தூத்துக்குடி;
உயர் நீதிமன்ற உத்தரவுப்படி தமிழக அரசு ஸ்டெர்லைட் – துப்பாக்கிச் சூடு சம்பந்தபட்ட அனைத்து வழக்கு கோப்புகளையும் உடனடியாக சிபிஐ வசம் ஒப்படைத்து ஒத்துழைக்க வேண்டுமென்று சிபிஎம் தூத்துக்குடி மாவட்டச் செயலாளர் கே.எஸ்.அர்ச்சுனன் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
கடந்த 22-5-2018 அன்றும் அதன் பிறகும் தூத்துக்குடி மக்களின் வாழ்வாதாரத்தை அழித்து சுற்று சூழலை மாசுபடுத்தி வரும் ஸ்டெர்லைட் தாமிர ஆலைக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டதில் 13 பேர் படுகொலை செய்யப்பட்டனர். இந்த துப்பாக்கி சூடு, காவல் நிலைய சித்ரவதை உள்ளிட்ட மனித உரிமை மீறல்களில் ஈடுபட்ட காவல்துறையினர் மற்றும் அதிகாரிகள் மீது கொலை வழக்கு பதிவு செய்து மத்திய குற்றப் புலனாய்வுத்துறை (சிபிஐ) விசாரிக்க வேண்டுமெனக் கோரி 29-5-2018 அன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் தூத்துக்குடி மாவட்டச் செயலாளர் கே.எஸ். அர்ச்சுனன் புகார் கொடுத்தார்.

ஆனால், வழக்கு பதிவு செய்யப்படாததால் சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் ரிட் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த மதுரை உயர் நீதிமன்றம் தமிழக அரசின் சட்ட விரோத செயல்களைக் கண்டித்ததுடன் ஏற்கனவே பெறப்பட்ட புகாரின் மீது உரிய வழக்கு பதிவு செய்யப்பட வேண்டுமென்றும், துப்பாக்கி சூடு , ஸ்டெர்லைட் போராட்டம் தொடர்பாக பதிவு செய்யப்பட்டிருந்த ஏனைய வழக்குகளையும் சிபிஐ- ஒரு சிறப்பு புலனாய்வு குழுவினை அமைத்து முறையாக விசாரணை மேற்கொள்ள உத்தரவிட்டது.

இது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றிகளில் குறிப்பிடத்தக்க ஒன்றாகும். இந்த உயர் நீதிமன்ற உத்தரவுப்படி தனது 29-5-2018 ஆம் தேதியிட்ட புகாரின் பேரில் கொலை வழக்கு பதிவு செய்து சம்பந்தபட்ட காவல் துறையினர் மற்றும் அதிகாரிகள் மீது விரைவான சட்டப்பூர்வ நடவடிக்கை எடுத்திட வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில் 31-8 – 2018 அன்று கே.எஸ்.அர்ச்சுனன் சென்னையிலுள்ள சிபிஐ- இணை இயக்குநர் அலுவலகத்தில் நீதிமன்ற உத்தரவை சமர்பித்தார். இந்த உத்தரவின் மீது கூடிய விரைவில் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று சிபிஐ இணை இயக்குநர் அலுவலகம் தெரிவித்துள்ளது. உயர் நீதிமன்ற உத்தரவுப்படி தமிழக அரசு ஸ்டெர்லைட் – துப்பாக்கிச் சூடு சம்பந்தப்பட்ட வழக்கின் அனைத்து கோப்புகளையும் உடனடியாக சிபிஐ வசம் ஒப்படைத்து ஒத்துழைக்க வேண்டுமென்று கே.எஸ்.அர்ச்சுனன் வலியுறுத்தியுள்ளார். உயர் நீதிமன்றத்தில் சிபிஐ விசாரணை கோரிய மனுவில் ஆஜரான வழக்கறிஞர்கள் எல். ஷாஜி செல்லன், இ.சுப்பு முத்துராமலிங்கம் ஆகியோர்கள் உடனிருந்தனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.