சென்னை,
ஸ்டெர்லைட் ஆலையை ஆய்வு செய்ய நியமிக்கப்பட்ட குழுவின் தலைவராக பொறுப்பேற்க நீதிபதி வாசிப்தர் மறுத்ததையடுத்து ஓய்வு பெற்ற முன்னாள் தலைமை நீதிபதி தருண் அகர்வால் நியமிக்கப்பட்டுள்ளார்.
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை எதிர்த்து போராடிய மக்கள் மீது காவல்துறை நடத்திய துப்பாக்கி சூட்டில் 13 பேர் பலியாகினர். இதையடுத்து தமிழக அரசு ஸ்டெர்லைட் ஆலைக்கு சீல் வைத்தது. தமிழக அரசின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க அனுமதி கோரி வேதாந்தா நிறுவனம் தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தது. வழக்கை விசாரித்த பசுமைத் தீர்ப்பாயம் ஸ்டெர்லைட் ஆலையில் நிர்வாகப் பணிகளை மட்டும் மேற்கொள்ள அனுமதி வழங்கியது. மேலும் ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் ஆலையை ஆய்வு செய்ய குழு அமைக்கவும் உத்தரவிட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்துள்ளது.
இதையடுத்து ஸ்டெர்லைட் ஆலையில் ஆய்வு மேற்கொள்ள ஓய்வு பெற்ற நீதிபதி எஸ்.ஜே.வசீப்தர் தலைமையில் மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியத்தைச் சேர்ந்த ஒரு உறுப்பினர், மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகத்தைச் சேர்ந்த ஒரு உறுப்பினர் ஆகியோரை கொண்ட குழு அமைக்கப்பட்டது.

ஆனால், ஆய்வுக் குழுவின் தலைவராக நியமிக்கப்பட்ட பஞ்சாப் மற்றும் அரியானா உயர்நீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதியான எஸ்.ஜே.வசிப்தார் அந்த பொறுப்பை ஏற்க மறுத்துவிட்டார்.
இதையடுத்து புதிய நீதிபதியின் பெயரை தீர்ப்பாயம் பரிந்துரைக்கும்படி கேட்டுக்கொள்ளப்பட்டது. தமிழகத்தைச் சேர்ந்த நீதிபதிகள் கே.பி.சிவசுப்பிரமணியம், ஆர்.ரவீந்திரன் ஆகியோரில் ஒருவரை நியமிக்கலாம் என்றும் பரிந்துரை செய்யப்பட்டது. ஆனால் தமிழகத்தைச் சேர்ந்த நீதிபதிகளை நியமிக்க ஸ்டெர்லைட் தரப்பு எதிர்ப்பு தெரிவித்தது.  இந்நிலையில், ஸ்டெர்லைட் ஆலையை ஆய்வு செய்யும் குழுவில் தலைவராக மேகாலயாவின் ஓய்வு பெற்ற தலைமை நீதிபதி தருண் அகர்வால் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை தேசிய பசுமை தீர்ப்பாயம் பிறப்பித்துள்ளது.

Leave a Reply

You must be logged in to post a comment.