சென்னை:
மத்தியிலும் மாநிலத்திலும் மக்கள் விரோத அரசை அகற்றி புதிய அரசை உருவாக்க அனைவரும் ஒன்றுபட்டு போராடுவோம் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி முழக்கமிட்டார்.

அகில இந்திய தலைவர்கள் பங்கேற்ற கலைஞர் புகழ்வணக்க பொதுக்கூட்டம் சென்னையில் வியாழனன்று (ஆக. 30) நடைபெற்றது. இதில் சீத்தாராம் யெச்சூரி கலந்து கொண்டு பேசியதாவது: இந்தியாவின் மிக மூத்த அரசியல் தலைவரான கலைஞர் கருணாநிதி, தமிழகத்தின் வளர்ச்சிக்காக ஆற்றிய பங்கு மகத்தானது அவர் நவீன இந்தியாவை மட்டுமல்ல நவீன தமிழகத்தையும் உருவாக்கியவர். இந்த நிகழ்வு ஒரு மாபெரும் தலைவரின் புகழையும் அவர் நாட்டிற்காக ஆற்றியுள்ள பணிகளையும் எடுத்துரைக்கும் நிகழ்வாக அமைந்துள்ளது. அரசியலில் தீவிரமாக செயல்பட்ட அவர் நமக்கு விட்டுச்சென்ற பணிகள் ஏராளம். அதை நாம் சுவீகரித்துக்கொண்டு எதிர்கால நமது தலைமுறையின் வளர்ச்சிக்காக பயன்படுத்திக்கொள்ளவேண்டும்.

தந்தைபெரியார், அறிஞர் அண்ணா ஆகியோரது வழியில் வந்தவர் கருணாநிதி என்று நாம் அனைவரும் அறிவோம். அவர்களுடன் அவர் பணியாற்றி இருக்கிறார். அந்த தலைவர்களிடமிருந்து சுயமரியாதை, சமூக நீதி, பகுத்தறிவு, சமத்துவம், சாதி, மதம்,பாலினம் என வேறுபாடு பார்க்காமல் அனைவரையும் சமமாக நடத்துதல், அனைவருக்குமான வளர்ச்சி ஆகியவற்றுக்காக தனது வாழ்நாளில் பெரும்பகுதியை செலவிட்டார்.

பல்வேறு தேசிய இனங்கள்
இன்று வங்கமொழிபேசுவோர், தமிழ்மொழிபேசுவோர், எனது தாய்மொழியான தெலுங்குபேசுவோர் என பல்வேறு தேசிய இனங்கள் இந்தியாவில் உள்ளன. பல்வேறுபட்ட தேசிய இனங்கள் அனைத்தும் ஒன்றுபட்டு இன்று இந்தியா என்ற ஒரு மாபெரும் நாடாக காட்சியளிக்கிறது. ஒவ்வொரு மாநிலத்திற்கென தனித்துவமான அடையாளங்கள் இருந்தாலும் இந்தியா என்ற ஒன்றுபட்ட நாட்டை ஏற்றுக்கொண்டிருக்கிறோம். இந்தியா என்ற ஒன்றுபட்ட நாட்டை தவிர வேறு எந்த முறையும் நிலைத்து நிற்கக்கூடியது அல்ல.ஆனால் இன்று நடப்பது என்ன? ஒன்றுபட்ட இந்தியா என்ற தத்துவத்தை இன்று சிலர் கைப்பற்றிக்கொண்டு அதற்கு நேர் எதிராக செயல்பட்டுக்கொண்டிருக்கிறார்கள்.

அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி என்ற நாம் சொன்னால் பெரும்பாலான மக்களை தவிர்த்த வளர்ச்சியை நோக்கி அவர்கள் சென்று கொண்டிருக்கிறார்கள்.இங்கு மத்திய அமைச்சர் நிதின் கட்கரி இருப்பார் என்று நினைத்தேன். அவர்முன்னால் இதை எல்லாம் நான் சொல்லலாம் என்று நினைத்துக்கொண்டிருந்தேன். ஆனால் அவர் பேசிவிட்டு சென்றுவிட்டார். சுதந்திர இந்தியாவில் இன்று தலித் மக்கள் சுயமரியாதையுடன் நடத்தப்படவில்லை. சாதி ரீதியிலான பாகுபாடு ஒழியவில்லை.அனைவருக்குமான வளர்ச்சி இம் மக்களை சென்றடையவில்லை.

இரண்டு விதமான குடிமக்கள்
மகளிரும் சமமாக நடத்தப்படுவதில்லை, மத ரீதியான சிறுபான்மையின மக்களும் சமமாக நடத்தப்படுவதில்லை.இந்தியாவில் தற்போதுள்ள ஆட்சியாளர்கள் இரண்டுவிதமான குடிமக்களை உருவாக்கி வருகிறார்கள். மதரீதியாக மக்களை பிளவுபடுத்துகிறார்கள். சிறுபான்மை மக்களை மற்ற பிரிவு மக்களிடமிருந்து பிரிக்க முயற்சிக்கிறார்கள். எனவே இன்று கலைஞரின் பணிகளை உண்மையிலேயே நாம் முன்னெடுத்துச்செல்லவேண்டும் என்றால் தற்போதுள்ள இந்தியாவை அப்படியே பாதுகாத்துக்கொண்டே மக்களை இரண்டாக பிளவுபடுத்தும் ஆட்சியாளர்களுக்கு எதிரான போராட்டத்தை இருமடங்கு வீரியத்துடன் நடத்தவும் நாம் அனைவரும் உறுதியேற்கவேண்டும்.அத்தகைய முயற்சிகள் தான் அனைவருக்குமான இந்தியாவை வலுப்படுத்துவதாக இருக்கும். இத்தகைய போராட்டத்தை இங்கே உள்ள அனைத்துகட்சிகளும் நடத்தாவிட்டால் வளமான தமிழகம் மட்டுமல்ல வளமான இந்தியா என்ற கனவையும் நாம் நிறைவேற்றமுடியாமல் போய்விடும்.

ஐக்கிய முற்போக்கு கூட்டணி
கலைஞர் கருணாநிதியுடன் எனக்கு 30 ஆண்டுகள் நெருக்கமான தொடர்பு உண்டு. பலதருணங்களில் நானும் அவரும் இணைந்துசெயல்பட்டுள்ளோம். குறிப்பாக தேவகவுடாவை நாட்டின் பிரதமராக தேர்வுசெய்தபோது நாங்கள் அனைவரும் ஒன்றாக செயல்பட்டிருக்கிறோம்.அப்போது ஐக்கிய முன்னணி வழிநடத்தும் குழுவை உருவாக்குவதிலும் பின்னர் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசை உருவாக்குவதிலும் அதற்கான குறைந்தபட்ச செயல்திட்டத்தை உருவாக்குவதிலும் நான் அவருடன் இணைந்து பணியாற்றியிருக்கிறேன். அப்போதெல்லாம் நான் அவரிடமிருந்து ஏராளமானவற்றை கற்றுக்கொண்டேன். அதற்காக பெருமைப்படுகிறேன். அதில்மிக மிக முக்கியமானது அவரின் அபாரமான நினைவாற்றல் மற்றும் நகைச்சுவை உணர்வு.

இந்தியாவை பாதுகாக்க என்ன செய்யப்போகிறோம்
நாம் அவரிடமிருந்து பலவற்றை கற்றுக்கொண்டதை பேசினாலும் இறுதியாக அவரை மதிப்பிடும் போது இன்றுள்ள இந்தியாவை பாதுகாக்க அவர் விட்டுச்சென்ற பணிகளை நாம் எப்படி நிறைவேற்றப்போகிறோம் என்பதுதான். மக்கள் மனதில் உள்ள கருத்துக்கள் என்ன? அவற்றில் உள்ள மோசமான கருத்துக்களை அகற்றுவது எப்படி? பகுத்தறிவாளர்களுக்கும் பகுத்தறிவுக் கொள்கைளுக்கு எதிராக உள்ளவர்களுக்கும் இடையே உள்ள போராட்டத்தை தொடர்ந்து முன்னெடுப்பது எப்படி? மாநில உரிமை மற்றும் அதற்கு எதிரான கொள்கை உடையோருக்கு எதிரான போராட்டத்தை எப்படி கொண்டு செல்வது? இன்று நாட்டில் என்ன நடந்து கொண்டிருக்கிறது. பகுத்தறிவு கொள்கைகளை பரப்பிய நரேந்திர தபோல்கர், கோவிந்த பன்சாரே, கவுரி லங்கேஷ் ஆகியோர் மதவெறியர்களால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர்.இது மட்டுமல்ல உயர்கல்வித்துறை மீது தாக்குதல் நடத்தப்படுகிறது. இதில்மிகவும் கவலைப்படவேண்டிய விஷயம் நமது இளைய தலைமுறையினருக்கு நாம் எந்த மாதிரியான கல்வியை புகட்டி வருகிறோம் என்பதுதான்.

திரைப்படங்கள் மூலமாக பகுத்தறிவுக்கருத்துக்கள்
இந்தியாவின் பன்முக கலாச்சாரத்தை ஒழித்துவிட்டு ஒற்றைக் கலாச்சாரத்தை உருவாக்க முயற்சிக்கிறார்கள். இன்று இந்திய வரலாறு என்பது இந்து புராண வரலாறாக மாற்றப்படுகிறது. சிறப்பான பாரம்பரியத்தை கொண்ட இந்திய தத்துவங்கள் இந்து தத்துவங்களாக மாற்றப்படுகின்றன. இதுபோன்ற முயற்சிகள் தொடர்ந்து நடைபெற்றால் ஒன்றுபட்ட இந்தியா என்ற நாடு சீரழிக்கப்பட்டு விடும். பசுப்பாதுகாப்பு என்ற பெயரில் தனியார் ராணுவம் அமைக்கப்பட்டுள்ளது. காதலர்களை பிரிக்க ஒருகூட்டம் அலைந்துகொண்டிருக்கிறது. நமது வீட்டுக் குழந்தைகள் என்ன சாப்பிடவேண்டும்? எத்தகைய உடை உடுத்தவேண்டும்? யார் உங்களின் நண்பனாக இருக்கவேண்டும் என்பதை மற்றொரு கூட்டம் தீர்மானிக்கிறது.இதுபோன்ற சக்திகளை எதிர்த்து கலைஞர் கருணாநிதி பலவழிகளில் போராடினார். அதில் ஒன்று திரைப்படத்துறை. திரைப்பட வசனங்கள் மூலமாக மக்களிடம் பகுத்தறிவு கருத்துக்களையும் சமூக நீதியையும் பரப்பினார்.

தமிழகத்தில் ஜனநாயகக் காற்று
மதத்தில் இருந்து அரசியலை பிரிக்கவேண்டும் என்று மார்க்சிஸ்ட்டுகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்கள். அதையே தான் தந்தைபெரியார் விரும்பினார். அறிஞர் அண்ணாவும் விரும்பினார். கலைஞர் கருணாநிதி அதற்காக போராடினார்.சமூக நீதி கருத்துக்களை தனது திரைப்படங்களில் சேர்த்தார். ஜனநாயகத்தை பாதுகாப்பதன் மூலமாகத்தான் கருணாநிதியின் முற்போக்கான கருத்துக்களையும் நாம் பாதுகாக்கமுடியும். மக்களிடம் கொண்டு செல்லமுடியும். 1975 ஆம் ஆண்டு அவசர நிலையை எதிர்த்த ஒரே முதலமைச்சர் இந்தியாவில் கருணாநிதிதான். அப்போது சட்டமன்றத்தைகூட்டி அவசர நிலை பிரகடனத்தை எதிர்த்து துணிச்சலாக தீர்மானத்தை நிறைவேற்றினார். அப்போதெல்லாம் நாங்கள் மாணவர் இயக்கத்தில் பணியாற்றிவந்தோம். அவசர நிலையின் போது தமிழகத்தில் தான் ஜனநாயகக் காற்றை சுவாசிக்க முடிந்ததாக பல தலைவர்கள் எங்களிடம் சொல்லக் கேட்டிருக்கிறோம்.கேரளாவில் எங்களது கட்சியை சேர்ந்த பல மூத்த தலைவர்களும் அவசர நிலையை எதிர்த்து போராடியபோது கைது செய்யப்படாமல் இருக்க தமிழகத்தில் தஞ்சமடைந்தனர். ஆனால் இன்று என்ன நடந்து கொண்டிருக்கிறது?

அறிவுஜீவிகளை பழிவாங்கும் மோடி அரசு
புனே அருகே பீமா கோரேகானில் தலித் மக்கள் ஆதிக்க சக்திகளால் தாக்கப்பட்டார்கள். அந்த மக்களுக்கு ஆதரவு தெரிவித்ததற்காக இன்று அறிவுஜீவிகள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.வன்முறையை தூண்டிவிட்டவர்களை கைதுசெய்யாமல் வன்முறையால் பாதிக்கப்பட்ட தலித் மக்கள் பக்கம் நின்றவர்களை மத்திய அரசு பழி வாங்கிக்கொண்டிருக்கிறது. அதுவும் மிககொடூரமான யுஏபிஏ (சட்டவிரோத செயல்கள் தடுப்புச் சட்டம்) சட்டத்தின் கீழ் அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். நல்ல வேளையாக நீதிமன்றம் தலையிட்டதால் அவர்கள் சற்று நிம்மதி அடைந்துள்ளனர். ஆனால் இன்று நாம் பார்த்துக்கொண்டிருப்பது என்ன? நாடுமுழுவதும் அறிவிக்கப்படாத அவசர நிலை நிலவுகிறது. முன்பும் இதை நாம்சந்தித்திருக்கிறோம். அதற்கு எதிராக போராடியும் இருக்கிறோம்.

இத்தகைய தருணங்களில் நாம் கலைஞரை நினைவுபடுத்திக்கொள்வதோடு அவசர நிலையை எதிர்த்து சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றியதற்காக அவருக்கு நாம் நன்றி செலுத்துகிறோம்.

மக்களின் சிவில் உரிமைகள் மீது தாக்குதல் நடத்துவதை ஒருபோதும் நாம்ஏற்றுக்கொள்ளமுடியாது.எனவே நாம் அனைவரும் இரட்டை மடங்கு வீரியத்துடன் மத்திய பாஜக ஆட்சியாளர்களின் மக்கள்விரோத கொள்கைகளுக்கு எதிராக அணிதிரளவேண்டும்.கலைஞர் திரைப்படங்களில்வசனம் எழுதினார். கதை எழுதினார். கவிதை எழுதினார்? எதற்காக அவற்றை செய்தார் என்றால் படிப்பறிவில்லாத மக்களிடம் புரட்சிகரமான கருத்துக்களை பரப்பாமல் சமூகத்தில் எந்தவித மாற்றத்தையும் ஏற்படுத்த முடியாது என்பதை அவர் தெளிவாக உணர்ந்திருந்த காரணத்தினால்தான் அவ்வாறு செய்தார். மக்களிடம் சமூக விழிப்புணர்வை ஏற்படுத்துவதும் சமூக மாற்றத்திற்கான பணிகளில் ஒன்றுதான். எனவேதான் அவர் மாக்சிம் கார்க்கியின் புகழ்பெற்ற தாய் நாவலை கவிதை வடிவில் மக்களிடம் கொண்டு சென்றார். முரசொலி நாளிதழை அவர் உருவாக்கி நாள்தோறும் அதில் எழுதி வந்தார். முரசொலிக்கு இன்று 75 வயதாகிறது. கலைஞர் தள்ளாத வயதிலும் அந்த நாளிதழில் அரும்பெரும் கருத்துக்களை எழுதி வந்தார்.

சர்க்காரியா கமிஷன்
சமூக நீதி, கூட்டாட்சி, மத்திய அரசின் எதேச்சதிகாரப்போக்குக்கு எதிராக கருணாநிதி போராடினார். மத்திய – மாநில உறவுகளுக்காகவும் மாநில உரிமைகளுக்காகவும் இங்கே அமர்ந்துள்ள ஜம்முகாஷ்மீர் முன்னாள் முதல்வர் பருக்அப்துல்லா ஸ்ரீநகரில் ஒரு மாநாட்டை நடத்தினார். ஆந்திர முதல்வராக இருந்தபோது என்.டி.ராமாராவ் ஒருமாநாட்டை நடத்தினார்.ஜோதிபாசு முதல்வராக இருந்தபோது கொல்கத்தாவில் அப்படி ஒரு மாநாட்டை கூட்டினார். இந்த மாநாடுகளில் நடைபெற்ற விவாதங்களின் விளைவாகவே மத்திய-மாநில அரசுகளின் உறவுகள் தொடர்பான சர்க்காரியா கமிஷன் அமைக்கப்பட்டது.

தற்சார்பு பொருளாதாரம்
மதச்சார்பற்ற ஜனநாயகம், பொருளாதார தற்சார்புத்தன்மை பாதுகாக்கப்படவேண்டும். நாட்டிலேயே தொழில்வளர்ச்சியில் முன்னேறிய மாநிலமாக தமிழ்நாடு இன்று திகழ்கிறது என்றால் அதற்கு கருணாநிதியின் அளப்பரிய பங்களிப்பே காரணம். தொழில்வளர்ச்சியின் மூலம் அவர் தமிழகத்தை தற்சார்பு மாநிலமாக மாற்றினார். இவை எல்லாவற்றையும் விட தமிழ்மொழியின் வளர்ச்சியின் மீதுஅவருக்கு இருந்த அக்கறை குறிப்பிடவேண்டிய ஒன்றாகும். கோவையில் அவர் செம்மொழி மாநாட்டை நடத்தினார். தமிழ்மொழியையும் திராவிட கலாச்சாரத்தையும் அவர் முன்னெடுத்துச்சென்றார். இவை அனைத்தும் இந்திய தேசியத்திற்கு எதிரானது அல்ல.இவற்றையும் உள்ளடக்கியதுதான் இந்தியாவின் வளர்ச்சி என்பதை அவர் உணர்ந்திருந்தார்.

தமிழகத்திலும் டில்லியிலும் எதிர்காலத்தில் நல்ல அரசை உருவாக்கவேண்டிய கடமை இங்கு கூடியுள்ள நாம் அனைவருக்கும் இருக்கிறது. கடந்தகாலங்களில் எங்களுக்கும் கலைஞருக்கும் கருத்துவேறுபாடுகள் ஏற்பட்டிருக்கின்றன.வாஜ்பாய் தலைமையில் மத்திய அரசு அமைந்தபோது அந்த அரசை அவர் ஆதரித்தார் என்பதில் எங்களுக்கெல்லாம் மிகுந்த வருத்தம்உண்டு. ஆனால் மிக விரைவிலேயே அவர் மதச்சார்பற்ற அணிக்கு திரும்பினார். பின்னர் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசை உருவாக்கினார். அரசியலில் கருத்துவேறுபாடுகள் இருப்பது உண்மைதான்.

சமூகரீதியாக அரசியல் ரீதியாக கலாச்சார ரீதியாக முன்னேறிய தமிழ்மாநிலத்தில் கலைஞர் கழுகுபோன்று அனைத்தையும் கூர்மையாக கவனித்துக்கொண்டிருந்தார். இன்று நாம் கலைஞரை இழந்தபோதிலும் அவரது கருத்துக்களை உள்வாங்கி தமிழகத்தையும் பாதுகாக்கவும் அனைவரையும் உள்ளடக்கிய இந்தியாவையும் உருவாக்கவும் மதச்சார்பற்ற சக்திகளை வலுப்படுத்தவும் ஒன்றுபடுவோம்.

சிறப்பான தமிழகம், சிறப்பான புதிய இந்தியாவை உருவாக்க தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, கலைஞர் வழியில் தற்போது திமுக தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளவரும் வருங்கால தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் அதிக பொறுப்பு இருக்கிறது. அவரும் அந்த கடமையை நிச்சயம் நிறைவேற்றுவார் என்ற நம்பிக்கை எங்களுக்கெல்லாம் இருக்கிறது.
இவ்வாறு சீத்தாராம் யெச்சூரி பேசினார்.

Leave a Reply

You must be logged in to post a comment.