திருப்பூர்,
திருப்பூர் மாவட்ட மாதந்திர விவசாயிகள் குறைதீர் கூட்டம் மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.பழனிசாமி தலைமையில் வெள்ளியன்று மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடந்தது. இதில், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் தங்களது கோரிக்கைகளை மாவட்ட ஆட்சியர் முன்னிலையில் தெரிவித்தனர்.

ஈஸ்வரமூர்த்தி: அமராவதி பாசனம் பழைய ஆயக்கட்டு மூலம் உடுமலை, மடத்துக்குளம் போன்ற பகுதிகளுக்கு நன்றாக தண்ணீர் கிடைக்கப்படுவது போல, தாராபுரம் பகுதிக்கும் தண்ணீர் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டால், நெல் சாகுபடி செய்ய ஏதுவாக இருக்கும். மேலும், தாராபுரம் பகுதியில் விவசாயிகள் குடிமராமத்து பணிக்கு தங்களது பணத்தை செலவு செய்த பின் அரசு திருப்பி தருவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. அதை நம்பி விவசாயிகள், விவசாய பயன்பாட்டிற்கு பல லட்சம் ரூபாயை குடிமாரமத்து பணிக்கு செலவு செய்தனர். ஆனால், இதுவரை 40 சதவிகிதம் மட்டும் திருப்பி கிடைத்துள்ளது. மேலும், 60 சதவிகிதம் கிடைக்க பெறாமல் விவசாயிகள் சிரமத்தில் உள்ளனர். கரும்பு விவசாயிகளுக்கு காப்பீட்டு தொகை கடந்த ஆண்டுகளில் 2.5 சதவிகிதமாக இருந்தது. தற்போது 5 சதவிகிதமாக உயர்தப்பட்டுள்ளது. இதனால், கரும்பு விவசாயிகள் சிரமப்பட்டு வருகின்றனர். எனவே, உயர்த்தப்பட்ட காப்பீட்டு தொகை
யை குறைக்க வேண்டும். மேலும் பெரும்பாலான தாலுகாகளில் நில அளவையாளர் பணி காலியாக உள்ளது. அவற்றை உடனடியாக நிரப்ப வேண்டும் என்றார்.

காளிமுத்து: உடுமலை அமராவதி அணைக்கு இந்தாண்டு தென்மேற்கு பருவமழை நல்ல முறையில் கிடைத்ததால் அணை முழு கொள்ளளவை எட்டியுள்ளது. 20 நாட்களுக்கு மேலாக உபரி நீர் திறக்கப்பட்டது. ஆனால், 20 டி.எம்.சி நீர் கடலில் வீணாக கலந்தது. இந்நிலையில், தண்ணீரை சேமிக்கும் விதமாக அமராவதி பிரதான வாய்க்கால் மூலமாக நாட்டுக்கல்பாளையம் வழியாக 8 கி.மீ., தூரத்துக்கு வாய்க்காலை வெட்டினால் அமராவதி உபரிநீரை உப்பாறு மற்றும் வட்டமலை கரைக்கு எடுத்து 30 ஆயிரம் ஏக்கர் பயன் பெறும் என கடந்த 2008-ம் ஆண்டு தமிழக முதல்வருக்கு மனு கொடுத்தோம். பொதுப்பணித்துறையினர் நாட்டுக்கல்பாளையத்தில் இருந்து வாய்க்கால் வெட்ட அளவீடு செய்தனர். இத்திட்டத்துக்கான மதிப்பீடாக ரூ.18.60 கோடி ஆகும் என அரசுக்கும் தெரிவித்தனர். ஆனால் 10 ஆண்டுகள் கடந்த பின்பும் எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் திட்டம் கிடப்பில் போடப்பட்டுள்ளது. எனவே, இத்திட்டத்தை தமிழக அரசுக்கு அனுப்பி நிறைவேற்றித்தர வேண்டும் என்றார். எஸ்.சின்னசாமி: ஊத்துக்குளி ஒன்றியத்துக்கு உட்பட்ட 37 ஊராட்சிகளில் ஏ.பெரியபாளையம், எஸ்.பெரியபாளையம் ஊராட்சிகளைத் தவிர்த்து மற்ற 35 ஊராட்சிகளில் வீட்டுமனைகளாக பிரிக்கப்பட்டதை ஊராட்சிகளால் அங்கீரிக்கப்படாமல் நிலுவையில் உள்ளது. இதனால் பல மனை இடங்களை விலை கொடுத்து வாங்கியவர்கள் வீடு கட்ட முடியாமலும், கட்டிட அனுமதி பெற முடியாமலும் பெரும் அவதிக்கு ஆளாகி உள்ளனர்.

எனவே மண்டல நகர் ஊரமைப்பு துறையின் (DTCP) முகாம் நடத்தி, அப்பகுதி மக்களின் மனைக்கான அங்கீகாரம் வழங்கிட வேண்டும். அதேப்போல் ஊத்துக்குளி பகுதியில் 1,200 அடிக்கு கீழ் நிலத்தடி நீர் சென்றுவிட்டது. இந்நிலையில், காவிரி மற்றும் பவானி ஆறுகளில் செல்லும் உபரிநீரை எங்கள் பகுதிக்கு கொண்டுவந்தால் மழை நீர் மற்றும் நிலத்தடி நீரை நம்பியுள்ள விவசாயிகள் பயன்பெறுவார்கள் என்றார். எம்.ஈஸ்வரன்: திருப்பூர் செங்காட்டுத்தோட்டம் பகுதியில் ஆகஸ்டு மாத ஆரம்பத்தில் பெய்த மழையின் போது வீசிய சூறைக்காற்றுக்கு 1,500 வாழை மரங்கள் முறிந்து முற்றிலும் சேதம் அடைந்தது. இதில், பாதிக்கப்பட்டவர்களின் தரப்பில் மனு அளிக்கப்பட்டது. ஆனால் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆகவே, சம்பந்தப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும். மேலும், குண்டடம் பாசனக் கால்வாய் மொத்த பரப்பு 28,420 ஏக்கர் ஆகும். இதை நான்கு மண்டலங்களாக பிரிக்கப்பட்டு, ஒரு மண்டலத்துக்கு 7,100 ஏக்கர் விதத்தில் பாசனம் செய்யப்படுகிறது. தற்போது ஒரு சுற்றுக்கு 5 நாட்கள் மட்டுமே தண்ணீர் வழங்கப்படுகிறது. இதற்கு முன்பு மற்ற கால்வாய்கள் மூலம் 7 நாட்கள் தண்ணீர் வழங்கப்பட்டது. அதேப்போல் தற்போது 7 நாட்கள் வழங்கினால் மட்டுமே எங்கள் பாசனப் பரப்பு பயன்பெறும் என்றார்.

கோபால்: கண்டியன்கோவில், குளத்துப்பாளையம் பகுதியில் பிஏபி வாய்க்கால் மதகு கடந்த பல நாட்களுக்கு முன்னாள் உடைக்கப்பட்டது. அதற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மனு அளிக்கப்பட்டும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே, மதகு உடைந்ததற்கு காரணமானவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். தமிழ்மாநில விவசாயத் தொழிலாளர் சங்கம்: வேலை உறுதியளிப்பு திட்டத்தில் அனைவருக்கும் வேலை வழங்க வேண்டும். வேலை உறுதியளிப்பு திட்டத்தில் வேலை கொடுத்த மறுத்தால் வேலையில்லா கால சம்பளமாக பாதி சம்பளம் நிவாரணமாக வழங்க வேண்டும். மேலும், 58 வயதான ஆண், பெண் விவசாயத் தொழிலாளர்களுக்கு மாத ஓய்வூதியமாக ரூ.3,000 வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்றனர். பொன்னுசாமி: மங்கலம் கிராமத்திற்குட்பட்ட வேட்டுவபாளையம் குளம் பொதுப்பணித்துறைக்கு உட்பட்டது. தற்போது குளம் வறண்டு இருக்கிறது. மற்ற குளங்கள் எல்லாம் தண்ணீர் நிறைந்துள்ள நிலையில் இந்த குளத்திற்கு தண்ணீர் வரத்து இல்லாமல் உள்ளது. இதற்கு காரணம் வேலாயுதம்பாளையம் அருகே நொய்யலின் குறுக்கே உள்ள தடுப்பணை உடைந்துள்ளது. இந்த தடுப்பணையை சீரமைத்து கொடுத்தால் வேட்டுவபாளையம் குளத்திற்கு தண்ணீர் வரும். மேலும், இந்த தடுப்பணையிலிருந்து இக்குளத்திற்கு வரும் வாய்க்கால்கள் நல்ல நிலையில் உள்ளது. இந்த வாய்க்காலின் வழியாக வரும் தண்ணீரினை மாரியம்மன் கோவில் குட்டை, செங்கரை தடுப்பணை மற்றும் மழைக்கோயில் குட்டை வரை தண்ணீர் தேக்கி வைக்க முடியும்.

மேலும் மங்கலம் கால்நடை மருத்துவமனை மூலம் இடுவாய், ஆண்டிப்பாளையம், இடுவம்பாளையம், முருகம்பாளையம் உள்ளிட்ட ஊர்களில் சுமார் 5ஆயிரத்துக்கு மேற்பட்ட கால்நடைகள் உள்ளது. இவைகளுக்கு சிகிச்சையளிக்க ஒரு மருத்துவர் மட்டும் உள்ளார். ஆய்வாளர் மற்றும் கால்நடை பராமரிப்பு ஊழியர்கள் ஒருவரும் இல்லாத நிலையில் விவசாயிகள் சிரமப்பட்டு வருகின்றனர்.இவ்வாறு விவசாயிகள் தெரிவித்தனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.