அகர்தலா;
ஏரி, குளங்களில் வாத்துக்கள் நீச்சலடிப்பதால், தண்ணீரிலுள்ள ஆக்ஸிஜன் அதிகரிக்கும் என்று திரிபுரா முதல்வர் பேசியது நிரூபிக்க உண்மை என்று பாஜக செய்தித் தொடர்பாளரான அசோக் சின்ஹா வக்காலத்து வாங்கியுள்ளார்.

திரிபுரா மாநில பாஜக முதல்வர் பிப்லவ் குமார் தேப், உளறல்களுக்குப் பெயர் போனவர். ஒரு மாநிலத்தின் முதல்வர் என்பதை மறந்துவிட்டு, இஷ்டத்திற்குப் பேசி கேலிக்கு உள்ளாகக் கூடியவர். முதல்வராகி பேசிய கன்னிப்பேச்சிலேயே, “மகாபாரத காலத்திலேயே சேட்டிலைட், இண்டர்நெட் வசதிகள் இருந்தது” என்றுதான் ஆரம்பித்தார். அடுத்ததாக “உலக அழகி ஐஸ்வர்யா ராயா, அல்லது டயானா ஹெய்டனா?” என்று ஆராய்ச்சியில் இறங்கியவர், “ஐஸ்வர்யா ராய்க்கு உலக அழகிப் பட்டம் கொடுத்தது சரி, ஆனால், டயானா ஹெய்டனுக்கு எதற்காக உலக அழகிப்பட்டம் கொடுத்தார்கள்?” என்று ஆதங்கப்பட்டார்.

“சிவில் இஞ்சினியரிங் படித்தவர்கள் மட்டுமே சிவில் சர்வீஸ் தேர்வு எழுத வேண்டும், மெக்கானிக்கல் இஞ்சினியரிங் படித்தவர்கள் அதற்கு லாயக்குப்பட மாட்டார்கள்” என்ற அறிவிப்பு ஒன்றையும் வெளியிட்டவர், “ “வேலையில்லாத இளைஞர்கள் வெற்றிலை பாக்கு கடை வைக்கலாம், அல்லது மாடு மேய்க்கலாம்” என்று இலவச அறிவுரை வழங்கினார்.
“ஆங்கிலேயர்களுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில், கடந்த 1913-ஆம் ஆண்டு ரவீந்திரநாத் தாகூர், தனது நோபல் பரிசை திருப்பிக் கொடுத்தார்” என்று ரவீந்திரநாத்துக்கே தெரியாத வரலாற்றுத் தகவலை கூறி அதிர்ச்சி அளித்தார். அதன் பின்னர் சிறிதுகாலம் இடைவேளை விட்டு காணாமல் போனார்.இந்நிலையில், செவ்வாய்க்கிழமையன்று மீண்டும் ஆராய்ச்சி மேடைக்கு வந்த அவர், “குளத்தில் வாத்துகள் நீந்துவதால் தண்ணீரிலுள்ள ஆக்ஸிஜன் அளவு அதிகரிக்கும், தண்ணீர் சுத்தமாகும்” என்று புதிய ஆராய்ச்சி முடிவை குறிப்பிட்டு விஞ்ஞானிகளை வியக்க வைத்தார்.
திரிபுராவின் ருத்ரசாகரில் நடந்த படகுப்போட்டியை தொடக்கி வைத்த நேரத்தில், இந்த கண்டுபிடிப்பை வெளியிட்ட பிப்லப் குமார் தேப் “வாத்துகள் ஏரியில் நீச்சல் அடிக்கும் போது தண்ணீரில் ஆக்ஸிஜன் அளவு அதிகரிக்கும்; தண்ணீர் மறுசுழற்சியாகும்; இதன்மூலம் மீன்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கும்; இயற்கைச் சூழலுக்கு இது மிகவும் உகந்தது” என்று நீண்ட விளக்கம் அளித்ததுடன், “ஆக்ஸிஜனை அதிகரிப்பதற்காக ஏரியின் அருகில் வசிக்கும் மீனவர்களுக்கு 50 ஆயிரம் வாத்துகளை அரசே வழங்கும்” என்றும் கூறினார்.

திரிபுரா முதல்வரின் பிப்லப் குமார் தேப்-பின் இந்த உளறல் வழக்கம்போல சிரிப்பை ஏற்படுத்தியது. மறுபுறத்தில், ஒரு மாநிலத்தின் முதல்வராக இருப்பவர், இவ்வாறு பேசுவது கண்டனத்திற்கு உரியது என்று எதிர்க்கட்சிகள் கண்டித்தன.குறிப்பாக, திரிபுரா அறிவியல் மற்றும் தொழில் நுட்ப ஆய்வு கழகத்தின் ஒருங்கிணைப்பாளர் மிஹிர் லால் ராய் கூறுகையில் “வாத்துகளை குளத்தில் விடுவதால் ஆக்ஸிஜன் அளவு அதிகரிக்கும் என்று பேசுவது தேவையற்ற பேச்சு, இது அறிவியல் பூர்வமற்றது” என்றார்.
ஆனால், இவ்வளவு பேர் கூறியபிறகும், “முதல்வரின் கருத்து நூறு சதவிகிதம் உண்மை” என்று பாஜக செய்தித் தொடர்பாளர் அசோக் சின்ஹா, முட்டுக்கொடுத்துள்ளார். “இதற்கு அறிவியல் ஆதாரங்கள் உள்ளன; மீன் வளர்ப்புக்கு வாத்துகளை பயன்படுத்துவதை இந்தியா நீண்ட காலமாகவே பின்பற்றி வருகிறது” என்று, பிப்லப் குமாரின் ‘ஏரி, குளம், வாத்து கதைக்குள் குதித்துள்ளார்.

Leave a Reply

You must be logged in to post a comment.