தீக்கதிர்

பொதுச் செயலாளர் மேசையிலிருந்து…!

பணமதிப்பு நீக்கத்தால் ஒட்டுமொத்தமாக கறுப்புப்பணத்தை ஒழித்துவிடுவோம் என்று மோடியும் அவரது அமைச்சர்களும் பேசிய பேச்சு எல்லாம் என்ன ஆனது என்று தெரியவில்லை. பணமதிப்பு நீக்கம் என்ற நடவடிக்கை மோடியின் மிகப்பெரிய வெற்றி என்றால், பணமதிப்பு நீக்கத்தின் விளைவுகள் என்னென்ன என்பது பற்றிய நாடாளுமன்ற குழுவின் அறிக்கையை மக்கள் மத்தியில் வெளியிடாமல் தடுத்து நிறுத்துவதற்கு அவர் ஏன் விதவிதமான முயற்சிகளை மேற்கொண்டார் என்றும் தெரியவில்லை.

ஆனாலும் உண்மைகள் வெளிவந்துக் கொண்டேயிருக்கின்றன. பணமதிப்பு நீக்கம் அறிவித்த ஐம்பது நாட்களில் கறுப்புப்பணம் ஒழிந்து நாடே சுத்தமாகிவிடும் என்று பிரதமர் மோடியும் அவரது புகழ்பாடிகளும் கூக்குரல் எழுப்பினார்கள். அந்த சமயத்தில், எனக்கு ஐம்பது நாட்கள் கொடுங்கள்; நான் சொன்னது நடக்கவில்லையென்றால் என்னை உயிரோடு தீவைத்து கொளுத்துங்கள் என்று பிரதமர் மோடி சவால் விடுத்தார். கறுப்புப்பணத்திற்கு எதிரான போர் துவங்கிவிட்டது என்று பிரகடனம் செய்தார். அடுத்து பினாமி சொத்துக்களை குவித்து வைத்திருப்பவர்கள் குறி வைக்கப்படுவார்கள் என்றெல்லாம் முழக்கமிட்டார். அந்த முழக்கங்களையும் சவாலையும் மோடியும் அவரது புகழ்பாடிகளும் மறந்துவிட்டார்கள். ஆனால் நம்மால் மறக்க முடியவில்லையே?