சென்னை,
தினமலர் பத்திரிகையின் சென்னை பதிப்பில் வெளிவந்துள்ள செய்தியில் ஆட்டோ தொழிலாளர்கள் அனைவரும் சமூக விரோதிகள் எனவும் குடிகாரர்கள் எனவும் உண்மைக்கு புறம்பாக செய்தி வெளியிட்டுள்ளது. இது குறித்து தமிழ்நாடு ஆட்டோ தொழிலாளர் சம்மேளன மாநில பொதுச்செயலாளர் எம். சிவாஜி விடுத்துள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-

தமிழகம் முழுவதும் உள்ள ஆட்டோ தொழிலாளர்கள் படித்துவிட்டு அரசாங்கத்திடம் வேலையை எதிர்பார்த்து காத்து இல்லாமல் தங்களுடைய சொந்த மூலதனத்தில் ஆட்டோக்கள் வாங்கி மக்களுக்கு சேவை செய்து வருபவர்கள் ஆவார்கள். தமிழகம் முழுவதும் சுமார் இரண்டு லட்சத்து ஐம்பதாயிரம் ஆட்டோ உரிமம் வழங்கப்பட்டுள்ளது. ஓட்டுனர்களாக நான்கு லட்சத்திற்கும் அதிகமானோரும், இதன் துணைத்தொழிலாக என சுமார் 7 லட்சம் பேர்வரை ஈடுபடும் தொழிலாக ஆட்டோ தொழில் உள்ளது. இத்தொழிலில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களில் 95 விழுக்காட்டினர் மிகவும் நேர்மையாளராக, கட்டுப்பாடு மிக்கவர்களாக, தங்கள் வாகனத்தில் பொருளை தவறவிட்டு விட்டால் உரியவரிடமோ, காவல்துறையிலோ ஒப்படைப்பவர் களாக உள்ளார்கள். ஆட்டோ ஓட்டி தங்கள் குடும்பத்தை காப்பாற்றுவதோடு, போக்குவரத்து வசதியில்லா கிராமங்களுக்கு குறைந்த கட்டணத்தில் போக்குவரத்து வசதி செய்து கொடுப்பவராக உள்ளனர். கட்டுப்படியான மீட்டர் கட்டணம் தொழிற் சங்கங்களை அழைத்து பேசி அறிவிக்க வேண்டும் என பல ஆண்டுகளாக போராடி வருகின்றனர்.

நீதிமன்றம் தீர்ப்பு சொல்லியும் அரசாங்கம் அமலாக்க மறுத்து வருகிறது. ஜிபிஎஸ் மீட்டர் சென்னையில் ஆட்டோ உள்ள தொழிலாளர்களுக்கு இலவசமாக வழங்கப்படும் என்று சொல்லி இதுவரை அரசாங்கம் வழங்கவில்லை. இச்சூழ்நிலையில் ஆட்டோ தொழிலாளர்கள் மீட்டர் கட்டணத்திற்கு எதிராக இருப்பது போலவும், கூடுதலாக கட்டணம் வசூலிப்பது போலவும் தினமலர் ஏடு அவதூறு பரப்புகிறது. மேலும் ஆட்டோ ஸ்டாண்டுகள் எல்லாம் குடிகாரர்கள் நிறைந்த பகுதியெனவும், சமூக விரோதிகளின் கூடாரம் என எழுதியுள்ளதற்கு தமிழ்நாடு ஆட்டோ தொழிலாளர் சம்மேளனம் வன்மையான கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறது. உடனடியாக மறுப்பு செய்தி வெளியிடுவதோடு, வருத்தம் தெரிவிக்க வேண்டும். இவ்வாறு அந்த அறிக்கையில் வலியுறுத்தியிருக்கிறார்.

Leave a Reply

You must be logged in to post a comment.