சென்னை,
69 விழுக்காடு இடஒதுக்கீடு, கிரீமிலேயர், பதவி உயர்வில் இடஒதுக்கீடு தொடர்பான ஆலோசனைக் கூட்டம் திராவிடர் கழகம் சார்பில் சென்னை பெரியார்திடலில் ஆசிரியர் கி.வீரமணி தலைமையில் அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெற்றது.தி.க தலைவர் கி. வீரமணி தலைமையில் நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்தில், வி.பி.துரைசாமி (திமுக), ஆ.கோபண்ணா (காங்கிரஸ்), பி.சம்பத் (சிபிஎம்), தொல்.திருமாவளவன் (விசிக), து.அரிபரந்தாமன் (ஓய்வு பெற்ற நீதிபதி), கே.எம்.காதர் மொகிதீன் (இந்திய யூனியன் முஸ்லிம் லீக்), மு. வீரபாண்டியன் (சிபிஐ), ஆ.வந்தியதேவன் (மதிமுக), சுப.வீரபாண்டியன் (திராவிட இயக்க தமிழர் பேரவை), ப.அப்துல் சமது (மனித நேய மக்கள் கட்சி), பு.பா.பிரின்ஸ் கஜேந்திரபாபு (பொது பள்ளிக்கான மாநில மேடை) உள்ளிட்டு பல்வேறு அரசியல் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

தமிழ்நாட்டில் கல்வியிலும், வேலைவாய்ப்பிலும் 69 விழுக்காடு இட ஒதுக்கீடு சட்டம் இந்திய அரசமைப்புச் சட்டம் 76ஆம் திருத்தம் 9ஆவது அட்டவணை பாதுகாப்புப் பெற்று சட்ட வலிமை பெற்று நடைமுறையில் செயலாக்கம் பெற்று வருகிறது. இதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்பட்டு விசாரணை ஒரு முக்கிய கட்டத்தை எட்டியுள்ளது. எல்லா வகையிலும் பாதுகாப்பான இந்த சமூகநீதி சட்டத்தை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட இந்த வழக்கில் திறமையும், அனுபவமும், சமூகநீதியில் அக்கறையும் கொண்ட மூத்த வழக்குரைஞர்களை நியமித்து உச்சநீதிமன்றத்தில் வாதாடி வெற்றி பெறுவதற்கான அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ள வேண்டும். பிற்படுத்தப்பட்டவர்களுக்கான 50 விழுக்காடு இடஒதுக்கீடு 69 விழுக்காடு இட ஒதுக்கீடு உயர்த்தப் பட்டதை பாதுகாக்க இந்திய அரசமைப்புச் சட்டம் 31 சி-யின்கீழ் தமிழ்நாடு சட்டப்பேரவையில் மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த இரண்டிலும் முறையே முதலமைச்சர்கள் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோரின் முக்கிய பங்கு இருப்பதால், அதிமுக அரசு உச்சநீதிமன்றத்தில் நடைபெறும் இந்த வழக்கில் கூடுதல் பொறுப்புடனும், அர்ப்பணிப்புடனும், அக்கறையுடனும் செயல்படவேண்டிய கடமை உணர்வு கூடுதலாக இருக்கிறது.

பிற்படுத்தப்பட்டவர்களுக்கு இட ஒதுக்கீடு அளிப்பதில் திணிக்கப்பட்டுள்ள கிரீமிலேயரையே நீக்கவேண்டும் என்று சமூகநீதியாளர்கள் வலியுறுத்திக் கொண்டு இருக்கும் இந்த காலகட்டத்தில், தாழ்த்தப்பட்டவர்களுக்கும் கிரீமிலேயர் தேவை என்ற பொருளிலும், பதவி உயர்வில் தாழ்த்தப்பட்டவர்களுக்கு இட ஒதுக்கீடு இந்திய அரசமைப்புச் சட்டம் 77ஆம் திருத்தம் உறுதி செய்துள்ள நிலையில், இது குறித்தும் உச்சநீதிமன்றம் இப்பொழுது கேள்வி எழுப்பியுள்ளது சமூகநீதி மீதான பெரும் அச்சுறுத்தலேயாகும். இந்திய அளவில் அனைத்துக் கட்சிகளும், நாடாளுமன்ற உறுப்பினர்களும் இதில் உரிய அளவு கவனம் செலுத்தவேண்டும் என்றும், பிரதமரைச் சந்தித்து அழுத்தம் கொடுப்பது, தில்லியில் அனைத்துக் கட்சித் தலைவர்களும் பங்கேற்கும் மாநாடு ஒன்றை நடத்துவது. முதுநிலை மருத்துவக் கல்வி அகில இந்தியத் தொகுப்பில் உள்ள (2018-19) 10,449 இடங்களில் 205 இடங்கள் மட்டுமே இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு வழங்கப்பட்டுள்ளன. இதுவும் மத்திய அரசின் கல்வி நிறுவனங்களில் மட்டுமே வழங்கப்பட்டுள் ளது. எனவே, அகில இந்திய தொகுப்பு இடங்களில் 27 விழுக்காடு இட ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். மேற்கண்ட கருத்துகளை மையப்படுத்தி, நாடு தழுவிய அளவில் தீவிர விழிப்புணர்வுப் பிரச்சாரங்களையும், தேவையான கிளர்ச்சிகளையும் நடத்துவது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Leave A Reply

%d bloggers like this: