==ஆர்.ராஜா===                                                                                                                                                                        தமிழகத்தில் மொத்தம் 45 சுங்கச் சாவடிகள் உள்ளன. அதில் சுழற்சி முறையில் வரும் செப்டம்பர் மாதம் 21 முதல் சுங்கச் சாவடிகளில் கட்டணத்தை 10 முதல் 12 சதவீதம் வரை உயர்த்திக்கொள்ள தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அறிவித்துள்ளது. இதில், ஏற்கெனவே 21 சுங்கச் சாவடிகளில் கடந்த ஏப்ரல் மாதம் முதல் கட்டணம் உயர்த்தப்பட்டது. தற்போது மீதமுள்ள நல்லூர் (திருவள்ளூர்), கொடைரோடு(திண்டுக்கல்), வேலன் செட்டியூர் (கரூர்), பாளையம் (தர்மபுரி), விஜயமங்கலம் (குமாரபாளையம்), புதூர் பாண்டியபுரம் (விருதுநகர்), எலியார்பத்தி (மதுரை), ராசாம்பாளையம், ஓமலூர் (நாமக்கல்), சமயபுரம் (திருச்சி), வீரசோழபுரம் (சேலம்), மேட்டூர் பட்டி (சேலம்), பழையூர் (காஞ்சிபுரம்), ஆத்தூர் (செங்கல்பட்டு), வல்லவன் கோட்டை (தஞ்சாவூர்), விக்கிரவாண்டி (விழுப்புரம்), புதுக்கோட்டை (தூத்துக்குடி), பொன்னம்பலபட்டி (திருச்சி), திருமாந்துறை (விழுப்புரம்), நெமிலி (ஸ்ரீபெரும்புதூர்) உள்ளிட்ட 21 சுங்கச் சாவடிகளில் இந்தக் கொள்ளையை அமல்படுத்திட முடிவெடுக்கப்பட்டுள்ளது.

வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது தங்க நாற்கரச் சாலை என்கிற பெயரில் இந்தியாவின் நான்கு திசைகளை இணைக்கும் மிகப் பெரும் பொருட்செலவில் (பல ஆயிரம் கோடி ரூபாயில்) தெற்கே சென்னை, மேற்கே மும்பை, வடக்கே தில்லி, கிழக்கே கொல்கத்தா என நான்கு முக்கிய நகரங்களையும் இணைக்கும் வகையில், 5846 கிலோ மீட்டர் சாலை முழுக்க முழுக்க மத்திய அரசின் செலவில் அமைக்கப்பட்டது. அதே ஆட்சிக் காலத்தில் தான் தனியார்மயம், தாராளமயம், உலகமயம் என்கிற மூன்று மயங்கள் அமலாக்கப்பட்ட காலம். இக்காலத்தில் நான்கு வழிச்சாலை மற்றும் ஆறு வழிச் சாலைகள் நாடு முழுவதும் அமைக்கப்பட்டன. இதில் நிலங்களை கையகப்படுத்துவது அதற்குரிய தொகையை தருவது திட்டங்களை மேற்பார்வையிடுவது தேசிய நெடுஞ்சாலைத்துறையின் மத்திய அரசின் பணியாகவும் சாலை அமைப்பதும் சாலை அமைத்த பின் வசூல் வேட்டை நடத்திக் கொள்வதும் தனியார் வசம் ஒப்படைப்பதும் என்கிற திட்டத்தை அன்றைய மத்திய அரசு அறிவித்தது.

இத்திட்டத்தின்படி 43, 414 கிலோ மீட்டர் சாலை அமைக்க ஒப்பந்தம் கோரப்பட்டு இந்தியா முழுவதும் பல்வேறு நகரங்களை இணைக்கும் வகையில் சாலை போடப்பட்டுள்ளது. சில இடங்களில் சாலை அமைக்கும் பணி இன்னும் நடந்து வருகிறது.

அதில் சாலை போடும் நிறுவனங்களே செலவிட்ட தொகையை வசூல் செய்து கொள்ளும் திட்டப்படி அதாவது சாலை அமைப்பது, வசூல் செய்வது, சென்று விடுவது என்கிற அடிப்படையில் இந்தியாவில் 462 சுங்கச் சாவடிகள் அமைத்து பல ஆண்டுகாலம் இரவு பகலாக வசூல் வேட்டை நடத்தி வருகிறார்கள். இதில் வேடிக்கை என்னவென்றால் சாதாரண மாநில நெடுஞ்சாலைக்கு சாலை அமைப்பதற்கு செலவிடும் தொகையை விட 13 மடங்கு அளவிற்கு தேசிய நெடுஞ்சாலையில் தனியார் நிறுவனங்கள் சாலை அமைப்பதற்கான செலவை செய்து கொள்ளலாம் என தேசிய நெடுஞ்சாலைத்துறை ஏற்றுக்கொண்டது. மேலும் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் திட்டச் செலவில் மேற்கண்ட தனியார் நிறுவனங்களுக்கு 90 சதவிகிதம் வங்கிக்கடன் தாராளமாக வழங்கி வருகின்றன.

சுங்கச்சாவடி கட்டணக்கொள்ளையும் விழி பிதுங்கும் வாகன உரிமையாளர்களும்
உதாரணமாக திருச்சி சமயபுரத்தில் இயங்கி வரும் இந்து நவயுகா இன்ஃப்ரா ப்ராஜெக்ட் பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனம் 38.4 கிலோ மீட்டர் சாலை அமைக்க 411 கோடி ரூபாய் செலவானதாக கூறி OGI திட்டப்படி கடந்த 7 ஆண்டுகளாக 316.34 கோடி ரூபாய் வசூல் செய்ததாக அவர்களாகவே கூறிக்கொள்கிறார்கள்.

திருச்சி சமயபுரம் சுங்கச் சாவடி
ஒப்பந்த நிறுவனத்தின் பெயர்:- இந்து நவயுகா இன்ப்ரா பிராஜெக்ட் பிரைவேட் லிமிடெட்
கட்டண அறிவிப்பு தேதி:- 30 ஏப்ரல் 2010
வசூலிக்கத் துவங்கிய நாள்:- 06 மே 2010
சாலை அமைக்க செலவு செய்த தொகை கோடியில்:– 411 கோடி.

சுங்கச் சாவடி வருவாய் கோடியில்:-
06-05-2010 முதல் 31 அக்டோபர் 2017 முடிய 7 ஆண்டுகள் வசூலித்தத் தொகை 316.34 கோடி. தேசிய நெடுஞ்சாலைத் துறையுடன் இதுபோன்ற நிறுவனங்கள் 10 ஆண்டுகள் மட்டும் தான் இவ்வாறு வசூல் செய்ய வேண்டும். அதன் பிறகு அந்த வசூல் மையத்தை மூடவேண்டும் என்றே ஒப்பந்தத்தில் உள்ளது. ஆனால், இந்தியாவில் உள்ள 462 சுங்கச் சாவடிகளில் இதுவரை 15 ஆண்டுகளுக்கு மேல் வசூல் வேட்டை நடத்தி மூடப்பட்டுள்ள சுங்கச்சாவடி என்பது வெறும் 62 தான். அதில் தமிழகத்தில் இயங்கி வந்த சுங்கச் சாவடி தூத்துக்குடி மேம்பாலம் மற்றும் நாமக்கல் மேம்பாலம் ஆகிய இரண்டு மட்டுமே.

தமிழகத்தில் 41 சுங்கச் சாவடி மையங்கள் செயல்பட்டு வருகின்றன. மேற்கண்ட பட்டியலைப் பார்த்தால் ஒரு குறிப்பிட்ட நிறுவனம் சாலை அமைக்கச் செலவு செய்த தொகையையும் அமைத்தபின் நாள் ஒன்றுக்கு எவ்வளவு வசூல் நடைபெறுகிறது என்பதையும் அவர்களாகவே கூறிக்கொண்டு மிகப்பெரிய கொள்ளையை நடத்தி வருகிறார்கள். இதில் லாரி, பஸ், கார் போன்ற வாகனங்களுக்கு சாலை வரி, பசுமை வரி, வாகனங்களை வாங்குகிறபோது உற்பத்தி வரி, விற்பனை வரி உள்பட அத்தனை வரிகளையும் கட்டி விட்டு சாலையை பயன்படுத்த மீண்டும் ஒரு கட்டணக் கொள்ளையை வாகன உரிமையாளர்கள் மீது திணிப்பதை நியாயமற்றதாகவே கருதவேண்டியுள்ளது.

குதிரை குழியைத் தோண்டியது மட்டுமல்லாமல் குப்புறத் தள்ளியது போல இந்தியாவில் துவங்கப்படும் சுங்கச்சாவடி மையங்கள் என்பவை மிகப்பெரிய பொய்க் கணக்கு காட்டுகின்றன என்கிற ஆய்வு (நான்கு வாகனங்களுக்கு வசூல் செய்தால் ஒரு வாகனத்திற்கு மட்டும்தான் கணக்கு காட்டப்படுகிறது) வந்த வண்ணம் உள்ளது.

முதலாளிகளின் லாப வெறி அடங்காத நிலையில், பத்து ஆண்டுகள் என்ற ஒப்பந்தத்தை மேலும் 15 ஆண்டுகள் நீடித்து 25 ஆண்டுகள் வசூல் செய்வதற்கு உரிமை கேட்டு மும்பை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. ஆனால், அந்த வழக்கு தள்ளுபடி ஆகியுள்ள நிலையில், உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார்கள். அத்துடன் காலநீட்டிப்புச் செய்ய மோடி அரசுக்கு கோரிக்கையும் வைத்துள்ளார்கள். எனவேதான் மத்திய அரசு 12 சதமானம் வரை சுங்கக் கட்டணத்தை உயர்த்திக் கொள்ள சம்மதம் தெரிவித்துள்ளது. மேலும் சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை பல மடங்கு குறைந்தாலும் இந்தியாவில் டீசல் விலையை குறைக்க மாட்டேன் என அடம் பிடிக்கிறது.

எனவே அன்றாடம் சரக்கு போக்குவரத்தில் ஈடுபட்டுள்ள லாரி உரிமையாளர்கள் மற்றும் வாகன உரிமையாளர்கள், பொதுமக்கள் சாலை வரி, பசுமை வரி, ஜிஎஸ்டி, உதிரிபாகங்கள் விலை உயர்வு என அன்றாடம் லாரி தொழிலை நடத்துவதற்கு திண்டாடும் லாரி உரிமையாளர்கள் வாகன உரிமையாளர்களுக்கு பெரும் இழப்பை ஏற்படுத்திடும் மோடி அரசின் கார்ப்பரேட் ஆதரவுக் கொள்கையை புரிந்து கொள்வோம்.

கட்டுரையாளர் : சிபிஎம் மாவட்டச் செயலாளர்,
திருச்சி மாநகர் மாவட்டக்குழு

Leave a Reply

You must be logged in to post a comment.