கோவை,
கோவையில் மின்இணைப்பு வழங்க லஞ்சம் கேட்டதாக எழுந்த புகாரின் அடிப்படையில் மின்வாரிய ஊழியரிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோவை மசக்காளிபாளையத்தை சேர்ந்தவர் தண்டபாணி. இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு தனது வீட்டு கட்டுமான பணிக்காக தற்காலிக மின்இணைப்பு வேண்டி கோவை அவினாசி சாலையிலுள்ள பீளமேடு மின்வாரிய கிழக்கு பிரிவு அலுவலகத்தில் விண்ணப்பித்தார். அப்போது, அவ்வலுவலகத்தின் ஊழியரான போர்மேன் சுருளியாண்டி, மின்இணைப்பு வழங்க தனக்கும், உதவி மின் பொறியாளருக்கும் ரூ.3 ஆயிரம் லஞ்சம் தருமாறு கேட்டுள்ளார். மேலும் பணம் கொடுத்தால் தான் விண்ணப்பம் வழங்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார். இதனால் ஆவேசமடைந்த தண்டபாணி ரூ.3 ஆயிரத்தை போர்மேன் மேஜையின் மீது வீசி சென்றதாக கூறப்படுகிறது. இந்த விவகாரம் தொடர்பாக மின்வாரிய உயர் அதிகாரிகளுக்கு கிடைத்த புகாரை தொடர்ந்து தற்போது போர்மேன் மீது விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. இதுகுறித்து கோவை நகரியம் செயற்பொறியாளர் கூறியதாவது, இந்த சம்பவம் தொடர்பாக புகார் அளிக்கப்படவில்லை. இருப்பினும், அங்கு நடந்த சம்பவம் தொடர்பாக விசாரித்து முழு அறிக்கையை தயார் செய்து உடனடியாக அளிக்க வேண்டும் என பீளமேடு உதவி செயற்பொறியாளரிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர் அளிக்கும் அறிக்கையின் படி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

Leave A Reply

%d bloggers like this: