திருப்பூர் ஊராட்சிஒன்றியம் பெருமாநல்லூர் அருகே உள்ள கருக்கன்காட்டுப்புதூர் ஊராட்சி ஒன்றியதொடக்கப்பள்ளியில் 27 மாணவர்கள், 33 மாணவிகள் என மொத்தம் 60 பேர் பயில்கின்றனர். கடந்த 2014-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் இப்பள்ளி தொடங்கப்பட்டது.

இப்பள்ளியில் கடந்த 3 ஆண்டுகளாக சத்துணவு திட்டம் இல்லாததால் குழந்தைகள் மட்டுமின்றி, பெற்றோரும் பெரும் சிரமத்தைச் சந்திக்கின்றனர். இத்திட்டம் இல்லாததால் பல குழந்தைகள் தொலைவில்உள்ள வேறு அரசு பள்ளிகளுக்கு சென்றுவிட்டனர். ஈட்டிவீரம்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட கருக்கன்காட்டுப்புதூர் ஆதிதிராவிடர் காலனி, கொண்டத்து காளியம்மன் நகர், புதுவலவு ஆகிய பகுதிகளைச் சேர்ந்த பின்னாலடைத் தொழிலாளர்கள், கட்டிடத் தொழிலாளர்கள், சுமை தூக்கும் பணியாளர்கள் மற்றும் விவசாயக் கூலிகள் என பல்வேறு தரப்பினரின் குழந்தைகள் இங்கு படித்து வருகின்றனர். தொடக்கத்தில் இங்கு 89 மாணவ, மாணவியர் படித்தனர். அதன்பின் மாணவர் எண்ணிக்கை 66ஆகக் குறைந்துள்ளது. நடப்பு கல்வி ஆண்டில் 60 ஆக குறைந்துவிட்டது.

இவ்வாறு படிப்படியாக மாணவர் எண்ணிக்கைகுறைய முக்கியக் காரணம், அரசுப் பள்ளி மாணவர்களுக்குஉரிய சத்துணவுத் திட்டம் இப்பள்ளியில் இல்லாததுதான் என்கின்றனர். அது மட்டுமல்லாமல் கழிவறைகளில் தண்ணீர் வருவதில்லை, பெண் குழந்தைகள் முற்றிலும் கழிவறைகளை பயன்படுத்தமுடியாத நிலை உள்ளது. இங்கு இரண்டு ஆசிரியர்கள் மட்டுமே உள்ளனர்.  இதுகுறித்து பெற்றோர் தெய்வாணை கூறியதாவது: ஐந்தாம் வகுப்பு வரை இருக்ககூடிய இந்த பள்ளியில் சத்துணவு இல்லை. தொடக்கப்பள்ளியில் படிக்கக்கூடிய குழந்தைகளை பராமரிக்க சரியானமுறையில் ஆட்களை நியமிக்க வேண்டும். சில பெற்றோர்கள்அதிகாலையே பணிக்கு செல்கிறார்கள். இதனால் குழந்தைகளின் பராமரிப்பும் குறைகிறது. பல குழந்தைகள்காலை வேலையில் உணவு இல்லாமல் வருகிறார்கள். ஹோட்டல் கடைகளில் மீதமாகும் உணவை வழங்குவது போல் அப்பியாபாளையம் பள்ளியில் மிச்சமாகும் சாப்பாட்டை அங்கிருப்பவர்கள் இங்கு வந்து சில நேரம் தருகிறார்கள். 60 பேர் படிக்கும் அரசுப்பள்ளியில் கடந்த மூன்று ஆண்டுகளாக சத்துணவு வேண்டி போராடுகிறோம். எங்கள் குழந்தைகளுக்கு கிடைக்க வேண்டிய வாரத்தில் 5 நாட்கள் முட்டை, ஒருநாள் விட்டு ஒரு நாள் பாசிப்பயிறு, கொண்டைக்கடலை என எதுவும் கிடைப்பதில்லை.

எனவே குழந்தைகள் போதிய ஊட்டச்சத்து இன்றி படிப்பில் கவனம் செலுத்த முடியாத நிலை ஏற்படுகிறது.சத்துணவுத் திட்டம் இல்லாததால் மாலை நேரங்களில் மிகுந்த சோர்வுடன் காணப்படுகின்றர்கள்.இது சம்பந்தமாக கிராமசபை கூட்டத்தில் பல முறை மனு கொடுத்து வலியுறுத்தினோம், ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. பள்ளியின் தலைமை ஆசிரியர் கேட்டுக் கொண்டும்கூட எந்த நடவடிக்கையும் இல்லை.ஈட்டிவீரம்பாளையம் சமுதாய நல கூடத்தில் நடந்த கிராம சபை கூட்டத்தில் ஊராட்சி ஒன்றிய பி.டி.ஓ விடம் பல முறை வலியுறுத்தியும் கண்டும் காணாமல் உள்ளார்.இதனால் இங்கு படித்த சில குழந்தைகளை அப்பியாபாளையம் பள்ளியில் சேர்த்துவிட்டார்கள். எனவே அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என வேதணையோடு கூறினார்.வேறு சிலகுழந்தைகளின் பெற்றோர் கூறும்போதும் இதையே தெரிவித்தனர். அத்துடன் இரண்டு ஆண்டுகளுக்குமுன்பாக திருப்பூர் ஒன்றியம் ஊராட்சி ஆணையர் மூலமாக மாவட்ட நிர்வாகத்திற்கும் சத்துணவு கோரி கருத்து அனுப்பப்பட்டுள்ளது.

மேலும் கூடுதலாக ஒரு ஆசிரியர், சத்துணவு திட்டத்தை அமல்படுத்தினால் சத்துணவு அமைப்பாளர் மற்றும் சமையலர் காலி இடங்களை நிரப்ப வேண்டும். பள்ளி வளாகத்தில் தற்போது திருப்பூர் வடக்கு எம்.எல்.ஏ., நிதியில் பள்ளிக்கு சுற்றுச்சுவர் கட்டப்படுகிறது. பள்ளிக்கு சொந்தமான நிலத்தை அருகில் உள்ள தனியார் ஒருவர் ஆக்கிரமித்திருப்பதும் பள்ளியின் வளர்ச்சியை பாதிக்கும் வகையில் உள்ளது என பல பிரச்சனைகளை அடுக்கினர்.  பள்ளி தலைமை ஆசிரியர் டி.சீனிவாசன் கூறுகையில்,பெற்றோர் சொன்னதை ஆமோதித்ததுடன், சத்துணவு திட்டத்தை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். வட்டார வளர்ச்சி அலுவலர் செல்வராஜிடம் கேட்ட பொழுது, இப்பொழுது குழந்தைகளின் தேவைக்கேற்ப அப்பியாபாளையம் பள்ளியிலிருந்து சத்துணவு எடுத்து வருகிறார்கள். மேலும் அந்த பள்ளிக்கென்று நிரந்தரமாக சத்துணவுக்காக சென்னையில் உள்ள சமூகநலதுறைக்கு கருத்துரு அனுப்பட்டுள்ளது. கூடிய விரைவில் சத்துணவு நிரந்தரமாக அமைக்கப்படும் என எதிர்பார்க்கலாம் என்றார்.

பல முறை வலியுறுத்தியும் திட்டம் அமல்படுத்தப்படாமல் இருப்பது குறித்து திருப்பூர் ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (சத்துணவு) டி.சாந்தகுமாருக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டபோது, இப்பள்ளியில் சத்துணவுத் திட்டத்தை அமல்படுத்துவது குறித்து அரசுக்கு அறிக்கை அளித்திருப்பதாகவும், செப்டம்பர் மாதத்தில் நடைமுறைக்கு வந்துவிடும் என்றும் தெரிவித்தார்.

Leave a Reply

You must be logged in to post a comment.