மகாராஷ்டிராவின்   பீமாகோரேகான் கிராமத்தில் தலித் மக்கள் அஞ்சலி செலுத்த திரண்ட போது, சங்பரிவார் கும்பலைச் சேர்ந்தவர்கள் திட்ட மிட்டு வன்முறையை ஏவி கலவரத்தை உருவாக்கினர்.  ஆனால் அவர்கள் மீது காவல்துறை இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. மாறாக கலவரத்திற்கு காரணமே நக்சல் ஆதராவாளர்கள் என பாஜக அரசு கூறி வந்தது .
இந்நிலையில்  திடீரென 10க்கும் மேற்பட்ட மாநிலங்களில் உள்ள   இடதுசாரி அறிவுஜீவிகள், சமூகசெயற்பாட்டாளர்கள், வழக்கறிஞர்கள், பத்திரிகையாளர் உள்ளிட்டோர் வீடுகளில் அத்துமீறி காவல்துறையினர் சோதனை நடத்தினர். பின்னர் கவிஞர் வரவரராவ், வெர்னான் கான்சால்வஸ், அருண் பெரைரா, வழக்கறிஞர்சுதா பரத்வாஜ் மற்றும் கவுதம் நவலகா ஆகியோரை கைது செய்து சிறையில் அடைக்க முயன்றனர். ஆனால் நீதிமன்ற தலையிட்டின் காரணமாக தற்போது வீட்டு காவலில் வைக்கப்பட்டிருக்கின்றனர்.
இந்நிலையில் கைது செய்யப்பட்டவர்கள் மற்றம் ஆனந்த் டெல்டும்டே, ஸ்டான்ஸ் ஸ்வாமி  ஆகியோரை  நகர்ப்புற நக்சல்வாதிகள் என  ஆர்எஸ்எஸ், பாஜக உள்ளிட்ட சங்பரிவார் அமைப்பினர் பிரச்சாரம் செய்து வருகின்றனர்.
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள  குஜராத் மாநில சட்டப்பேரவை உறுப்பினரும் தலித் தலைவருமான ஜிக்னேஷ் மேவானி  “நகர்ப்புற நக்சல்வாதிகள் என்பது பாஜகவின் பழிவாங்கும் திட்டமாகும்.  இந்த தகவலை ஒரு சில நகர்ப்புற முட்டாள்கள் பரப்பி வருகின்றனர்.   குஜராத்தில் பாஜக இது  போல நடந்துக் கொள்வதை நான் ஏற்கனவே பல முறை கண்டுள்ளேன்.   அந்த திட்டம் இப்போது அகில இந்திய அளவில் செயல் படுத்தப் படுகிறது. மோடி குஜராத் முதல்வராக இருந்த போது இதே போல் மோடியை கொல்ல சதி செய்தாக பொய் பிரச்சாரம் செய்து , மோடிக்கு எதிரானவர்களை  என்கவுண்டரில் சுட்டு கொன்றனர்.   அந்த வழக்குகள் இன்னும் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.
எல்கர் பரிஷத் என்னும்  தலித் அமைப்பின் மீது எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் அனைத்தும் பாஜகவின்  அரசின் பயத்தையே காட்டுகின்றன.    இந்த அமைப்பில் நீதிபதிகள் கோல்சே பாடில் மற்றும் பி பி சாவந்த், ராதிகா வெமுலா மற்றும் பிரகாஷ் அம்பேத்கார் உள்ளனர்.   தலித்துகளான நாங்கள் குஜராத் மாநிலத்தில் 7% இருக்கிறோம்.  ஆனால் தேசிய அளவில் 17% இருக்கிறோம்.  அனைவரும் இணைந்து இதற்கு எதிராக குரல் கொடுப்போம்.” என்று தெரிவித்திருக்கிறார்.

Leave A Reply

%d bloggers like this: