தீக்கதிர்

சொத்து வரி உயர்வை கண்டித்து மாநகராட்சி அலுவலகம் முற்றுகை

ஈரோடு,
தமிழக அரசு சொத்து வரியை 100 சதவிகிதம் உயர்த்தியதை திரும்பப்பெற வலியுறுத்தி ஈரோடு மாநகராட்சி அலுவலகத்தில் முற்றுகை போராட்டம் நடைபெற்றது.

தமிழக அரசு மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சிகளில் 100 சதவிகிதம் வரை சொத்து வரியை உயர்த்தி அரசாணை வெளியிட்டுள்ளது. இதனை திரும்பப் பெற வலியுறுத்தி அனைத்து தொழில் வணிக சங்கங்களின் கூட்டமைப்பு, வீட்டு உரிமையாளர் குடியிருப்போர் நலச்சங்கம், மருத்துவசங்கம், வழக்கறிஞர்கள் சங்கம் ஆகிய 30க்கும் மேற்பட்ட சங்கங்களைச் சேர்ந்தவர்கள் வெள்ளியன்று ஈரோடு மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்திற்கு வரிசெலுத்துவோர் சங்க செயலாளர் பாரதி தலைமை வகித்தார். தலைவர் சண்முகசுந்தரம், அனைத்து வணிக, தொழில் சங்கங்களின் கூட்டமைப்பு செயலாளர் பாலகிருஷ்ணன் முன்னிலை வகித்தனர். இப்போராட்டத்தில் பங்கேற்றோர் சொத்துவரி, வீட்டுவரி, குப்பை விலை உயர்வை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டோருடன் பேச்சுவார்த்தை நடத்திய காவல்துறையினர், தங்களது கோரிக்கைகளை மனுவாக கொடுக்குமாறு அறிவுறுத்தினர். இதைத்தொடர்ந்து மாநகராட்சி ஆணையாளர் சீமானை சந்தித்து கோரிக்கை மனு
வினை அளித்தனர். இப்போராட்டத்தால் ஈரோடு மாநகராட்சி பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.