கோவை,
கோவையில் வனத்துறை அதிகாரி உடன் பணியாற்றும் பெண் ஊழியருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் எழுந்துள்ளது. இதைத்தொடர்ந்து பாலியல் புகாருக்குள்ளான வனவர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்குட்பட்ட கரடிமடை உட்கோட்டத்தின் வனவராக இருப்பவர் கண்ணன். இவர் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக மதுக்கரை வனச்சரகத்தில் பணியாற்றி வருகிறார். இவர் அலுவலக வேலைக்காக குரும்பபாளையம் ரோட்டில் உள்ள மதுக்கரை வனச்சரக அலுவலகத்திற்கு அவ்வப்போது வந்து செல்வது வழக்கம். இந்நிலையில், இந்த அலுவலகத்தில் கணினி இயக்குதல் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ளும் பெண் ஊழியருக்கு, கண்ணன் தொடர்ந்து பாலியல் தொல்லைகள் கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து பாதிக்கப்பட்ட பெண் ஊழியர் வனத்துறை உயர் அதிகாரிகளிடம் கடந்த இரண்டு வாரத்திற்கு முன்பே புகார் அளித்துள்ளார். இதனையடுத்து மண்டல வன பாதுகாவலர் உத்தரவின் பேரில் மாவட்ட வன அலுவலர் வெங்கடேஷ் தலைமையில் குழு அமைக்கப்பட்டு பெண் ஊழியர் அளித்த புகார் தொடர்பாக விசாரணை நடத்தி வந்தனர்.

ஆனால், கடந்த இரண்டு முறை நடந்த விசாரணையில் கண்ணன் முறையான பதிலை தெரிவிக்காமல் அலட்சியப்படுத்தியுள்ளார். மேலும், இச்சம்பவம் தொடர்பாக கேள்வி எழுப்பிய மற்றொரு பெண் வனத்துறை அதிகாரி கலாமணி என்பவர் மீது பொய் புகார் கூறி இடமாற்றம் செய்வதற்கு அதிகாரிகளை நிர்பந்தம் செய்து வேறுமாவட்டத்திற்கு இடமாற்றமும் செய்தாகவும் கூறப்படுகிறது. இது வனத்துறை ஊழியர்களிடையே பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. தவறு செய்த கண்ணன் தப்பிப்பதற்காக மற்ற ஊழியர்களை சிக்கவைத்து திசைதிருப்புகிறார் என குற்றம்சாட்டினர்.

இடமாற்றம்
இதற்கிடையே பாலியல் புகாருக்கு உள்ளான வனவர் கண்ணன் தற்போது வேலூர் மாவட்டத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். மேலும், கோவை மண்டல தலைமை வன பாதுகாவலர் தீபக் வத்சவா தலைமையில் 5 பேர் கொண்ட குழுவினர் பாலியல் புகார் தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் வனத்துறையினர் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

You must be logged in to post a comment.