===பினராயி விஜயன், கேரள முதலமைச்சர்===
அண்மையில் பெய்த பெருமழையில் கேரள மாநிலம் பேரழிவை சந்தித்துள்ளது. போதிய நிதியை தந்து உதவாத மத்திய அரசு, வெளிநாட்டு உதவிகள் பெறுவதையும் தடுத்து வருகிறது. இந்நிலையில், பெருவெள்ளப் பாதிப்புகள் குறித்து விவாதிக்க சட்டமன்றத்தின் சிறப்பு கூட்டம் வியாழனன்று நடைபெற்றது. இதில் முதல்வர் பினராயி விஜயன் ஆற்றிய உரை:

இந்த நூற்றாண்டு காணாத மிகப்பெரிய பருவகால பேரழிவுக்கு கேரளம் சாட்சியமாகியது. பருவமழை துவக்கத்திலேயே துயரத்தை விதைத்தது. ஆகஸ்ட் மாதத்தில் ஒரு மகாபிரளயத்தை நோக்கி நகர்ந்தது. இந்த பேரழிவின் ஊடாக கேரளத்தில் லட்சக்கணக்கான மக்களின் வாழ்க்கை மிகப்பெரும் துயரத்துக்கு உள்ளானது. ரத்தம்சிந்தி உழைத்துச் சேர்த்ததையெல்லாம் இழக்கும் சூழலை பலரும் எதிர்கொண்டனர். பருவமழை கனத்து நிலச்சரிவு, வெள்ளப்பெருக்கு, மண்சரிவு போன்ற பாதிப்புகள் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் அதிகரித்தது. அதன் விளைவாக 483 மனித உயிர்கள் பறிக்கப்பட்டன. 14 பேரை காணவில்லை. 140 பேர் படுகாயமடைந்தனர். பருவமழை வலுப்பட்ட ஆகஸ்ட் 21 இல் 3 லட்சத்து 91 ஆயிரத்து 494 குடும்பங்களைச் சேர்ந்த 14 லட்சத்து 50 ஆயிரத்து 707 பேர் நிவாரண முகாம்களில் தங்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இன்றைய நிலவரத்தின்படி 305 முகாம்களில் 16 ஆயிரத்து 767 குடும்பங்களிலிருந்து 59 ஆயிரத்து 296 நபர்கள் உள்ளனர்.

சிலர் உறவினர்களின் வீடுகளிலும் மாற்று இடங்களிலும் இடம் பெயர்ந்து உயிர் பிழைத்துள்ளனர்.மீட்பு நடவடிக்கைகளில் அர்ப்பணிப்பு மிக்க தலையீடுகள் மரண எண்ணிக்கை ஒப்பீட்டளவில் குறைய காரணமாகின. சொந்த உயிர்களை துச்சமென கருதிய மீட்பு நடவடிக்கையை நாடு சந்தித்தது. மீட்புப் பணிகளில் ஈடுபட்டவர்கள் படகு கவிழ்ந்தும், மற்ற விபத்துகளிலும் சிக்கினர். ஆனாலும் மீட்பு நடவடிக்கைகளிலிருந்து பின்வாங்காமல் சொந்தச் சகோதரர்களைப்போல் மற்றவர்களை காப்பாற்றியவர்களுக்கு பெரிய வணக்கத்தை தெரிவிக்கலாம்.

பொருளாதார இழப்பு
வீடுகளுக்கும் அதையொட்டிய வசதிகளுக்கும் ஏற்பட்ட பாதிப்புகள் மாநிலத்தின் முன்னேற்றத்தை தவிடுபொடியாக்கிவிட்டன. வீடுகளுக்கு ஏற்பட்ட பாதிப்பு, வீட்டு உபகரணங்கள், சாகுபடிகள் இழப்பு, வளர்ப்புப் பிராணிகளின் இழப்பு, வாழ்வாதார இழப்பு, கல்வி நிலையங்கள், மருத்துவமனைகள், அரசு அலுவலகங்கள் உள்ளிட்ட பொது அமைப்புகளில் ஏற்பட்ட இழப்புகள், சுற்றுச்சூழலில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் இவற்றையெல்லாம் மதிப்பீடு செய்யும்போது மாநிலத்தில் ஏற்பட்டுள்ள இழப்பு மிகப்பெரியது. சுற்றுலா போன்ற துறைகளுக்கு இது பேரிடியாக அமைந்து விட்டது. முதற்கட்ட மதிப்பீடுகள், மாநிலத்தின் ஆண்டு திட்டங்களுக்கான தொகையை விட அதிக இழப்பு ஏற்பட்டுள்ளதை சுட்டிக்காட்டுகின்றன.
எந்த பேரழிவையும் எதிர்கொள்ள மூன்று கட்டங்கள் உள்ளன. முதலாவது மீட்பு நடவடிக்கை, இரண்டாம் கட்டமான மறுவாழ்வு நடந்துகொண்டிருக்கிறது. அதை வெற்றிகரமாக்க தேவையான தலையீடுகள் நடந்து வருகின்றன. மறுகட்டமைப்பு என்கிற மிகவும் முக்கியமான மூன்றாவது கடமை நம்முன் உள்ளது. அது எவ்வாறு அமைய வேண்டும் என்பது புதிய கேரளம் படைப்பதை அடிப்படையாக கொண்டதாகும். அதற்கு தேவையான விவாதம் இங்கு முன்னுக்குவர வேண்டும். அதற்காகவும் இந்த சட்டமன்ற சிறப்புக் கூட்டம் நடத்தப்படுகிறது.

இங்கு நிலைத்து நிற்கும் மனிதாபிமானமும் அதன் அடிப்படையில் உருவாகியுள்ள ஒற்றுமையுமே இதுபோன்றதொரு மாபெரும் பேரழிவை கடந்து செல்ல நமக்கு ஆற்றலைத் தருகின்றன. உலகம் முழுவதும் உள்ள மக்கள் கேரளத்துக்கு அளித்து வரும் ஆதரவுக்கு காரணம் ஒற்றுமையாக நாம் மேற்கொண்டுவரும் நடவடிக்கைகளாகும். அதை மேலும், உறுதியாக முன்னெடுக்கவும் மாநிலம் சந்தித்துவரும் இந்த நெருக்கடியை கடந்துசெல்ல பயனுள்ள விவாதங்களும் ஆலோசனைகளும் இங்கு வர வேண்டும் என அரசு எதிர்பார்க்கிறது.

அரசின் முன்னெச்சரிக்கை
மாநிலத்தில் மழைபாதிப்பு ஏற்படும் என்கிற அறிவிப்பை மத்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்த உடனேயே அதை எதிர்கொள்ள உறுதியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால், அறிவிக்கப்பட்டதைவிட அடுத்தடுத்த நாட்களில் இங்கு மிகப்பெரிய மழையை எதிர்கொண்டோம். அது நமது வழக்கமான ஏற்பாடுகளைக் கடந்ததாக இருந்தது. எதிர்பாராத இந்த அளவுகடந்த பெருமழை பல்வேறு வடிவங்களில் மாநிலத்தை பாதிப்புக்கு உள்ளாக்கியது.

16.5.2018 முதல் அரசு தயார் நிலையில் இருந்தது. இதோடு தொடர்புள்ள மாநிலத்தின் பேரழிவு நிவாரண ஆணையத்தின் கூட்டம் உட்பட பல்வேறு நிலையில் கூட்டங்கள் நடத்தி நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டன. பெருமழையின் பாதிப்பு முதன்முதலாக கோழிக்கோடு மாவட்ட மலையோரப் பகுதியான கட்டிப்பாறயில் பெரும் நிலச்சரிவில் தொடங்கியது. இந்த துயர நிகழ்வில் 14 பேர் உயிரிழந்தனர். வீடுகள் பலவும் தகர்ந்தன. பெருமளவிலான விளைபொருட்களுக்கு சேதம் ஏற்பட்டது. நிலத்தின் மேற்பரப்பில் மாற்றம் ஏற்பட்டது.

மலப்புறம், கண்ணூர், கோழிக்கோடு, பாலக்காடு உள்ளிட்ட மாவட்டங்களில் பெரிய அளவிலான அழிவுகள் ஏற்பட்டன. வயநாடு மாவட்டம் முழுவதும் துண்டிக்கப்பட்டிருந்து. ஆலப்புழா, கோட்டயம், கொல்லம் மாவட்டங்களின் பல்வேறு பகுதிகளில் பெய்த கனமழையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு மக்களை முகாம்களுக்கு மாற்ற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

ஆகஸ்ட் 8 ஆம் தேதி காலை மாநிலத்தில் பல்வேறு பகுதிகளில் கனமழை தொடங்கியதோடு இந்த நூற்றாண்டில் கேரளம் காணாத பிரளயம் ஏற்பட்டது. வானிலை குறித்த அனைத்து மதிப்பீடுகளையும் தவறாக்கி மாநிலத்தில் கனமழை தொடர்ச்சியாக பெய்தது. ஆகஸ்ட் 9 முதல் 15 வரை உள்ள காலகட்டத்தில் மாநிலத்தில் மதிப்பிடப்பட்டிருந்த மழையின் அளவு 98.5 மில்லி மீட்டராகும். ஆனால் பெய்த மழையின் அளவு 352.2 மி.மீட்டர். அதாவது கேரளத்தில் பெய்யும் என மத்திய வானிலை ஆய்வு மையம் மதிப்பீடு செய்ததைவிட மூன்று மடங்குக்கும் அதிகமாக மழை பெய்தது.

மழை வலுவடைந்ததும் கேரளத்தில் உள்ள அனைத்து ஆறுகளிலும் பெரிய அளவில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. கேரளத்தில் உள்ள 82 அணைகளும் நிரம்பி வழிந்தன. மழையை தாங்க முடியாமல் நிலச்சரிவுகளும் மண்சரிவுகளும் ஏற்பட்டன. சில இடங்களில் ஆறு வழிதவறி பாய்ந்துள்ளது.

தொடர்ச்சியாக பெய்த மழையிலும் வெள்ளப்பெருக்கிலும் லட்சக்கணக்கான வீடுகளில் புகுந்தது. பத்தாயிரக்கணக்கான வீடுகள் வெள்ளத்தில் மூழ்கின. சாலைகளும் பாலங்களும் தகர்ந்தன. 57 ஆயிரம் ஹெக்டேர் சாகுபடி நிலங்கள் வெள்ளத்திற்கு அடியில் சிக்கின. இப்பகுதிகளில் மக்களின் வாழ்வாதாரம் முற்றிலும் தகர்ந்து விட்டது. வளர்ப்புப் பிராணிகளும் பறவைகளும் வெள்ளப்பெருக்கில் செத்து மிதந்தன. அரசு நிறுவனங்கள் பெருமளவில் வெள்ளத்தில் மூழ்கின. விலைமதிப்பற்ற சான்றிதழ்கள் பல மழையில் நனைந்து நாசமாகின.

மீட்பு நடவடிக்கைகள்
மாநிலத்தில் இந்த பெருவெள்ளப் பாதிப்பை எதிர்கொள்ள அரசு இயந்திரத்தை முழுமையாக முடுக்கி விட்டது. காவல்துறையும் தீயணைப்புப் படையும் தொடக்கத்திலேயே களமிறங்கின. வெள்ளப்பெருக்கு மிகுதியானதும் மத்தியப் படைகளும் மீட்புப் பணிகளில் கரம்கோர்த்தன. யுத்தகால அடிப்படையிலான இந்த தலையீடுகள் உயிர்ப்பலி எண்ணிக்கையை குறைக்க உதவின.பெருமழை பாதிப்பு தொடங்கியபோது மக்களது உயிர்களை பாதுகாப்பதற்கு மீட்பு நடவடிக்கைகளுக்கு அரசு முக்கியத்துவம் அளித்தது. இதற்காக 24 மணி நேரம் செயல்படும் கட்டுப்பாட்டு அறை ஆகஸ்ட் 9 முதல் தலைமைச் செயலகத்தில் செயல்படத் தொடங்கியது. மாவட்ட ஆட்சியர்களும் மாவட்டங்களில் மீட்பு- நிவாரண நடவடிக்கைகளை ஒருங்கிணைத்தனர். ஐஏஎஸ் அதிகாரிகள் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நியமிக்கப்பட்டனர்.
வெள்ளப் பாதிப்புகள் குறித்து விவாதிக்க 21.8.2018 அன்று அனைத்துக் கட்சிகளின் கூட்டம் நடத்தப்பட்டது. நிவாரணப் பணிகளை இணைந்து செய்வது என அந்த கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. நிவாரணப் பணிகளை கூடுதல் வலுவுடன் முன்னெடுத்துச் செல்ல அனைத்துக் கட்சிக் கூட்டம் உதவியது.

பெருவெள்ளம் மாநிலத்தை பாதித்தபோது பலமுறை அமைச்சரவைக் கூட்டங்கள் நடத்தப்பட்டன. அவசர முடிவுகள் மேற்கொள்ள அமைச்சர்கள் இ.பி.ஜெயராஜன், இ.சந்திரசேகரன், மாத்யு.டி.தாமஸ், ஏ.கே.சசீந்தரன், ராமச்சந்திரன் கடனப்பள்ளி ஆகியோர் இடம்பெற்ற அமைச்சரவை துணைக்குழு அமைக்கப்பட்டது.

கேரளம் இதுவரை கண்டிராத ஒற்றுமையுடன் அனைவரும் சேர்ந்து மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டனர். அன்பின் மகத்தான வெளிப்பாடாக இந்த நடவடிக்கைகள் அமைந்தன. மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்ட அனைவரது சேவைகளையும் அரசு பாராட்டுகிறது.
மீட்புப் பணிகளை காவல்துறையிடம் ஒப்படைத்ததால் அவர்கள் குறிப்பிட்ட நேரத்தில் ராணுவம் உள்ளிட்ட மீட்புப் படையினரை உரிய நேரத்தில் அந்தந்த இடங்களுக்கு அழைத்துச் சென்று உதவினர். ராணுவம், விமானப்படை, கப்பற்படை, கடலோரக் காவல்படை, என்டிஆர்எப், சிஎஸ்எப், சிஆர்பிஎப், டிபிஎப் ஆகிய மத்தியப் படைகள் 7743 பேர், 40 ஆயிரம் காவல்துறையினர், 3200 தீயணைப்புப் படையினரும் மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர். அதோடு வனம், சுங்கம், சிறை, மோட்டார் வாகனம் போன்ற துறைகளில் உள்ள ஊழியர்களும் அவர்களோடு கரம்கோர்த்து பொதுமக்களும் இப்பணிகளில் ஈடுபட்டனர். இளைஞர்கள் பெருமளவில் மீட்பு-நிவாரணப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

நிவாரண உதவி
முகாம்களிலிருந்து வீடு திரும்பும் ஒவ்வொரு குடும்பத்திற்கும் உடனடி அடிப்படை தேவைகளுக்காக பத்தாயிரம் ரூபாய் வழங்கும் பணி துவக்கப்பட்டுள்ளது. அதற்கான நிதி எஸ்.டி.ஆர்.எப் மற்றும் முதல்வரின் நிவாரண நிதியிலிருந்தும் (எஸ்.டி.ஆர்.எப்) மாவட்ட ஆட்சியர்களுக்கு நிதித்துறை அனுப்பியுள்ளது. மத்திய அரசின் நிதியிலிருந்து ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூ.3800 மட்டுமே வழங்க முடியும். முதல்வரின் நிவாரண நிதியிலிருந்து மீதமுள்ள ரூ.6200 வழங்கப்படுகிறது. வீடுகளில் வாழ்க்கையை தொடங்க தேவையான பொருட்கள் அடங்கிய பைகளும் வழங்கப்பட்டு வருகின்றன.முதல்வரின் நிவாரண நிதிக்கு 29.8.2018 வரை 730 கோடி ரூபாய் வந்துள்ளது. இதற்குமேல் காசோலையாகவும் நிலமாகவும் ஆபரணங்களாகவும் மற்ற வாக்குறுதிகளாகவும் வந்துள்ளன.
பிரதமரும் மத்திய உள்துறை அமைச்சரும் வெள்ளம் பாதித்த பகுதிகளை பார்வையிட்டு மாநிலத்திற்கு அறிவித்துள்ள தொகை ரூ.600 கோடி. மத்திய குழுவின் ஆய்வுக்குப் பிறகு பாதிப்புகள் குறித்த மதிப்பீட்டின் அடிப்படையில் கூடுதல் தொகை கிடைக்கும் என்பது அரசின் எதிர்பார்ப்பு.

உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் உதவிகள் கிடைத்து வருகின்றன. அவற்றை விதிகளுக்கு உட்பட்டு பெறுவதற்கு அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. உலகின் அனைத்துப் பகுதிகளிலிருந்தும் நீண்டு வரும் உதவிகள் மாநிலத்திற்கு நம்பிக்கை அளிக்கின்றன.
உதவுவதற்காக உலகமெங்கும் உள்ள பல்வேறு நிறுவனங்கள் (ஏஜென்சி) முன்வந்துள்ளன. நேற்று (ஆகஸ்ட் 29) உலக வங்கியின் குழுவினர் கேரளத்திற்கு வந்தனர். தலைமைச் செயலாளர் உள்ளிட்டோருடன் அவர்கள் விவாதித்தனர். மாநில நலன்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் யார் உதவ முன்வந்தாலும் அதை ஏற்போம் என்பதே நமது நிலைபாடு.

பெருவெள்ளப் பிரளயத்தினால் ஏற்பட்டுள்ள துயரத்தில் மூழ்கிக் கிடக்கும் கேரளத்தை தூக்கி நிறுத்துவதற்கான முயற்சிகளுக்கு அனைத்துப் பகுதியினரும் துணைநிற்பதோடு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என அரசு எதிர்பார்க்கிறது. அனைவரும் ஒன்றாக நிற்க முடிந்துள்ளது. அதை கூடுதல் வேகத்தில் முன்னெடுத்துச் செல்லவும், புதிய பாடங்களை உலகத்திற்கு கொடையாக அளிக்கவும் நம்மால் முடியும். அதற்கான ஒத்துழைப்பை வழங்க வேண்டும்.

தமிழில்: சி.முருகேசன்

Leave A Reply

%d bloggers like this: