது. இந்நிலையில்தான், இரும்பு உற்பத்தியில் நாட்டின் 2-ஆவது பெரிய பொதுத்துறை நிறுவனமாக இருக்கும் செயில் நிறுவனமும், மத்திய அரசுக்கு வழங்க வேண்டிய ஈவுத்தொகையான 2 ஆயிரத்து 100 கோடியை வழங்குவதற்கான வாய்ப்பு இல்லை என்று கூறியிருக்கிறது.
இதுதொடர்பாக மத்திய அரசுக்கு எழுதியுள்ள கடிதத்தில், “செயில் நிறுவனத்திடம் தற்போது எவ்விதமான ரொக்கமோ, வங்கி இருப்போ இல்லை; சந்தை மூலமே நிதி திரட்ட வேண்டும் என்றாலும் அதுவும் கடினமான காரியமாகவே உள்ளது” என்று தெரிவித்துள்ளது.

Leave A Reply

%d bloggers like this: