மேட்டுப்பாளையம்,
சிறப்பு மலை ரயில் சேவையை முழுமையாக முன்பதிவு செய்த வெளிநாட்டு புதுமணதம்பதியினருக்காக மேட்டுப்பாளையத்திலிருந்த உதகைக்கு சிறப்பு ரயில் இயக்கப்பட்டது.

கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தில் இருந்து உதகைக்கு தினசரி காலை 7.10 மணிக்கு நீலகிரி மலை ரயில் இயக்கப்பட்டு வருகிறது. நூற்றாண்டு பழமை வாய்ந்த நீராவி மூலம் இயங்கும் இம்மலை ரயில் யுனோஸ்கோவால் உலக பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் பயணித்து நீலகிரி மலையின் இயற்கை எழிலை கண்டு ரசிக்க உள்நாட்டில் இருந்து மட்டுமின்றி பல்வேறு உலக நாடுகளில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் ஆர்வமுடன் வருகை புரிகின்றனர். இதனால் தினசரி ஒருமுறை மட்டுமே இயக்கப்படும் மலை ரயிலில் எப்போதும் கூட்டம் அதிகரித்தே காணப்படும். இந்நிலையில் இங்கிலாந்து நாட்டை சேர்ந்த கிரகாம் மற்றும் போலந்து நாட்டை சேர்ந்த சில்வியா என்ற புதுமண தம்பதியர் தேன்நிலவு கொண்டாட்டமாக தங்களுக்கென்று தனியே மலைரயிலை இயக்கக்கோரி ரயில்வே நிர்வாகத்திடம் முறையிட்டு முன்பதிவும் செய்தனர். ஏற்கனவே முழுதொகை செலுத்தினால் சிறப்பு மலை ரயிலை இயக்கும் நடைமுறை உள்ள காரணத்தினால், இவர்களது கோரிக்கை ஏற்கப்பட்டது. இதன்படி ரூ.2.85 லட்சம் இந்திய ரயில்வேயில் செலுத்தினர்.

இதைத்தொடர்ந்து வெள்ளியன்று காலை தம்பதியினர் திட்டமிட்டபடி மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்திற்கு வந்தனர். இவர்களுக்கென மேட்டுப்பாளையத்தில் இருந்து காலை 9 மணிக்கு புறப்படும் வகையில் மூன்று பெட்டிகளோடு சிறப்பு மலை ரயில் தயாராக இருந்தது. ரயிலை முழுமையாக தங்கள் இருவருக்காக மட்டும் பதிவு செய்திருந்த வெளிநாட்டு தம்பதியினரை மேட்டுப்பாளையம் ரயில் நிலைய அதிகாரிகள் வரவேற்று, மலைரயிலின் சிறப்புகள் குறித்து விளக்கி கூறினர். பல் சக்கரத்தின் உதவியோடு நீராவி மூலம் இயங்கும் மலைரயிலை ஆர்வத்துடன் கண்டு ரசித்த கிரகாம்தம்பதியினர், அதில் மிகுந்த உற்சாகத்தோடு பயணம் மேற்கொண்டனர். அப்போது, இந்த தேன்நிலவு பயணம் மற்றும் இந்தியர்களின் அன்பை என்றும் நினைவில் கொள்வோம் என்றனர்.

இதுகுறித்து ரயில்வே அதிகாரிகளிடம் கேட்டபோது, இந்திய சுற்றுலா துறையை மேம்படுத்தும் வகையில் ரயில்வே சுற்றுலாத் துறை மலை ரயிலுக்கு பேக்கேஜ் முறையில் சிறப்பு மலை ரயிலை இயக்கி வருகிறது. உரிய கட்டணத்தை செலுத்தி யார் வேண்டுமானாலும் தங்களுக்கென தனியே இதில் பதிவு செய்து பயணிக்கலாம். சிறப்பு மலைரயிலை முன்பதிவு செய்வோருக்கு அனைத்து வசதிகளும், பாதுகாப்பும் வழங்கப்படும் என்றனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.