ஹைதராபாத்;
புனே காவல்துறையால் கைது செய்யப்பட்ட இடதுசாரி தலித் செயற்பாட்டாளர்கள் 5 பேரை செப்டம்பர் 6ம் தேதி வரை வீட்டுக் காவலில் வைக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டதை அடுத்து இடதுசாரி தெலுங்கு கவிஞர் வராவர ராவ் பலத்த பாதுகாப்புடன் ஹைதராபாத் அழைத்து வரப்பட்டார்.

வராவர ராவுடன் புனே காவல்துறையினர் விமானம் மூலம் ஹைதராபாத் வந்து வியாழன் காலை 7 மணிக்கு வீட்டுக்கு அழைத்து வந்ததாக அவரது மனைவி ஹேமலதா தெரிவித்தார்.
வீட்டுக்குள் தனது மகள் மற்றும் மருமகன் தவிர வேறு யாரையும் உள்ளே வரவோ, வெளியே செல்லவோ காவல்துறை அனுமதிக்கவில்லை என்றும், ஊடகங்களிடம் வராவர ராவ் பேச காவல்துறை அனுமதி அளிக்கவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

வராவர ராவ் வீட்டை காவல் காப்பதில் எந்த காவல்துறையினர் ஈடுபடுவார்கள் என்ற குழப்பம் நீடித்த நிலையில், அந்த பொறுப்பை ஹைதராபாத் போலீஸ் ஏற்றுக் கொள்வார்கள் என்று விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ்
இதனிடையே, 5 பேரும் கைது செய்யப்பட்ட விவகாரத்தில் முறையான நடைமுறைகள் பின்பற்றப்படவில்லை என்று கூறி, மகாராஷ்டிர அரசுக்கு மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

இதுகுறித்து ஆணையத்தின் உயரதிகாரி ஒருவர் கூறுகையில்,“5 பேர் கைது விவகாரத்தில், முறையான நடைமுறைகள் பின்பற்றப்படவில்லை என்பது ஊடகங்களின் அறிக்கைகள் மூலம் தெரியவந்துள்ளது. இது கைது செய்யப்பட்டவர்களின் உரிமைகளைப் பாதிப்பதாக உள்ளது. எனவே, இந்தக் கைது நடவடிக்கை தொடர்பாக விரிவான அறிக்கை ஒன்றைத் தாக்கல் செய்ய, மகாராஷ்டிர அரசின் தலைமை செயலர் மற்றும் காவல்துறைத் தலைமை இயக்குநர் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது” என்று தெரிவித்தார்.

தெலுங்கானா, மகாராஷ்டிரம், கோவா உள்ளிட்ட 6 மாநிலங்களில், மகாராஷ்டிர காவல் துறையினர் செவ்வாய்க்கிழமை நடத்திய திடீர் சோதனைகளில், மாவோயிஸ்ட்டுகளுடன் தொடர்பு இருப்பதாக கூறி எழுத்தாளர் வராவர ராவ்(ஹைதராபாத்), இடதுசாரி ஆர்வலர்கள் வெர்னோன் கோன்சல்வஸ் மற்றும் அருண் பெரைரா(மும்பை), வழக்குரைஞர் சுதா பரத்வாஜ்(சத்தீஸ்கர்), ஆர்வலர் கெளதம் நவ்லகா(தில்லி) ஆகியோரை கைது செய்தனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.