தீக்கதிர்

மாநில கபடி அணிக்கு திருப்பூரிலிருந்து இரு மாணவிகள், ஒரு மாணவன் தேர்வு

திருப்பூர்,
திருப்பூர் மாவட்டத்தில் இருந்து கபடி மாநில அணிக்கு இரு மாணவிகள், ஒரு மாணவன் தேர்வாகி உள்ளனர்.

இந்திய பள்ளிகளுக்கான விளையாட்டு குழுமம் சார்பில் கோவை மண்டல அளவில் மாணவிகளுக்கான கபடிப் போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் சிறப்பாக விளையாடிய மாணவிகள் மாநில அணிக்கு தேர்வு செய்யப்பட்டனர். அந்த வகையில் 17 வயதிற்குட்பட்டோர் பிரிவில் திருப்பூர் ஜெய்வாபாய் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவி புவனேஸ்வரி, 19 வயதிற்குட்படோர் பிரிவில் ஜெயஸ்ரீ ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இந்த மாணவிகளை பள்ளி தலைமையாசிரியை ஸ்டெல்லா மற்றும் உடற்கல்வி ஆசிரியைகள் பாராட்டினார்கள்.  அதேபோல், மாணவர்களுக்கான மூத்தோர் பிரிவில் திருப்பூர் சின்னச்சாமி அம்மாள் மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி பிளஸ்-2 மாணவன் தினேஷ்குமார் மாநில கபடி அணிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்த மாணவரை பள்ளி தலைமையாசிரியர் துரை, உடற்கல்வி ஆசிரியை செல்வி, பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகிகள் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினார்கள்.