மும்பை :

கேரளா வெள்ளப்பாதிப்புக்களைத் தொடர்ந்து மகாஷ்டிரா மாநில பள்ளி மாணவர்கள் சிலர் சேர்ந்து டீ கடை நடத்தி பணம் சேகரித்து நிவாரணநிதி வழங்க முன் வந்துள்ள சம்பவம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

கேரளாவில் பெருமழையால் ஏற்பட்ட வெள்ளம், நிலச்சரிவு காரணமாக  483 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் பெரும்பாலன மக்கள் தங்கள் வாழ்வாதாரத்தை முற்றிலும் இழந்துள்ளனர்.இதையடுத்து உலகின் பல பகுதிகளில் இருந்தும் மக்கள் நிவாரண பொருட்களும் நிதியும் அனுப்பி வருகின்றனர்.

இந்த நிலையில், கேரள வெள்ளப்பாதிப்பை ஊடகங்களின் வாயிலாக அறிந்த மகாராஷ்டிரா மாநிலம் லத்தூரில் உள்ள அகமதுபூர் பகுதியை சேர்ந்த பள்ளி மாணவர்கள்,  கேரளாவுக்கு உதவ எண்ணி நிதி திரட்ட முடிவு செய்தனர். அதையடுத்து,  சிறிய டீக்கடை ஒன்று திறந்து, அதன்வாயிலாக பணம் புரட்டி வந்தனர். அவ்வாறு சேகரித்த பணம் ரூ.51 ஆயிரத்தை தொட்டது.

இந்த பணத்தை  பள்ளி அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்கள் உதவியுடன் மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர பட்னாவிசை சந்தித்து கேரளா வெள்ள நிவாரண நிதியில் சேர்க்கும்படி கூறினர். மாணவர்களின் செயல்குறித்து  முதல்வர் பட்னாவிஸ்  பாராட்டு தெரிவித்தார். மேலும், பலதரப்பிலும் அம்மாணவர்களுக்கு பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளன.

Leave a Reply

You must be logged in to post a comment.