டாக்டர் அசோக் தாவ்லே,தலைவர், அகில இந்திய விவசாயிகள் சங்கம்.                                                                 செப்டம்பர் 5 அன்று தலைநகர் தில்லியை குலுக்க இருக்கிறது தொழிலாளி, விவசாயி எழுச்சிப் பேரணி. இது மாபெரும் வரலாறு படைக்க இருக்கும் பேரணி. இதில் பங்கேற்பதற்காக நாடு முழுவதுமிருந்து லட்சக்கணக்கான தொழிலாளர்கள், விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள் தில்லி நோக்கி புறப்பட்டு விட்டார்கள். இந்திய தொழிற்சங்க மையம் (சிஐடியு), அகில இந்திய விவசாயிகள் சங்கம், அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கம் ஆகிய மூன்று பெரும் இயக்கங்களின் கூட்டு தலைமையின் கீழ் இந்த பேரியக்கம் நடைபெறுகிறது.

எதற்காக தில்லி எழுச்சி?                                                                                                                                                      இந்திய பொருளாதாரத்தின் செல்வங்களையெல்லாம் உற்பத்தி செய்வதில் மிகப்பெரும் பங்கினை வகித்து வருகிற – சமூகத்தின் மூன்று பெரிய பிரிவுகள் தொழிலாளர்,விவசாயிகள், விவசாயத் தொழிலாளர் ஆகிய வர்க்கங்கள் ஆகும். இந்த மூன்று பெரும் பிரிவுகளைச் சேர்ந்த மக்களும் தேசத்தின் தலைநகரில் ஒன்றுகூடி பிரம்மாண்டமான போராட்ட அலையை உருவாக்க இருப்பது இந்தியாவின் வரலாற்றில் முதல் பெரும் நிகழ்வாகும்.

முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு பேரெழுச்சியுடன் நடைபெறவுள்ள இந்த பேரணி, மத்தியில் ஆளும் பாஜக தலைமையிலான அரசின் நவீன – தாராளமய கொள்கைகளை எதிர்த்தும் இந்த அரசின் மதவெறி நிகழ்ச்சி நிரலை எதிர்த்தும் எதேச்சதிகார தாக்குதல்களை எதிர்த்தும் நடைபெறுகிறது.

தில்லி பேரணி 15 அம்சக் கோரிக்கைகளை முன்வைக்கிறது: விலைவாசி உயர்வை தடுத்து நிறுத்தி அனைவருக்கும் பொது விநியோக முறையை அமலாக்க வேண்டும்; இளைய தலைமுறைக்கு கவுரவமான வேலைவாய்ப்பை உறுதி செய்யும் விதத்தில் உறுதியான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்; அனைத்துத் தொழிலாளர்களுக்கும் மாதம் ரூ.18 ஆயிரத்திற்கும் குறைவில்லாமல் குறைந்தபட்சக் கூலியை உறுதி செய்திட வேண்டும்; தொழிலாளர்களுக்கு விரோதமான தொழிலாளர் சட்ட திருத்தங்களை கைவிட வேண்டும்; அனைத்து விவசாய விளை பொருட்களுக்கும் அதன் உற்பத்தி செலவைப் போல ஒன்றரை மடங்கு விலை குறைந்தபட்ச ஆதார விலையாக நிர்ணயிக்கப்பட வேண்டும்; அத்துடன் அனைத்து விளை பொருட்களையும் அரசு கொள்முதல் செய்திட வேண்டும்; விவசாயிகள் மற்றும் விவசாயத் தொழிலாளர்களின் கடன்கள் தள்ளுபடி செய்யப்பட வேண்டும்; விவசாயத் தொழிலாளர்களுக்காக ஒருங்கிணைந்த சட்டம் இயற்றப்பட வேண்டும்; அனைத்து கிராமப்புறப் பகுதிகளிலும் மகாத்மா காந்தி தேசிய கிராமப்புற வேலை உறுதித் திட்டத்தை அமலாக்குவதோடு, நகர்ப்புறத்திற்கும் அதை விரிவு படுத்த வேண்டும்;

அனைத்து மக்களுக்கும் உணவுப் பாதுகாப்பு, சுகாதாரம், கல்வி, வீட்டு வசதி மற்றும் சமூகப் பாதுகாப்பு உறுதி செய்யப்பட வேண்டும்; காண்ட்ராக்ட்மயத்தை முற்றாக கைவிட வேண்டும்; நிலங்களை மறுபங்கீடு செய்யும் வகையில் சீர்திருத்தங்கள் மற்றும் வன உரிமைச் சட்டம் அமலாக்கம் ஆகிய இரண்டும் மேற்கொள்ளப்பட வேண்டும்; பலவந்தமாக நிலம் கையகப்படுத்துவதை நிறுத்த வேண்டும்; இயற்கைப் பேரிடர்களில் சிக்கியுள்ள மக்களுக்கு முழுமையான நிவாரணமும், மறுவாழ்வும் உறுதி செய்யப்பட வேண்டும்; நவீன தாராளமய கொள்கைகளை முற்றாக கைவிட வேண்டும் – இவையே தில்லி பேரணி முன்வைக்கிற முழக்கங்கள்.

ஒடுக்குமுறைக்கு எதிராக…                                                                                                                                             இந்த கோரிக்கைகளோடு, மோடி அரசின் மதவெறி நிகழ்ச்சி நிரலையும், எதேச்சதிகார ஆட்சியையும் தில்லி பேரணி மிகக் கடுமையான முறையில் கண்டிக்க இருக்கிறது. நாட்டின் பல்வேறு பகுதிகளில் நடத்தப்பட்ட கும்பல் படுகொலைகள்; இந்துத்துவா பயங்கரவாத அமைப்பான சனாதன் சன்ஸ்தா அமைப்பின் கொலைவெறியர்களால் அரங்கேற்றப்பட்ட முற்போக்கு அறிவுஜீவிகளின் படுகொலைகள்; கலாச்சார பாதுகாப்பு என்ற பெயரில் நடைபெறும் குண்டர்களின் ராஜ்ஜியம் ஆகிய கொடுமைகளையும் தில்லி பேரணி அம்பலப்படுத்த இருக்கிறது.

செப்டம்பர் 5 என்பது இந்துத்வா பயங்கரவாதிகளால் படுகொலை செய்யப்பட்ட மூத்த பத்திரிகையாளர் கௌரி லங்கேஷின் முதலாம் ஆண்டு நினைவுதினம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தினத்தில் நடைபெறவுள்ள தில்லி பேரணி, நாட்டின் பல்வேறு பகுதிகளில் மோடி அரசால் அராஜகமாக கைது செய்யப்பட்டுள்ள மனித உரிமை செயல்பாட்டாளர்களுக்கு எதிரான நடவடிக்கைகளையும் வன்மையாகக் கண்டிக்கிறது.
நாட்டின் பல்வேறு பகுதிகளில் மக்கள் மீது அடக்குமுறையை ஏவி விட்டுள்ள – குறிப்பாக திரிபுராவில் மக்கள் மீதும் இடதுசாரிகள் மீதும் ஒடுக்குமுறையை ஏவியுள்ள பாஜக அரசாங்கத்தையும் மேற்குவங்கத்தில் கொடூர நர்த்தனம் ஆடிவரும் திரிணாமுல் அரசாங்கத்தையும் எதிர்த்து தில்லி பேரணி முழங்கும்.

அதேபோல சமீபத்திய வரலாறு காணாத வெள்ளத்தை எதிர்கொண்டு புதிய கேரளத்தை படைப்பதற்காக துணிச்சலுடன் போராடி வருகிற கேரள மக்களுடன் தனது ஒருமைப்பாட்டை தில்லி பேரணி உறுதி செய்யும்.

செப்டம்பர் 5 பேரணியை வெற்றிகரமான முறையில் நடத்திடவும், ஒருங்கிணைக்கவும் இந்தியாவின் தலைசிறந்த பொருளாதார அறிஞர் பேரா.பிரபாத் பட்நாயக் தலைமையில் வரவேற்புக் குழு அமைக்கப்பட்டு செயலாற்றி வருகிறது. தில்லி ராம்லீலா மைதானத்திலும் காஸியாபாத்திலும் நூற்றுக்கணக்கான முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. பல்வேறு மாநிலங்களிலிருந்து வருபவர்கள் அங்கு தங்கிடவும் தயாராகவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. செப்டம்பர் 5 அன்று காலை 9 மணி அளவில் ராம்லீலா மைதானத்திலிருந்து நாடாளுமன்ற வீதி நோக்கி பிரம்மாண்டமான பேரணி துவங்குகிறது. நாடாளுமன்ற வீதியில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் சிஐடியு, விவசாயிகள் சங்கம், விவசாயத் தொழிலாளர் சங்கம் ஆகியவற்றின் தலைவர்கள் உரையாற்றுகிறார்கள்.

தில்லி பேரணியை வெற்றி பெற செய்வதற்காக கடந்த சில மாதகாலமாக நாடு முழுவதும் மிகப் பெரிய அளவிலான பிரச்சாரம் நடைபெற்றுள்ளது. கோடிக்கணக்கான துண்டறிக்கைகள் மக்களிடையே விநியோகிக்கப்பட்டுள்ளன. ஆயிரக்கணக்கான தயாரிப்புக் கூட்டங்கள் நடத்தப்பட்டுள்ளன. கிட்டத்தட்ட அனைத்து மாநிலங்களிலும் நூற்றுக்கணக்கான பிரச்சார இயக்கங்கள் நடத்தப்பட்டுள்ளன.

மோடி அரசே, வெளியேறு!
கடந்த 4 ஆண்டு காலத்தில் இந்திய தொழிலாளி வர்க்கமும் விவசாய வர்க்கமும் நடத்திய தொடர்ச்சியான-மிகப்பெரும் போராட்டங்களின் பின்னணியில் செப்டம்பர் 5 தில்லி பேரணி நடைபெறுகிறது. 2018 ஆகஸ்ட் 9 அன்று அகில இந்திய விவசாயிகள் சங்கம், சிஐடியு, விவசாயத் தொழிலாளர் சங்கம் ஆகிய இயக்கங்கள் கூட்டாக நடத்திய மாபெரும் சிறை நிரப்பும் போராட்டத்தில் ஐந்து லட்சத்திற்கும் அதிகமான விவசாயிகளும், தொழிலாளிகளும் பங்கேற்று சிறை புகுந்தனர். ஆகஸ்ட் ஒன்பது அன்று 23 மாநிலங்களில் 407 மாவட்டங்களில் 610 மையங்களில் இந்தப் போராட்டம் நடைபெற்றது. சமீப கால வரலாற்றில் இந்திய நாட்டில் தேசிய அளவில் நடைபெற்ற மிகப்பெரிய சிறை நிரப்பும் போராட்டம் இதுவாகும்.

ஆகஸ்ட் 9 என்பது இந்திய சுதந்திரப் போராட்ட வரலாற்றில் மிக முக்கியமான தேதியாகும். 1942 ஆம் ஆண்டில் ஆக.9 அன்றுதான் பிரிட்டிஷ் ஏகாதிபத்திய அரசாங்கத்தை எதிர்த்து ‘வெள்ளையனே வெளியேறு’ இயக்கத்திற்கான அறிவிப்பை பிரகடனம் செய்தார் மகாத்மா காந்தி. 76 ஆண்டுகளுக்குப் பிறகு அதே ஆக.9 அன்று ‘மோடி அரசே வெளியேறு’ என்ற மாபெரும் முழக்கத்தை இந்திய விவசாயிகளும் தொழிலாளர்களும் உரத்து முழங்கினார்கள். கடந்த 71 ஆண்டுகால சுதந்திர இந்தியாவில், சந்தேகமேயின்றி மிக மிக மோசமான விவசாய விரோத, தொழிலாளர் விரோத, மக்கள் விரோத ஆட்சி பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக – ஆர்எஸ்எஸ் அரசாங்கம்தான். அதை அம்பலப்படுத்தும் விதமாகவே மோடி அரசே வெளியேறு என்ற முழக்கம் நாடெங்கும் எதிரொலித்தது. மக்கள் விரோத அரசு மட்டுமல்ல; அப்பட்டமான கார்ப்பரேட் ஆதரவு, மதவெறி ஆதரவு, சாதிவெறி ஆதரவு அரசாங்கமும் மோடி தலைமையிலான அரசாங்கமே என்பதையும் ஆக.9 இயக்கம் அம்பலப்படுத்தியது.

2015 ஆம் ஆண்டில் இந்த அரசு கொண்டு வந்த நிலம் கையகப்படுத்தல் அவசரச் சட்டத்தை எதிர்த்து நாடு முழுவதும் வெற்றிகரமான போராட்டம் நடைபெற்றது. அந்தப் போராட்டத்தின் போது, நில உரிமை இயக்கம் (பூமி அதிகார் அந்தோலன்) எனும் கூட்டு மேடை உதயமானது. இந்த அவசரச் சட்டத்திற்கு எதிராக மாநில அளவிலும் தில்லியிலும் தொடர்ச்சியான பேரணிகளும் போராட்டங்களும் நடந்தன. மாநிலங்களவையில் இடதுசாரிக் கட்சிகளும் இதர எதிர்க்கட்சிகளும் கடுமையாகப் போராடின. இத்தகைய பின்னணியில் 2015 ஆகஸ்டில் அந்த அவசரச் சட்டம் திரும்பப் பெறப்பட்டது. நில உரிமை இயக்கமானது, நாடு முழுவதும் நடந்த பசுக் குண்டர்களின் கொடிய அட்டூழியத்திற்கு எதிராகக் களமிறங்கியது. விவசாயிகளைக் குறிவைத்துக் கொல்கிற பசுக்குண்டர்களுக்கு எதிராக எண்ணற்ற போராட்டங்களை நடத்தியது.

மும்பை-அகமதாபாத் புல்லட் ரயில் திட்டத்திற்காக விவசாயிகளை நிர்ப்பந்தித்து, நிலம் கையகப்படுத்துவதற்கு எதிராகவும், சேலம் – சென்னை பசுமைச் சாலை என்ற பெயரில் எட்டு வழிச்சாலை அமைப்பதற்கு விவசாயிகளை நிர்ப்பந்தப்படுத்தி நிலங்களைப் பறிப்பதற்கு எதிராகவும், நாட்டின் பல்வேறு பகுதிகளில் தொழிற்சாலைகளுக்கான சாலைத்திட்டங்கள் மற்றும் சரக்குப் போக்குவரத்துப் பாதைத்திட்டங்கள் என்ற பெயர்களில் விளை நிலங்களைப் பறிப்பதற்கு எதிராகவும், நில உரிமை இயக்கம் களத்தில் நிற்கிறது.

200 அமைப்புகள்                                                                                                                                                                    இந்த நிலையில், 2017 ஜூன் மாதம் மத்தியப்பிரதேச மாநிலத்தில் விவசாயிகளின் உரிமைகளுக்காக நடந்த போராட்டத்தில், மந்தசூர் எனும் இடத்தில் பாஜக அரசு நடத்திய கொடூரமான துப்பாக்கிச் சூட்டில் ஆறு விவசாயிகளின் உயிர் பறிக்கப்பட்டது. இதையடுத்து ஏற்பட்ட எழுச்சியைத் தொடர்ந்து, கிட்டத்தட்ட 200 அமைப்புகளை ஒருங்கிணைத்து அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக் குழு எனும் மாபெரும் மேடை உருவாக்கப்பட்டது. இந்திய விவசாயிகளின் இந்த பிரம்மாண்ட போராட்ட மேடையானது,

விவசாயக் கடன்களை முற்றாக தள்ளுபடி செய்ய வேண்டும்; விவசாய விளைபொருட்களுக்கு சுவாமிநாதன் ஆணையம் பரிந்துரைத்தபடி, உற்பத்திச் செலவைப் போல் ஒன்றரை மடங்கு விலை வைத்து குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயிக்கப்பட வேண்டும் என இரண்டு பிரதான முழக்கங்களை முன்னெடுத்தது. நில உரிமை இயக்கம் மற்றும் அகில இந்திய விவசாயப் போராட்ட ஒருங்கிணைப்புக் குழு ஆகிய இருபெரும் இயக்கங்களிலும் மிக முக்கியமான உந்து சக்தியாக செயலாற்றிக் கொண்டிருக்கிறது அகில இந்திய விவசாயிகள் சங்கம்.

விவசாயிகளின் நாடாளுமன்றம்                                                                                                                                              அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக் குழுவானது 2017 நவம்பரில் தில்லியில் விவசாயிகளது நாடாளுமன்றத்தையும், பெண் விவசாயிகளின் நாடாளுமன்றத்தையும் நடத்தியது. நாடு முழுவதும் இருந்து பல்லாயிரக்கணக்கில் விவசாயிகள் அணி திரண்டு வந்திருந்தனர். பொது வெளியில் நடைபெற்ற இந்த நாடாளுமன்றத்தில் இரண்டு மசோதாக்கள் பகிரங்கமாக முன்மொழியப்பட்டு நிறைவேற்றப்பட்டன.

விவசாயக் கடன்களை தள்ளுபடி செய்து, கடன் வலையிலிருந்து விவசாயிகளை விடுதலை செய்வது என ஒரு மசோதாவும், விளைபொருட்களுக்கு ஒன்றரை மடங்கு விலையை உறுதி செய்வது என மற்றொரு மசோதாவும் முன்மொழியப்பட்டன. இந்த இரண்டு மசோதாக்களையும் மற்றொரு சிறப்பு மாநாட்டில் 21 கட்சிகள் ஆதரித்தன. தில்லியில் பொதுவெளியில் நடைபெற்ற இந்த விவசாயிகள் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட இரண்டு மசோதாக்களையும், ஒட்டுமொத்த இந்திய விவசாயிகள் சார்பில் நாடாளுமன்றத்தில் நடந்து முடிந்த மழைக்கால கூட்டத்தொடரில் மாநிலங்களவையில் அகில இந்திய விவசாயிகள் சங்கத்தின் இணைச் செயலாளரான கே.கே.ராகேஷ் முன்மொழிந்தார். மக்களவையில், சுவாபிமானி சேத்காரி சங்காதனா அமைப்பின் தலைவர் ராஜூ ஷெட்டி முன்மொழிந்தார்.

இத்தகைய தொடர் இயக்கங்களின் ஒரு பகுதியாக 2017 செப்டம்பரில் நாடு முழுவதும் உள்ள வர்க்க, வெகுஜன மற்றும் சமூக அமைப்புகளின் விரிவடைந்த மேடையாக மக்கள் உரிமை மக்கள் அதிகாரம் இயக்கம் (ஜன் ஏக்தா ஜன் அதிகார் அந்தோலன்) உதயமானது. இந்த இயக்கம் 2018 மே 23 அன்று நாடு முழுவதும் மோடி அரசின் நான்கு ஆண்டுகால ஆட்சியின் கொடுமைகளை அம்பலப்படுத்தி, மோடி அரசே வெளியேறு என்ற போராட்டத்தை நடத்தியது.
முன்னதாக, 2016 நவம்பரில் அகில இந்திய விவசாயிகள் சங்கம், விவசாயிகளது அடிப்படையான பிரச்சனைகளை முன்வைத்து, நாட்டின் நான்கு முனைகளிலிருந்து தில்லி நோக்கி மாபெரும் பேரணியை நடத்தியது. இதன் தொடர்ச்சியாக அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கமும் தில்லியில் பேரணி நடத்தியது.

மகாராஷ்டிர விவசாயிகள் நெடும் பயணம்                                                                                                                    இத்தகைய போராட்டங்களின் தொடர்ச்சியாக அகில இந்திய விவசாயிகள் சங்கத்தின் மகாராஷ்டிரா மாநிலக்குழுவும் ராஜஸ்தான் மாநிலக்குழுவும் சமீப காலத்தில் நடத்தியுள்ள மிகப் பிரம்மாண்டமான போராட்டங்கள் நாடு முழுவதும் உள்ள விவசாயிகளுக்கு போராட்ட உணர்வை ஊட்டியுள்ளன. குறிப்பாக, மகாராஷ்டிராவில் விவசாயிகள் சங்கத்தின் தலைமையில் நடைபெற்ற விவசாயிகளது நீண்ட பயணம் ஒட்டுமொத்த இந்தியாவின் ஜனநாயக இயக்கத்தில் ஒரு மகுடமாக மாறியிருக்கிறது. ராஜஸ்தானிலும், மகாராஷ்டிராவிலும் , கர்நாடகாவிலும் போர்க்குணத்துடன் நடைபெற்ற விவசாயிகளது போராட்டங்கள் இந்த மாநிலங்களில் ஆட்சி நடத்தும் பாஜக மற்றும் காங்கிரஸ் தலைமையிலான அரசாங்கங்களை பணியச் செய்தன. விவசாயிகளது கோரிக்கைகளை அந்த அரசுகள் ஏற்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது.

நாடு முழுவதும் விவசாயிகளின் மிகப்பெரும் போராட்ட அலைக்கு நிகராக இதே காலக்கட்டத்தில் சிஐடியு தலைமையிலும், இதர மத்திய தொழிற்சங்கங்கள் தலைமையிலும், தொழிலாளி வர்க்கத்தின் தொடர்ச்சியான போராட்டங்கள் நடைபெற்றுள்ளன. குறிப்பாக, 2015 செப்டம்பர் 2 அன்றும் 2016 செப்டம்பர் 2 அன்றும் இரண்டு மிகப் பிரம்மாண்டமான தொழிலாளர் வேலை நிறுத்தப் போராட்டங்கள் நடைபெற்றுள்ளன. இதன் தொடர்ச்சியாக, 2017 நவம்பரில் தில்லி நாடாளுமன்ற வீதியில் லட்சக்கணக்கான தொழிலாளர்கள் பங்கேற்ற மூன்று நாள் மாபெரும் முற்றுகைப் போராட்டம் வரலாறு படைத்தது.

இத்தகைய பிரம்மாண்டமான போராட்ட எழுச்சிகளின் தொடர்ச்சியாக இந்தியாவின் தொழிலாளர் – விவசாயி ஒற்றுமையை அடுத்தக்கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் விதமாக செப்டம்பர் 5 தில்லி பேரணி நடைபெறுகிறது. மத்தியில் ஆளும் பாஜக – ஆர்எஸ்எஸ் தலைமையிலான ஆட்சியை வீழ்த்துவதில் செங்கொடியின் தலைமையிலான செப்டம்பர் 5 தில்லி பேரணி மற்றுமொரு மக்கள் எழுச்சியாக முத்திரைப் பதிக்கும்.

தமிழில்: எஸ்.பி.ராஜேந்திரன்

Leave a Reply

You must be logged in to post a comment.