திருவனந்தபுரம்;
கேரள மக்களை, ‘உலகிலேயே மோசமானவர்கள்’ என்று அவமானப்படுத்தியதற்காக, ‘ரிபப்ளிக் டிவி’ முதலாளியும், ஆர்எஸ்எஸ் பேர்வழியுமான அர்னாப் கோஸ்வாமிக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டுள்ளது.கேரளத்தில், வரலாறு காணாத மழை வெள்ளம் ஏற்பட்டு, சுமார் 30 லட்சம் பேர் கடும் பாதிப்புக்கு உள்ளாகினர். குடியிருக்கும் வீடு உட்பட அனைத்து வாழ்வாதாரங்களையும் இழந்தனர். 483 பேரின் உயிரும் பறிபோனது.

அந்த துயரமான நேரத்தில், கேரள வெள்ளம் குறித்த விவாதத்தில் பேசிய அர்னாப் கோஸ்வாமி, “இந்தியாவில் மலையாளிகளைப் போல மோசமான நபர்களை பார்த்தது இல்லை; உலகிலேயே மிகவும் மோசமான குணம் கொண்டவர்கள் அவர்கள்; இந்தியாவிற்கு எதிராக பேசுவதுதான் அவர்களின் பணி; அதற்காக தற்போது அனுபவிக்கிறார்கள்” என்று கொஞ்சம் கூட மனிதத் தன்மை இல்லாமல் பேசி இருந்தார். இது அப்போதே கேரளத்தில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. அர்னாப்புக்கு எதிராக கேரள மக்கள் கடும் கண்டனங்களையும் தெரிவித்து இருந்தனர்.

இந்நிலையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த பி. சசி, “அர்னாப் கோஸ்வாமி அவரது பேச்சுக்காக மன்னிப்பு கேட்க வேண்டும்” என்று வழக்கு தொடுத்துள்ளார். “தொலைக்காட்சியில் மோசமாக பேசிய அவர், தொலைக்காட்சியிலேயே இதற்காக மன்னிப்பு கேட்க வேண்டும்” என்று கூறியுள்ள பி. சசி, “இதுபோன்ற செயல்களில் இனியும் ஈடுபட மாட்டேன் என்று அர்னாப் கோஸ்வாமி நீதிமன்றத்தில் அவர் உறுதியளிக்க வேண்டும்” என்றும் வலியுறுத்தியுள்ளார். மேலும், “கேரளா மக்களை அவமானப்படுத்தியதற்காக 10 கோடி ரூபாய் இழப்பீடு கொடுக்க வேண்டும்; இல்லையேல், அர்னாப் கோஸ்வாமி பல வழக்குகளை சந்திக்க நேரிடும்” என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Leave A Reply

%d bloggers like this: