===சி.பி.கிருஷ்ணன்===
மக்களிடமிருந்து டெபாசிட் பெறுவதும் கடன் வழங்குவதும் தாம் ஒரு வங்கியின் அடிப்படை நடவடிக்கையாகும். ஆனால் 1938-ல் துவக்கப்பட்டு 1969-ல் தேசியமயமாக்கப்பட்ட தேனா வங்கி கடந்த மே மாதம் 9ஆம் தேதி முதல் “எந்தக் கடனும் கொடுக்கக் கூடாது; புதியதாக ஊழியர்களை பணி நியமனம் செய்யக் கூடாது” என்று ரிசர்வ் வங்கி தடை விதித்துள்ளது. இந்தத் தடையின் காரணமாக தேனா வங்கியால் நகைக் கடன், கல்விக் கடன், விவசாய கடன், முத்ரா கடன், வாகன கடன் என்று சாமானிய மக்களுக்கான எந்தக் கடனும் கொடுக்க முடியாது. இந்திய வங்கித் துறை வரலாற்றில் இத்தகைய ஒரு தடை இதுவரை எந்த வங்கி மீதும் விதிக்கப்பட்டதில்லை.

ஏன் இந்த திடீர் தடை?
ரிசர்வ் வங்கியின் “உடனடி சரி செய்யும் திட்டத்தின்” (Prompt Corrective Action)ஒரு பகுதியாக இந்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டம் 2017 ஏப்ரல் 13ஆம் தேதி தீவிரமாக்கப்பட்டது. இந்தத் திட்டத்தின் அடிப்படையில் “ஒரு வங்கி நஷ்டத்தில் இயங்க ஆரம்பித்தால் அதை 3 அளவுகோலாக பிரித்து, ஒவ்வொரு அளவுகோலுக்கும் தகுந்தவாறு அந்த வங்கி மீது நடவடிக்கை எடுக்கப்படும்” என்று கூறப்பட்டுள்ளது. இத்தகைய ஒரு திட்டத்தை உருவாக்குவதற்கு எந்த சட்ட அடிப்படையும் இல்லை. இந்தத் திட்டத்தின் அமுலாக்கத்திற்கு பிறகு, நஷ்டமடையக்கூடிய வங்கிகள் மேலும் நஷ்டமடையவே செய்கின்றன.

இதுவரை 11 பொதுத்துறை வங்கிகள் மீது இத்திட்டம் பாய்ந்துள்ளது. ஆனால், எந்தவொரு தனியார் வங்கி மீதும் இத்திட்டம் இதுவரை பாயவில்லை. ஐசிஐசிஐ மற்றும் ஆக்ஸிஸ் வங்கிகள் பற்றி ஏராளமான புகார்கள் பொதுவெளியில் வந்தவண்ணம் உள்ளன. அவை முறையாக விசாரிக்கப்படுகின்றனவா என்பதே சந்தேகத்திற்குரிய விஷயமாக உள்ளது. இவ்வங்கிகள் மீது இந்த “உடனடி சரிசெய்யும் திட்டம்”அமுல்படுத்தப்படவில்லை. மாறாக, இது பொதுத்துறை வங்கிகளை மட்டுமே குறிவைக்கின்றன என்பது ரிசர்வ் வங்கியின் பாரபட்ச போக்கை வெளிப்படுத்துகிறது.

ரிசர்வ் வங்கியின் இந்தத் திட்டத்தின் அடிப்படையில் ஒரு வங்கியை முற்றிலுமாக இழுத்து மூடவும் வாய்ப்புள்ளது. இத்தகைய ஒரு நடவடிக்கையை எந்த சட்ட அடிப்படையும் இல்லாமல் எப்படி ரிசர்வ் வங்கி மேற்கொள்ள முடியும்?

இந்த திட்டத்தில், 2வது பிரிவில் மேலும் சில பொதுத்துறை வங்கிகள் இருந்தும்கூட தேனா வங்கி மீது மட்டுமே இத்தடை விதிக்கப்பட்டுள்ளது. இது ஒரு முன்னோட்டமாகவே படுகிறது. ரிசர்வ் வங்கியின் இச்செயல் அப்படியே அனுமதிக்கப்பட்டால் மேலும் பல வங்கிகள் மீது இத்தகைய கடன் வழங்க தடை விதிக்கப்படுவதற்கான ஆபத்து உள்ளது.

டெபாசிட் பெறுவத எதற்காக?
இந்திய வங்கிகள் ஒழுங்கமைப்புச் சட்டத்தின்படி பொதுமக்களிடமிருந்து ஒரு வங்கி டெபாசிட் பெறுவதே கடன் வழங்குவதற்காகத்தான். ஆனால், தேனா வங்கி டெபாசிட் பெறுவதற்கு மட்டும் அனுமதிக்கப்படுகிறது. எனவே, இவ்வங்கி மீது கடன் கொடுப்பதற்கான தடை என்பது வங்கிகள் ஒழுங்கமைப்புச் சட்டத்திற்கு விரோதமானது. ஒரு வங்கியின் பெரும்பாலான வருவாய் கடனுக்கான வட்டியின் மூலமாகவே ஈட்டப்படுகிறது. கடன் கொடுப்பதையே நிறுத்திவிட்டால் வருவாய்க்கான முக்கிய வழி அடைக்கப்படுகிறது. அது ஒரு வங்கியின் உயிர்மூச்சையே நிறுத்துவதற்கு சமமாகும். இவ்வாறு ஒரு வங்கியை பலவீனமடையச் செய்வது என்பதன் உள் நோக்கம் என்ன?

நிதி நஷ்டம் ஏற்பட்டது எப்படி?
2017-18 நிலவரப்படி மொத்தமுள்ள 21 பொதுத்துறை வங்கிகளில் ஸ்டேட் பேங்க், பாங்க் ஆப் பரோடா, கனரா வங்கி உள்ளிட்ட 19 பொதுத்துறை வங்கிகள் நிகர நஷ்டமடைந்துள்ளன. கடந்த 3 ஆண்டுகளாக பேங்க் ஆப் இந்தியா, சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா, ஐடிபிஐ வங்கி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, அலகாபாத் வங்கி, யூகோ வங்கி, தேனா வங்கி ஆகிய 7 வங்கிகள் தொடர்ந்து நிகர நஷ்டத்தில் இயங்குகின்றன. இவ்வங்கிகள் எல்லாம் ஏன் நிகர நஷ்டமடைகின்றன?

2014-15 முதல் 2017-18 வரையிலான 4 ஆண்டுகளில் பொதுத்துறை வங்கிகள் ஈட்டிய மொத்த லாபம் ரூ.5,89,359 கோடியாகும். ஆனால், வராக் கடனுக்காக ஒதுக்கப்பட்ட தொகை ரூ.6,67,001 கோடியாகும். இதன் காரணமாக நிகர நஷ்டம் ரூ.77,642 கோடியாகும். ஆக, பெருங் கடனாளிகளின் வராக் கடனுக்காக பல லட்சம் கோடிகள் இக்காலகட்டத்தில் ஒதுக்கீடு செய்யப்பட்டதன் காரணமாகத்தான் பொதுத்துறை வங்கிகள் நஷ்டத்தில் இயங்குகின்றன.ரிசர்வ் வங்கியின் 2018 ஜூன் நிதி நிலைத்தன்மை (பைனான்சியல் ஸ்டெபிலிடி) அறிக்கையின்படி மொத்த கடனில் 54.8 சதவீதம் கடன் ரூ.5 கோடிக்கும் கூடுலாக கடன் வாங்கியவர்களுக்கே அளிக்கப்பட்டுள்ளது. இவர்கள்தான் 85.6 சதவீத வராக் கடனுக்கு பொறுப்பாளிகள். இவ்வாறு கொடுக்கப்படும் கடனும்கூட முழுமையான சொத்து அடமானத்தின் அடிப்படையில் வழங்கப்படுவதில்லை.

உதாரணமாக பெரும் கடனாளிகளுக்கு 15 முதல் 20 சதவீதம் சொத்து அடமானம் இருந்தாலே போதும் என்று ரிசர்வ் வங்கியால் வகுக்கப்பட்ட கடன் கொள்கை தெரிவிக்கிறது. மாறாக, ரூ.7.5 லட்சத்திற்கு மேல் கல்விக் கடன் பெறுபவர்களுக்கு 100 சதவீதம் சொத்து அடமானம் பெற்றுக் கொண்டே கடன் வழங்கப்படுகிறது. இந்தக் கடன் கொள்கையும், பெரு நிறுவனங்களுக்கு மிகக் கூடுதலான கடனை வழங்கும் நடைமுறையும்தான் வங்கித் துறையை கடும் நெருக்கடிக்கு உள்ளாக்கியுள்ளது.

செங்குத்தான உயர்வும் அதி பயங்கரத் தள்ளுபடியும்
இந்தக் கடன் கொள்கையின் காரணமாக 2014 மார்ச் மாதம் ரூ.2.16 லட்சம் கோடியாக இருந்த பொதுத்துறை வங்கிகளின் வராக் கடன் 2018 மார்ச் மாதம் 8.95 லட்சம் கோடியாக செங்குத்தாக உயர்ந்துள்ளது.

இப்படி உயர்ந்துள்ள வராக் கடனை வசூலிக்க மத்திய அரசு எந்தவொரு கடுமையான நடவடிக்கையையும் எடுக்கவில்லை. மாறாக, லட்சக்கணக்கான கோடி ரூபாய் நேரடியாக தள்ளுபடி செய்யப்படுகிறது. உதாரணமாக 2004-லிருந்து 2014 வரை ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் பொதுத்துறை வங்கிகள் தள்ளுபடி செய்த தொகை ரூ.1,47,000 கோடி. மாறாக, 2014 முதல் 2017 டிசம்பர் வரை பா.ஜ.க. ஆட்சியில் தள்ளுபடி செய்யப்பட்ட தொகை ரூ.2,72,000 கோடியாகும். முந்தைய 10 வருடங்களில் தள்ளுபடி செய்யப்பட்டதைப் போன்று சுமார் இரண்டு மடங்கு தொகை கடந்த மூன்றே முக்கால் ஆண்டுகளில் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. இவற்றில் சுமார் 90 சதவீதம் பெரு நிறுவனங்களின் வராக் கடன் என்பது வெளிப்படையான உண்மை.

‘ஐபிசி’சட்டம் யாருக்கு லாபம்?
வராக் கடனை வசூல் செய்ய ஏற்கனவே உள்ள சட்டங்கள் போதுமானவையல்ல என்று கொண்டு வரப்பட்டதுதான் திவால் சட்டம் என்று சொல்லக்கூடிய ‘ஐபிசி’ (Insolvency and Bankruptcy Code) சட்டம். இச்சட்டத்தின்படி பெரு நிறுவனங்களின் கடன் கறாராக உடனடியாக வசூல் செய்யப்படும் என்று மத்திய அரசால் அறிவிக்கப்பட்டது. ஆனால், அலோக் இண்டஸ்ட்ரீஸ் என்ற ஒரு கம்பெனியின் வராக் கடன் தொகை சுமார் ரூ.30,000 கோடி; இதை ஐ.பி.சி. சட்டப்படி ரூ.5,000 கோடிக்கு ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு விற்பதற்கான முயற்சி நடைபெற்று வருவதாக தெரிகிறது. இது அமுலாகுமானால் இந்த ஒரு நிறுவனத்தின் மூலமாக மட்டும் பொதுத்துறை வங்கிகள் சுமார் ரூ.25,000 கோடி நஷ்டத்தை அடைய நேரிடும். இப்படி பெரு நிறுவனங்களுக்கு பல்லாயிரம் கோடி ரூபாய் தள்ளுபடி செய்து வங்கிகளை நஷ்டப்படுத்தி பொதுமக்களின் பணத்தை சட்டப்படி சூறையாடுவதற்குத்தான் இச்சட்டம் பயன்படுகிறது.

தேனா வங்கி என்ன பாவம் செய்தது?
தேனா வங்கி 2015-16 முதல் 2017-18 வரையிலான 3 ஆண்டுகளில் ரூ.3486 கோடி மொத்த லாபம் ஈட்டியுள்ளது. ஆனால், இவ்வங்கியில் வராக் கடனுக்காக இம்மூன்றாண்டுகளில் ரூ.9462 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டதால் ரூ.3721 கோடி நிகர நஷ்டம் அடைய நேரிட்டது. மேலும், தேனா வங்கியில் 1,25,135 கடனாளிகள் செலுத்த வேண்டிய மொத்த வராக் கடன் தொகை ரூ.16,841 கோடி. இதில் ரூ.200 கோடிக்கும் மேல் வராக் கடன் வைத்துள்ள 13 பெரு நிறுவனங்கள் செலுத்த வேண்டிய தொகை மட்டும் ரூ.4,500 கோடி. இது மொத்த வராக் கடனில் 27 சதவீதமாகும். மேலும், ரூ. 5 கோடிக்கு மேல் ரூ.200 கோடி வரை கடன் வாங்கி திருப்பி செலுத்தாத 256 கடனாளிகள் செலுத்த வேண்டிய தொகை 8,676 கோடி. இது மொத்த வராக் கடனில் 51 சதவீதமாகும். ஆக இவர்களிடமிருந்து வர வேண்டிய கடனை முழுவதுமாக வசூலித்தாலே 78 சதவீத கடன் வசூலிக்கப்பட்டு விடும். இக்கடனை முழுமையாக வசூல் செய்ய முடியாததற்கு காரணம் மத்திய அரசு மற்றும் ரிசர்வ் வங்கியின் கடன் கொள்கையும், கடன் வசூல் கொள்கையும்தான்.

தேனா வங்கி உட்பட அனைத்து பொதுத்துறை வங்கிகளிலும் மத்திய அரசு மற்றும் ரிசர்வ் வங்கியின் பிரதிநிதிகள் இயக்குநர் குழுவில் இடம் பெற்றுள்ளனர். இவர்கள்தான் தங்களுடைய கொள்கை அமுலாவதை மேற்பார்வையிடுகின்றனர். எனவே, தேனா வங்கியை அதற்காக பொறுப்பாக்குவதோ, தண்டிப்பதோ ஒருபோதும் ஏற்க முடியாது. மத்திய அரசும், ரிசர்வ் வங்கியும் உடனடியாக தங்களுடைய கொள்கையை மாற்றிக் கொள்ள வேண்டும். தேனா வங்கி மீதான கடன் வழங்கும் தடையை உடனடியாக நீக்க வேண்டும்.

சாதாரண எளிய மக்களுக்கு முறையான சேவை செய்வதற்கு கூடுதலான ஆட்கள் தேவை. இன்றளவிலும் பிரிக்ஸ் நாடுகளையோ, வளர்ந்த நாடுகளையோ ஒப்பிடும்போது நமது நாட்டில் ஏராளமான வங்கிக் கிளைகள் திறப்பதற்கான தேவை உள்ளது; மிகப்பெரும்பாலான எளிய மக்களுக்கு வங்கிக் கடன் சென்றடையவில்லை. அவர்களுக்கெல்லாம் கடனை வழங்கினால் மட்டும்தான் இந்த நாட்டில் சாதாரண மக்களின் வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்படும். அதற்கெல்லாம் கூடுதலாக வங்கி ஊழியர்கள், அதிகாரிகள் தேவை. எனவே, ஊழியர்களை நியமிக்கக் கூடாது என்ற தேனா வங்கி மீதான தடையும் உடனடியாக நீக்கப்பட வேண்டும்.ரிசர்வ் வங்கியின் இந்த நடவடிக்கையை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் டி.கே.ரங்கராஜன், மத்திய நிதியமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

வங்கி சங்கங்களின் கூட்டமைப்பு சார்பாகவும் மத்திய நிதி அமைச்சரிடம் கடிதம் கொடுக்கப்பட்டுள்ளது. ரிசர்வ் வங்கியின் இந்த நடவடிக்கையை எதிர்த்த சட்ட ரீதியான நடவடிக்கையிலும் தேனா வங்கியில் உள்ள ‘பெபி’ சங்கம் ஈடுபட்டுள்ளது. தேனா வங்கி ஊழியர்கள் பல்வேறு மையங்களில் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். 2018 செப்டம்பர் 1ஆம் தேதி (நாளை) சென்னையில் முழு நாள் தர்ணா போராட்டத்தில் பங்கேற்கவுள்ளனர். இப்போராட்டங்கள் வெற்றியடைய வேண்டும். அப்போதுதான் இந்திய பொதுத்துறை வங்கிகளை காக்க முடியும். அதற்கு பொதுமக்களின் முழு ஆதரவைக் கோருகிறோம்.

கட்டுரையாளர் : பொதுச் செயலாளர், அகில இந்திய தேனா வங்கி ஊழியர் சம்மேளனம், cpkrishnan1959@gmail.com

Leave a Reply

You must be logged in to post a comment.