சென்னை;
காவல் துறையில் பாலியல் புகார்களை விசாரிக்க கூடுதல் ஏடிஜிபி சீமா அகர்வால் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள விசாகா குழுவை மாற்றியமைக்க வேண்டும்
என்று வலியுறுத்தி சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல்
செய்யப்பட்டுள்ளது.

காவல்துறையில் பெண் காவலர்கள், அதிகாரிகள் அளிக்கும் பாலியல் புகார்கள் குறித்து விசாரிக்க, கூடுதல் ஏடிஜிபி சீமா அகர்வால் தலைமையில், கூடுதல் ஏடிஜிபி சு.அருணாச்சலம், டிஐஜி தேன்மொழி,மூத்த நிர்வாக அதிகாரி ரமேஷ் பாபு மற்றும் ஓய்வுபெற்ற எஸ்பி சரஸ்வதி
ஆகியோர் அடங்கிய குழுவை அமைத்து கடந்த 17ஆம் தேதியன்று டிஜிபி உத்தரவிட்டார்.

தற்போது, இந்த குழு சட்டப்படி அமைக்கப்படவில்லை எனக் கூறி, சென்னை சூளைமேட்டைச் சேர்ந்த வழக்கறிஞர் பிரேம் ஆனந்த் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆகஸ்ட் 31 அன்று பொதுநல வழக்கு தொடர்ந்துள்ளார்.அவர் அளித்த மனுவில், சட்டப்படி விசாகா குழுவில் ஒரு தலைமை அதிகாரியும் குறைந்தது மூன்று உறுப்பினர்களும் இடம்பெற்றிருக்க வேண்டும். அவர்களில் ஒருவர் பெண்கள் அமைப்பு அல்லது தொண்டு நிறுவனத்தைச் சேர்ந்த பிரதிநிதிகளாக இருக்க வேண்டும்.

ஆனால், ஏடிஜிபி அமைத்துள்ள இந்த குழுவில் தொண்டு நிறுவனத்தை சேர்ந்த உறுப்பினர்கள் யாரும் இடம்பெறவில்லை. மேலும் இந்த குழு உயர் அதிகாரிகளை பாதுகாக்கும் நோக்கில் அமைக்கப்பட்டுள்ளது என்றும் தமிழக அரசின் அனைத்துத்  துறைகளிலும் சட்டவிதிகளை பின்பற்றி, விசாகா குழுக்களை அமைக்க உள்துறை செயலாளர், டிஜிபி உள்ளிட்டோருக்கு உத்தரவிட வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.இந்த மனு மீதான விசாரணை தலைமை நீதிபதி தஹில்ரமானி மற்றும் நீதிபதி துரைசாமி அடங்கிய அமர்வு முன்பு நடைபெற்றது.அப்போது மனு மீதான விசாரணையை வேறு அமர்வுக்கு மாற்றி நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.