சென்னை,
தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் திண்டுக்கல் மாவட்டச் செயலாளராக செயல்படுபவர் பகத்சிங்(எ)நூருல் ஹூதா. பழனி நகரில் வசித்து வருகிறார். மாற்றுத்திறனாளிகளின் பல்வேறு உரிமைகளுக்காகவும், திண்டுகல் மாவட்ட அதிகாரிகளின் முறைகேடுகளை கண்டித்தும் சங்கம் சார்பில் தொடர்ச்சியாக பல இயக்கங்கள் நடத்தி வருபவர்.

ஆக.28 அன்று பழனி நகரில் அரசு போக்குவரத்துச் செயலாளரின் சமீபத்திய உத்தரவையும் மீறி, இடைநில்லா பேருந்தின் நடத்துநர் ஒருவர் மாற்றுத்திறனாளிகளுக்கு சலுகை பயணச் சீட்டு வழங்க மறுத்ததை விசாரிக்க, பேருந்து நிலையத்திற்கு சங்க நிர்வாகிகளை அழைத்துச் சென்று, சம்பந்தப்பட்ட அதிகாரி மற்றும் ஊழியர்களிடம் பேசி தீர்வும் எட்டப்பட்டுள்ளது. இச்சம்பவம் முடிந்த நிலையில், திடீரென, குற்றவியல் நடைமுறைச் சட்டம் 111-ன்படி பழனி வருவாய் கோட்டாட்சியர் ச.அருண்ராஜ் அளித்த உத்தரவு ஒன்றை அதிகாரிகள் பகத்சிங்கிடம் வழங்கினர். அந்த உத்தரவில், மாற்றுத்திறனாளிகளின் உரிமைகளுக்காக, பகத்சிங் முன்னின்று நடத்திய சில போராட்டங்களின் அடிப்படையில், அவர் மீது சில காவல் நிலையங்களில் பல பொய்யான வழக்குகள் புனைந்திருப்பது தெரியவந்தது.  கோட்டாட்சியரின் உத்தரவில் குறிப்பிடப்பட்டிருந்த எந்த வழக்கு குறித்தும் இதுநாள் வரை பகத் சிங்கிற்கு காவல்துறையோ. அதிகாரிகளோ தெரிவித்தது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. கோட்டாட்சியரின் உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ள வழக்குகளில் ஒன்றில்கூட வழக்குப் பதியப்பட்ட தேதிகூட குறிப்பிடப்படவில்லை. இதன் மூலம் இவைகள் திட்டமிட்டு புனையப்பட்ட பொய் வழக்குகள் என்பதை புரிந்துகொள்ள முடியும்.

மாநில வருவாய்த்துறை அமைச்சர் சட்டமன்றத்தில் அறிவித்து, தமிழக அரசின் கூடுதல் தலைமைச் செயலாளர் மற்றும் வருவாய் நிர்வாக ஆணையர் பிறப்பித்த “கோட்டாட்சியர்கள் மாதந் தோறும் மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு குறைதீர் கூட்டத்தை நடத்த வேண்டும்” என்ற உத்தரவை மதித்து செயல்படாதவர் இந்த கோட்டாட்சியர் ச.அருண்ராஜ் என்பது குறிப் பிடத்தக்கது. இது குறித்து, அவரிடம் சங்கத்தின் சார்பில் பகத்சிங் கேட்டதற்கும் ஆத்திரமடைந்ததாக கூறப்படுகிறது. கோட்டாட்சியரின் உத்தரவை மத்தித்து, ஆக.29 அன்று அவர் முன் ஆஜராகி விளக்கம் கேட்கச் சென்ற பகத்சிங் மற்றும் அவருடைய வழக்கறிஞரிடம் உரிய விளக்கம் அளிக்காமல், சட்ட விரோதமாக பகத் சிங்கை கைது செய்து, பழனி கிளை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். பழனி கோட்டாட்சியரின் இந்த நடவடிக்கையை வன்மையாக கண் டித்துள்ள தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் மாநிலத் தலைவர் பா. ஜான்சி ராணி, மாநில பொதுச் செயலாளர் எஸ். நம்புராஜன் ஆகியோர் அறிக்கை ஒன்றையும் வெளியிட்டிருக்கிறார்கள்.

அந்த அறிக்கையில், தனது அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்துள்ள பழனி கோட்டாட்சியர் ச.அருண்ராஜ் மீது சட்டப் படியாகவும், நிர்வாக ரீதியாகவும் முதலமைச்சர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். பகத்சிங் மீது புனையப்பட்டுள்ள பொய் வழக்குகளை உடனே ரத்து செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தியிருக்கிறார்கள்.

Leave A Reply

%d bloggers like this: