===எஸ். பிரேமலதா===
நாங்கள் சென்று கொண்டிருந்த வண்டி, காலை நேரத்தின் பேரமைதியையும், பெருந்துக்கத்தையும் பூசிக்கொண்டிருந்த அந்த வீட்டின் முன் நின்றது. இந்திய வங்கி ஊழியர் சம்மேளனத்தின் கேரள மாநிலச் செயலாளர் எஸ்.எஸ்.அனில், அங்கே காத்திருந்தார். வீட்டின் உள்ளே, தானம் கொடுக்கப்பட்ட கண்களின் மேல் குறுக்காக ஒட்டப்பட்டிருந்த பிளாஸ்திரியோடு, ஒரு 12 வயது சிறுவனின் சடலமும், பக்கத்திலேயே மயங்கிப் படுத்துக் கிடந்த தாயும் என, கேரளாவில் நாங்கள் எதிர்கொண்ட முதல் காட்சியே, எங்களை நிலைகுலையச் செய்துவிட்டது.

தனது பிரியமான மூத்த குழந்தை இறப்பதற்கு முதல்நாள் வரை வெள்ள நிவாரணப் பணிகளில் தன்னை முழுவதுமாக அர்ப்பணித்துக் கிடந்த அவனது தந்தை, அந்தப் பகுதியின் பஞ்சாயத்து தலைவர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஊழியர். எங்களது நிவாரணப் பணிக்கான அனைத்துவிதமான தயாரிப்பு வேலைகளையும் முதல்நாள் வரை உடனிருந்து ஒருங்கிணைத்துத் தந்தவர். பெருமழையும் வெள்ளமும் நடத்திய கொடுந்தாக்குதலை தாங்கிக் கொண்டு எழுந்து நிற்கும் தனது மக்களைப் போன்றே, இந்த துயரத்தையும் தாங்கிக் கொண்டு அவர் நின்றிருந்த கோலம் மனதை விட்டு அகலாதது.

இந்திய வங்கி ஊழியர் சம்மேளனத்தின் தமிழ் மாநில அமைப்பு தனது உறுப்புச் சங்கங்களின் மூலம், வங்கி ஊழியர்களிடமிருந்து, வங்கிகள் மூலம் அளிக்கப்பட்ட ஒரு நாள் ஊதியத்தோடு, கூடுதலாக நிதிவசூல் செய்து கேரள மக்களுக்கு ரூபாய் 7 லட்சம் வரை நிவாரண உதவி அளித்துள்ளது. அதன் ஒரு கட்டமாக, எர்ணாகுளம் – சேந்தமங்கலம் பகுதியில் மிக மோசமான பாதிப்பிற்கு உள்ளாகி நிற்கும் 600 நெசவாளர் மற்றும் கூலித் தொழிலாளர் குடும்பங்களுக்கு அரிசி, பருப்பு, எண்ணெய் உள்ளிட்ட நிவாரணப் பொருட்கள் வழங்க, ஆகஸ்ட் 27 அன்று, சம்மேளன மாநிலப் பொதுச் செயலாளர் சி.பி.கிருஷ்ணன் தலைமையில், எட்டு தோழர்கள் அடங்கிய குழு கேரளம் சென்றது.

தூரத்தில் இருந்து பார்க்கும் போது பார்வையில் படும் சிறு கல், நெருங்க, நெருங்க பெரும் பாறையாக உருவெடுப்பதைப் போன்ற துயரக் காட்சிகள் எங்களுக்காக அங்கே காத்துக் கிடந்தன. கள நிலைமைகள், பலமடங்கு சேதத்தினை கண்முன் நிறுத்தி, பூதாகரமாய் மிரட்டுகின்றன.

நெசவுத் தொழிலாளர் குடும்பங்களின் துயரம்
கேரளாவில், கைத்தறி நெசவுத் தொழில் நடைபெறும் இடங்கள் சேந்தமங்கலம் மற்றும் பாலராமபுரம். இதில், சேந்தமங்கலத்தின் 600 கைத்தறி நெசவு மற்றும் கூலித் தொழிலாளர் குடும்பங்களும், பெரியாறு நதியில் பெருக்கெடுத்த வெள்ளத்தில் தமது உடமைகள் அனைத்தையும் பறிகொடுத்து நிற்கின்றன. அரசின் நிவாரண முகாம்களில் இருந்து சமீபத்தில் தான் வீடு திரும்பியுள்ள அந்தக் குடும்பங்கள், தமது வீடுகளையும், எஞ்சி நிற்கும் பொருட்களையும் மீட்டெடுக்கும் பணியிலேயே இன்னமும் முடங்கியுள்ளனர்.

ஒரு வீட்டில் கண்ணன் என்றால், அடுத்த வீட்டில் ஜோசப் என மாற்று மதத்தவர்கள் ஒன்றாக கலந்து வசித்துக் கொண்டிருக்கும் அந்தப் பகுதியில், ஏழை, பணக்காரன், ஜாதி, மதம் என எந்தவித பேதமுமின்றி, வெள்ளம் அனைவரையும் வீதிகளில் தூக்கியெறிந்துள்ளது.வீடு முழுவதும் அப்பிக் கிடக்கும் சேற்றின் தடங்கள்… ஒன்றுக்கும் உதவாமல் தூக்கியெறியப்பட்டு கிடக்கும் மெத்தைகள், போர்வைகள், துணிமணிகள்… காய்ந்து கிடக்கும் சேற்றை அப்பிக் கொண்டு டி.வி., மடிக்கணினி, கம்ப்யூட்டர், உறுமல் மறந்து நின்று கொண்டிருக்கும் வாகனங்கள்… இன்னும் உலராத ஈரத்தை அப்பிக் கொண்டு கிடக்கும் புத்தகங்கள்… மீட்டெடுக்க முடியாத சான்றிதழ்கள், மருத்துவ அறிக்கை உள்ளிட்ட ஆவணங்கள், அவற்றோடு அடித்துச் செல்லப்பட்ட நினைவலைகள்… என தலைகீழாக புரட்டிப் போடப்பட்டிருக்கும் உழைத்துச் சேர்த்த உடமைகள் ஒருபுறம் குவிந்து கிடக்கின்றன.

மறுபுறம், அவர்களது வாழ்வாதாரமான தறிகளும், நெசவு நூல் போன்ற மூலப் பொருட்களும் நொறுங்கியும், ஊதிப் பெருத்து, நைந்தும் குலைந்து கிடக்கின்றன. இதில் முக்கிய அம்சம், ஓணம் பண்டிகையை முன்னிட்டு, பெரும்பாலானோர் வழக்கத்தை விட அதிகமான மூலப்பொருட்களை கொள்முதல் செய்து வைத்திருந்துள்ளனர். எங்களோடு பேசிக் கொண்டிருந்த சிறுதொழில் முனைவோர் ஒருவர், ஓணம் பண்டிகைக்காக வாங்கி வைத்திருந்த 3 கோடி மதிப்பிலான மூலப்பொருட்கள், ஒட்டுமொத்தமாக வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதை வேதனையுடன் பகிர்ந்து கொண்டார்.

நெசவாளக் குடும்பங்களுக்கு ஆதரவாக அரசாங்கம் உருவாக்கி வைத்திருந்த பொதுச் சொத்துகளும் மோசமான பாதிப்பிற்குள்ளாகியுள்ளன. அந்தப் பகுதியில் இருக்கும் ஒரு அரசாங்கப் பொதுக் கிடங்கில் இருந்த ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான நெசவுப் பொருட்கள், வெள்ளத்தில் மூழ்கி உபயோகமற்றுப் போய்விட்டன.

அவர்களுக்கு கடனுதவி செய்வதில் முன்னுரிமை அளித்து, அவர்களுக்காக இயங்கி வந்த தொடக்கக் கூட்டுறவு வங்கியின் கிளை ஒன்றில், ஆவணங்களும், பதிவேடுகளும், கணினிகளும் வீதியில் கொட்டப்பட்டு, அதன் ஊழியர்கள் எதையாவது மீட்டெடுக்க முடியுமாவென போராடிக் கொண்டிருந்தனர். அங்கிருந்த பெண் ஊழியர்களின் வீடுகளும் மோசமாக பாதிப்படைந்துள்ள நிலையில், “வீட்லயும் க்ளீனிங், இங்க ஆபிஸ்லயும் க்ளீனிங், இதத் தவிர வேறெதையும் யோசிக்கவே முடியல…” என்று புலம்பிக் கொண்டிருந்தனர்.
நெசவாளக் குடும்பங்கள் நெய்த துணிமணிகளை விற்பனை செய்ய பக்கபலமாக உதவிக் கொண்டிருந்த சேந்தமங்கலம் கைத்தறி சொசைட்டியின் பல கோடி ரூபாய் சொத்துக்கள் சேதம். உள்ளே அடுக்கி வைக்கப்பட்டிருந்த துணிகளில் பல ஆயிரம் மதிப்புள்ள புடவைகள், சேற்றில் நனைந்து வண்ணமும், மதிப்பும் இழந்து தூக்கியெறியப்பட்டுக் கிடந்தன.

துணை நிற்கும் அரசு                                                                                                                                                             அதேபோன்று, ஓணம் பண்டிகையை ஒட்டி அரசு மக்களுக்கு வழங்கவிருந்த அரிசி மூட்டைகள் அரசு உதவி பெறும் பள்ளியில் பாதுகாப்பாய் அடுக்கி வைக்கப்பட்டு இருந்தன. அந்த அரிசி மூட்டைகளும் வெள்ளத்தில் வாழ்க்கையின் அனைத்து வாய்ப்புகளும் அடித்துச் செல்லப்பட்ட அந்த மக்களின் ஒரே நம்பிக்கையாக நிற்பது பினராயி விஜயன் தலைமையிலான இடதுசாரி அரசும் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அமைப்புகளின் துணையும்தான்.

உதாரணத்திற்கு, வெள்ளத்தின் போது 36,000 டிரான்ஸ்பார்மர்களின் மின்சார இணைப்புகள் துண்டிக்கப்பட்டுள்ளன. வெள்ளம் வடிந்த மூன்றே நாட்களில், மின்சாரத் துறை ஊழியர்கள் ஒவ்வொரு வீட்டிற்கும் நேரில் சென்று ஆய்வு செய்து, 32,000 டிரான்ஸ்பார்மர்களுக்கு மின் இணைப்புகள் வழங்கப்பட்டு விட்டதை, பெருமையோடு பகிர்ந்து கொள்கிறார்கள் மக்கள்.

அன்பின் நெகிழ்ச்சி   
“எங்கள் வீடுகளை எட்டு அடி, ஒன்பது அடி உயரத்திற்கான வெள்ளம் சூழ்ந்து விட்டது. டி.ஒய்.எப்.ஐ. தோழர்கள் தான், படகுகளில் வந்து எங்களை காப்பாற்றி, பத்திரமாக முகாம்களுக்கு அனுப்பி வைத்தனர்” என நன்றியுடன் நினைவு கூர்கிறார் ஒரு ஓய்வு பெற்ற ஐஏஎப் இராணுவ அதிகாரி. புற்று நோய் தாக்குதலுக்கு உள்ளான அவருக்குத் தேவையான மருந்துகளை எடுத்துக் கொள்ளவும் முடியாமல், வெள்ளத்திலிருந்து மீண்ட பிறகும் கடைகள் மூடிக் கிடந்ததால் வெளியில் வாங்கவும் முடியாமல் ஆளான சிரமத்தினை வலியோடு நினைவு கூர்ந்த அவரது மகள், வீட்டிற்கு வந்த விருந்தினரைப் போன்று வாசல் வரை வந்து எங்களை நன்றியுடன் வழியனுப்பி வைத்த நெகிழ்ச்சி திக்குமுக்காடச் செய்துவிட்டது.

அவர்களது பேரிழப்பின் முன், வீடு வீடாகச் சென்று நாங்கள் வழங்கிய பொருட்கள் சிறுதுளி தான். ஆனால் ஏழை, பணக்காரர் என எந்தவித வித்தியாசமுமின்றி அவற்றைப் பெற்றுக்கொண்ட அவர்களது கண்களில் யாசித்து நிற்கும் இரக்கப் பார்வை இல்லை. மாறாக, காலத்தால் செய்யும் சிறு உதவியினை ஞாலத்தின் மானப் பெரிதாய் வாஞ்சையோடு வரவேற்று, தழுவிக் கொண்டனர்.

நாங்கள் சென்ற இடங்களில் எல்லாம், ஏதோ ஒரு விதத்தில் அரசாங்க இயந்திரம் கூடவே பயணித்துக் கொண்டிருந்தது. பாதிக்கப்பட்ட கிடங்கினை, ஒரு புகைப்படக்காரர் சேத மதிப்பீட்டிற்காக புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்தார். கூட்டுறவு வங்கியின் தலைவர்கள், ஊழியர்களை நேரில் சந்தித்து ஆறுதலாய் பேசிக் கொண்டிருந்தனர். கேரள மாநில தொழில் மேம்பாட்டு வாரியத்தின் மாநிலத் தலைவர் டாக்டர் கிறிஸ்டி பெர்னாண்டஸ், சேந்தமங்கலம் கைத்தறி சொசைட்டி வாசலில் நின்று கொண்டு, புனரமைப்புப் பணிகள் குறித்து உரையாடிக் கொண்டிருந்தார்.

பூஜ்ஜியத்திலிருந்து துவங்க வேண்டிய இந்த மக்களின் வாழ்வாதாரத்தினை புனரமைக்கவும், புதிய கேரளாவை கட்டமைக்கவும் தான் முதலமைச்சர் பினராயி விஜயன், ஒரு மாதச் சம்பளத்தினை வழங்குமாறு தனது மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார் – அதுவும் பத்து தவணைகளில். ஏனெனில் மத்திய அரசு அளித்துள்ள ரூ. 600 கோடி நிவாரண நிதியில் இதுவரை பொதுமக்கள் வாரி வழங்கியுள்ள நிவாரண நிதியான ரூ. 700 கோடியும் சேர்த்தால்கூட ஒட்டுமொத்த சேத மதிப்பீட்டில் 10 சதவீதம் கூட ஈடு செய்ய இயலாத நிலைதான் நிலவுகிறது.

வங்கி ஊழியர்களின் அர்ப்பணிப்பு                                                                                                                                         இங்கு குறிப்பிடப்பட வேண்டிய அம்சம், கேரளாவில் வங்கி ஊழியர் சம்மேளனத்தின் முன்னணித் தோழர்கள், முதலமைச்சர் வேண்டுகோள் விடுப்பதற்கு முன்பாகவே, நிவாரணத் தொகையாக 15 நாட்கள் சம்பளம், 10 நாட்களுக்கும் மேலாக விடுப்பு எடுத்துக் கொண்டு நிவாரணப் பணிகள் என அர்ப்பணிப்புடன் தமது பங்களிப்பினை துவங்கி விட்டனர்.

நாங்கள் வழங்கிய நிவாரணப் பொருட்களை ஒட்டுமொத்தமாகக் கொள்முதல் செய்து, எடை போட்டு பிரித்தெடுத்து, எல்லாப் பொருட்களையும் தனித்தனி பைகளில் போட்டு தயார் செய்யும் பணியினையும் கேரள வங்கி ஊழியர் சங்கத் தோழர்களே பொறுப்பேற்றுக் கொண்டனர். 60 கிலோ எடையுள்ள 50 அரிசி மூட்டைகளை முதல் மாடி வரை சுமந்து சென்றது உள்ளிட்ட கடினமான வேலைகளில் தொடர்ந்து 4 நாட்கள் தம்மை அர்ப்பணித்துக் கொண்டுள்ளனர். அதிலும், கடைசி நாளன்று சுமார் 70 குடும்பங்கள் இந்தப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

விடைபெறுகையில், தோழர் அனில் பகிர்ந்து கொண்ட சம்பவத்தின் நெகிழ்ச்சி, அதுவரையில் ஆட்கொண்டிருந்த துயர மனோநிலையை முற்றிலுமாக மாற்றிவிட்டது. கோவையிலிருந்து கேரள மக்களுக்கு அனுப்பி வைக்கப்பட்ட போர்வைகளை ரயிலிலிருந்து இறக்கி சுமந்து சென்று, வெளியே வண்டிகளில் ஏற்றி வைத்த முன்பின் தெரியாத ஒரு சுமை தூக்கும் தொழிலாளி, எவ்வளவோ வலியுறுத்தியும் அதற்கான கூலியை பெற்றுக் கொள்ள மறுத்து விட்டாராம்.
“அந்த ஏழைத் தொழிலாளி தனது அன்றாடக் கூலியை, சக மக்களின் துயர்துடைக்க தியாகம் செய்யும் போது, நாம் ஏன் ஒரு மாத சம்பளத்தை தியாகம் செய்யக் கூடாது…”

இத்தகைய எளிய மக்களின் அர்ப்பணிப்பு எனும் நம்பிக்கை கீற்றைப் பற்றிக் கொண்டு கேரளம் எழுகிறது. நீளும் நமது தோழமைக் கரங்கள், அந்த மாபெரும் எழுச்சியை துரிதப்படுத்த உதவும்.

Leave A Reply

%d bloggers like this: