புதுதில்லி:
காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தவுடன், ரபேல் போர் விமான ஒப்பந்த ஊழல் குறித்து நீதி விசாரணை நடத்துவோம் என்று அக்கட்சியின் மூத்த தலைவர் ஆனந்த் சர்மா கூறியுள்ளார்.
இந்திய விமானப்படைக்கு பிரான்ஸ் நிறுவனத்திடமிருந்து, 32 ரபேல் ரக போர் விமானங்களை வாங்குவதற்கு காங்கிரஸ் ஆட்சிக்காலத்திலேயே ஒப்பந்தம் போடப்பட்டது. ஆனால், மோடி ஆட்சிக்கு வந்தபின் அந்த ஒப்பந்தம் மாற்றி அமைக்கப்பட்டது.

முன்பு ஒரு விமானம் ரூ. 520 கோடி என்ற விலைக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்த நிலையில், மோடி அரசு ரூ. 1,600 கோடி கொடுத்து வாங்குவதென்று முடிவு செய்தது. இதில்தான் சர்ச்சை ஆரம்பித்தது. இதுதொடர்பாக இடதுசாரிக் கட்சிகள் உள்பட அனைத்து எதிர்க்கட்சிகளும் ஏற்கெனவே குற்றச்சாட்டு கிளப்பியிருந்தன. காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியும் அண்மையில் இதுதொடர்பாக நாடாளுமன்றத்தில் ஆவேசமாகப் பேசினார்.ரிலையன்ஸ் நிறுவனம் லாபம் அடைவதற்கு சாதகமாக ஒப்பந்தம் உருவாக்கப்பட்டிருப்பதாகவும், பாஜக-வினர் இதன்மூலம் பல ஆயிரம் கோடி ஆதாயம் அடைந்துள்ளனர் என்றும் அவர் குற்றச்சாட்டுக்களை வைத்தார்.

இந்நிலையில், “அதிக விலை கொடுத்து, ரபேல் விமானங்களை வாங்குவதற்கு ஒப்பந்தம் போடப்பட்டது குறித்து மோடி விளக்கம் அளிக்க வேண்டும்; முறைகேடுகள் நடக்கவில்லை எனில் நாடாளுமன்றக் கூட்டுக்குழு மூலம் விசாரணைக்கு ஒப்புக் கொள்ள வேண்டும்; அவ்வாறு செய்யாவிட்டால், அடுத்து மத்தியில் காங்கிரஸ் ஆட்சி அமைந்தவுடன் நீதி விசாரணை நடத்துவோம்” என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ஆனந்த் சர்மா கூறியுள்ளார்.

Leave a Reply

You must be logged in to post a comment.