புனே;
பிரிட்டிஷ் துருப்புகளை எதிர்த்துப் போராடியதன் நினைவாக மகாராஷ்டிராவில் எல்கார் பரிஷத் நடத்திய பீமா கோரேகான் நினைவு நாள் விழாக்களுக்கும் மாவோயிஸ்ட்டுகளுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை; கைது செய்யப்பட்ட மனித உரிமைப் போராளிகளுக்கும் எல்கார் பரிஷத்துக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று நீதிபதி பிஜி கோல்சே பாட்டில் தெரிவித்துள்ளார்.

புனே காவல்துறையால் அராஜகமாக கைது செய்யப்பட்ட மனித உரிமைப் போராளிகளை விடுதலை செய்யக் கோரி ஓய்வுபெற்ற நீதிபதி பிஜி கோல்சே பாட்டில், கைது செய்யப்பட்ட வெர்னான் கான்சால்வஸின் மனைவி சூசன் அபிரகாம், தலித் அறிஞர் ஆனந்த் தெல்டும்ப்டே ஆகியோர் கலந்துகொண்ட பத்திரிகையாளர் கூட்டம் புனேவில் நடைபெற்றது. அப்போது பத்திரிகையாளர்களிடம் பேசிய நீதிபதி பிஜி.கோல்சே, “200 ஆண்டுகளுக்கு முன்னதாக பிரிட்டிஷ் துருப்புகளை எதிர்த்துப் போராடியதன் நினைவாக கடந்த ஆண்டு மகாராஷ்டிராவில் பீமா கோரேகான் நினைவு நாள் விழா கொண்டாடப்பட்டது.

இந்த நிகழ்வை எல்கார் பரிசாத் நடத்தியது. எல்கார் பரிஷத் அமைப்புக்கும் மாவோயிஸ்ட்டுகளுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. அவர்களிடமிருந்து பணம் பெற்றதாகக் கூறுவதெல்லாம் பொய். கைது செய்யப்பட்ட மனித உரிமைப்போராளிகளுக்கும் எல்கார் பரிஷத்திற்கும் எந்த சம்பந்தமுமில்லை. எல்கார் பரிஷத் நடத்திய விழாவிற்குப் பின்னர் நடந்த கலவரங்களுக்கு இந்துத்துவ அமைப்புகளே காரணம். அதில் சம்பந்தப்பட்டவர்கள் இன்னும் கைது செய்யப்படவில்லை” எனத் தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து பேசிய மக்கள் சிவில் உரிமைக் கழகத்தைச் சேர்ந்த மிகிர் தேசாய் போலீசார் கடிதம் ஒன்றைச் சுற்றுக்கு விட்டுள்ளனர். அதில் கைது செய்யப்பட்ட மனித உரிமைப் போராளிகளுக்கும் மாவோயிஸ்ட்டுகளுக்கும் தொடர்பிருப்பதாகக் காட்டியுள்ளனர். இது அப்பட்டமான பொய்யான ஆதாரமாகும். அதனால்தான் அதை நீதிமன்றத்தில் போலீசார் சமர்ப்பிக்கவில்லை என்று தெரிவித்தார்.

Leave a Reply

You must be logged in to post a comment.