கோவை,
பணி ஓய்வு பெறும் நாளில் வட்டார வளர்ச்சி அலுவலர் மீது ஒழுங்குநடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதை கண்டித்து கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

கோவை மாவட்டம், சூலூர் வட்டத்திற்குட்பட்ட கரவளி மாதப்பூர் ஊராட்சியில் வட்டார வளர்ச்சி அலுவலராக பணியாற்றி வந்தவர் இளவரசு. இவர் வெள்ளியன்று (ஆக.31) பணி ஓய்வு பெற இருந்தார். இந்நிலையில் கடந்த 2015-2016 ஆம் ஆண்டில் மரக்கன்றுகள் நடவு செய்வதில் குறைபாடுகள் உள்ளதாக குற்றம்சாட்டப்பட்டு அவர் பணி ஓய்வு பெறும் நாளில் ஒழுங்கு நடவடிக்கை என்கிற பெயரில் பணி ஓய்வு ஆணையை வழங்க மாவட்ட நிர்வாகம் மறுத்துள்ளது. ஊரக வளர்ச்சி உள்ளாட்சித் துறை நிர்வாகத்தின் இந்த நடவடிக்கை ஊழியர்களிடையே பெரும் அதிர்ச்சியையும், கொந்தளிப்பையும் ஏற்படுத்தியது. இதனையடுத்து ஒழுங்கு நடவடிக்கையை கைவிட்டு பணி ஓய்வு ஆணை அளிக்கும் வரையில் மாவட்ட ஆட்சியர் அலுவலக வாயிலில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபடுவது என ஊரக வளர்ச்சி அலுவலர் சங்கத்தினர் முடிவு மேற்கொண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்டத் தலைவர் வே.செந்தில்குமார், ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்கத்தின் மாவட்ட தலைவர் முருகேசன், செயலாளர் முத்துராஜ், எஸ்.ரேவதி,சி.சுப்பிரமணியம் உள்ளிட்ட ஏராளமான ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

ஒழுங்கு நடவடிக்கை ரத்து:
மாலை வரை தொடர்ந்து நடைபெற்ற இப்போராட்டத்தை அடுத்து மாவட்ட நிர்வாகம், சங்கத்தலைவர்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தியது. இதன்பின் இளவரசுவின் மீதான ஒழுங்கு நடவடிக்கையை ரத்து செய்து பணி ஓய்வு ஆணை வழங்கி உத்தரவு பிறப்பித்தது. இந்த போராட்டம் காரணமாக ஆட்சியர் அலுவலகத்தில் பெரும் பரபரப்பான சூழல் நிலவியது.

Leave a Reply

You must be logged in to post a comment.